கோலாலம்பூர் | திங்கள், 23 மார்ச் 2026 :
பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான யோ பி யின் (42), தமக்கு ஒரே மாதிரியான தோற்றம் கொண்ட (Identical twins) இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 14 அன்று, 35-வது வாரத்தில் குழந்தைகள் பிறந்தன என்றும், இந்த புதிய வரவுகளுடன் சேர்த்து, இத்தம்பதியினருக்கு தற்போது மொத்தம் ஐந்து ஆண் குழந்தைகள் உள்ளனர்.
யோ பி யின் தனது ஃபேஸ்புக் பதிவில், இந்த கர்ப்பகாலம் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மிகவும் சவாலானது என்று குறிப்பிட்டுள்ளார். தனது முந்தைய மூன்று ஆண் குழந்தைகளை சுமந்த காலத்தை விட, 42 வயதில் இரட்டையர்களை சுமப்பது கடினமாக இருந்ததாக அவர் தெரிவித்தார்.
இவரது இரட்டையர்கள் MCDA (Monochorionic Diamniotic) வகையைச் சேர்ந்தவர்கள். அதாவது, இரு குழந்தைகளும் ஒரே நஞ்சுக்கொடியைப் (Placenta) பகிர்ந்து கொண்டாலும், தனித்தனி பனிக்குடப் பைகளில் (Amniotic sacs) வளர்ந்தனர். இத்தகைய கர்ப்பகாலத்தில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்ற போதிலும், இரண்டு குழந்தைகளும் ஆரோக்கியமாகவும் எவ்வித பெரிய பாதிப்புகளும் இன்றி பிறந்ததாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
“லீப்ரோ (LeeBro) குழுவில் இன்னும் இரண்டு சிறுவர்கள் இணைந்துள்ளனர். ஐந்து ஆண் குழந்தைகளை வளர்ப்பது ஒரு சாகசமாகவும், மகிழ்ச்சியாகவும், அதே சமயம் சத்தமாகவும் இருக்கப்போகிறது. அம்மா வயிற்றுக்கு வெளியிலான இவர்களது பயணம் இப்போது அதிகாரப்பூர்வமாகத் தொடங்கிவிட்டது,” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
























