மலேசியா முழுவதும் ‘ஓப் பாந்தாவ்’ அதிரடி நடவடிக்கை; 7,000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்களிடம் சோதனை!

கோலாலம்பூர் | ஏப்ரல் 1, 2026:

மலேசியக் குடிநுழைவுத் துறை கடந்த மார்ச் 20 முதல் 29-ஆம் தேதி வரை நாடு தழுவிய அளவில் நடத்திய ‘ஓப் பாந்தாவ்’ (Op Pantau) சோதனையில், மொத்தம் 7,154 வெளிநாட்டவர்கள் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.

குடிநுழைவுத் துறை தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலின்படி, 223 அமலாக்க அதிகாரிகளைக் கொண்டு 147 இடங்களில் இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டன.

வெளிநாட்டவர்களின் சட்டப்பூர்வ நிலை, முறையான பயண ஆவணங்கள் மற்றும் குடிநுழைவுச் சட்டங்களுக்கு அவர்கள் கீழ்ப்படிகிறார்களா என்பதை உறுதி செய்வதே இச்சோதனையின் முக்கிய நோக்கமாகும்.

இந்தச் சோதனைகள் உளவுத் தகவல்கள் மற்றும் இடர் மதிப்பீடுகளின் அடிப்படையில், முறையான வழிகாட்டுதல்களின்படி (SOP) தொழில்முறைத் தரத்துடன் நடத்தப்பட்டன.

சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் அதிகப்படியாக வங்காளதேசத்தைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றுள்ளனர். அதில் வங்காளதேசம்: 3,354 பேர், மியன்மார்: 782 பேர், இந்தோனேசியா: 779 பேர்,
பாகிஸ்தான்: 514 பேர் மற்றும் நேபாளம்: 478 பேர் ஆகியோரும் மீதமுள்ளவர்கள் இந்தியா (340), தாய்லாந்து (169), பிலிப்பைன்ஸ் (157), சீனா (121) மற்றும் புருணையைச் (105) சேர்ந்தவர்களும் இதில் அடங்குவர்.

தற்போது பண்டிகைக் காலம் என்பதால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும், உள்ளூர் கலாச்சார விழுமியங்களுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் இந்தச் சோதனைகள் மிகவும் கவனமாக நடத்தப்பட்டதாகத் துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் நெரிசலைத் தவிர்க்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

குடிநுழைவுச் சட்டங்களை நிலைநாட்டவும், சட்டவிரோதக் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தவும் இத்தகைய அமலாக்க நடவடிக்கைகள் தொடர்ந்து வலுப்படுத்தப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here