ரந்தாவ் பாஞ்சாங் எல்லைச் சோதனைச்சாவடி : 2025-இல் 1.8 மில்லியன் பயணிகள் பயணம் – MCBA தகவல்!

ரந்தாவ் பாஞ்சாங்:

மலேசியா மற்றும் தாய்லாந்து நாடுகளுக்கு இடையிலான முக்கிய நுழைவாயிலான ரந்தாவ் பாஞ்சாங் – சுங்கை கோலோக் எல்லைச் சோதனைச்சாவடியைப் பயன்படுத்திய பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் கணிசமாக அதிகரித்துள்ளது.

சுமார் 1.8 மில்லியன் பேர் (உள்ளே வந்தவர்கள் மற்றும் வெளியே சென்றவர்கள் சேர்த்து) இதில் மலேசியாவிற்குள் வந்தவர்கள்: 853,553 பயணிகள், மலேசியாவிலிருந்து வெளியேறியவர்கள்: 931,659 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமையின் (MCBA) ரந்தாவ் பாஞ்சாங் துணைத் தளபதி பக்ரி சுலைமான் தெரிவித்துள்ளார்.

இந்தப் பயணிகளில் மலேசியர்கள், தாய்லாந்து நாட்டவர் மற்றும் இதர வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் அடங்குவர்.

குடிநுழைவுத் துறை விதிமுறைகளைப் பூர்த்தி செய்யத் தவறிய இந்தியா மற்றும் கம்போடியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 166 வெளிநாட்டினருக்கு மலேசியாவிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.

மேலும் கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 610,000 ரிங்கிட் மதிப்பிலான கடத்தல் பொருட்கள் ரந்தாவ் பாஞ்சாங் எல்லையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சுங்கச் சட்டம் 1967, அபாயகரமான போதைப்பொருள் சட்டம் 1952, மற்றும் பணமோசடி தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்களின் கீழ் இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டன.

எல்லைப் பாதுகாப்பை உறுதி செய்யவும், சட்டவிரோதக் கடத்தல்களைத் தடுக்கவும் வரும் காலங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்று பக்ரி சுலைமான் உறுதியளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here