ஷா ஆலம்:
நில ஆக்கிரமிப்பு மற்றும் அங்கீகரிக்கப்படாத வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான விவகாரங்களில் நில உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளைச் சிலாங்கூர் மாநில அரசு முறைப்படுத்தியுள்ளது.
சிலாங்கூர் மாநில பாதுகாப்பு மன்ற (NSC) கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பின், மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி பின்வரும் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். முதலாவதாக, சட்டவிரோதமாக கோயில் அமைக்கப்பட்டிருந்தால் அதன் நில உரிமையாளர்கள் முதலில் போலீசில் புகார் அளிக்க வேண்டும். இதன் மூலம் அத்துமீறல் (Trespass) நிரூபிக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.
அதன்பின்னர் ஆக்கிரமிப்பாளர்களுக்கும், மாவட்ட நில அலுவலகத்திற்கும் முறைப்படி நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும்.
பின்னர் மாவட்ட அதிகாரி தலைமையிலான ‘மாவட்ட பாதுகாப்பு குழு’ (District Security Committee) நில உரிமையாளர், வழிபாட்டுத் தல நிர்வாகம், போலீஸ் மற்றும் உள்ளூர் அதிகாரிகளை அழைத்து சுமூகமாக தீர்வு காண முயற்சிக்கும்.
அவ்வாறு சுமூகமான தீர்வு எட்டப்படாவிட்டால், நில உரிமையாளர்கள் நீதிமன்றம் மூலம் வெளியேற்ற உத்தரவு (Court Order) பெற வேண்டும். நீதிமன்ற உத்தரவின்றி எவ்வித இடிப்பு நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது.
அரசு நிலங்களில் உள்ள அனுமதியற்ற வழிபாட்டுத் தலங்கள் தொடர்பாக, சிலாங்கூர் ஐந்து மத வழிபாட்டுத் தலங்கள் குழு (Limas) மற்றும் உள்ளூர் அதிகாரிகளுக்கான SOP-கள் மேலும் வலுப்படுத்தப்படும்.
“எந்தவொரு தரப்பினரும் சட்டத்தைக் கையில் எடுக்கக் கூடாது. நிலச் சட்டத்தின்படி நீதிமன்ற நடைமுறைகளைப் பின்பற்றியே தீர்வு காண வேண்டும். தேவையற்ற பதற்றங்களைத் தவிர்க்கவே இந்த SOP-கள் உருவாக்கப்பட்டுள்ளன,” என்று அமிருடின் ஷாரி வலியுறுத்தினார்.
ரவாங் சம்பவத்தைத் தொடர்ந்து மக்கள் கவலைப்படத் தேவையில்லை என்றும், அது சட்டப்படி கையாளப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.





















