கோலாலம்பூர் | ஏப்ரல் 7, 2026:
மத்திய கிழக்கில் (மேற்கு ஆசியாவில்) நீடித்து வரும் போர் பதற்றத்தால் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்படுவதையும், விலைவாசி உயர்வையும் கருத்தில் கொண்டு, சிலாங்கூர் மாநில அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே பணிபுரியும்’ (WFH) புதிய கொள்கையை மாநில அரசு அறிவித்துள்ளது.
இத்திட்டம் வரும் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்றும், அரசு ஊழியர்கள் வாரந்தோறும் செவ்வாய் முதல் வியாழன் வரை வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள் என்றும்
சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமீனுடின் ஷாரி தெரிவித்தார்.
எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்தல், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துதல் மற்றும் ஊழியர்களின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இந்த நடைமுறை ஒவ்வொரு மாதமும் ஆய்வு செய்யப்பட்டு, அதன் அவசியம் மற்றும் செயல்திறன் குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.
மேலும் முதலீடு மற்றும் சுற்றுலா மேம்பாடு தொடர்பான பயணங்களைத் தவிர, அரசுத் துறையினரின் மற்ற அனைத்து அதிகாரப்பூர்வ வெளிநாட்டுப் பயணங்களும் உடனடியாக ரத்து செய்யப்படுகின்றன.
தனியார் நிறுவனங்களும் தங்களால் இயன்றவரை இத்தகைய ‘வீட்டிலிருந்தே பணிபுரியும்’ முறையைப் பின்பற்ற வேண்டும் என மந்திரி பெசார் கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்களின் வாழ்க்கைச் செலவினங்களைக் குறைக்க 2026-ஆம் ஆண்டுக்கான மாநில வரவு செலவுத் திட்டம் (Budget) மறுஆய்வு செய்யப்படும் என்றும், இந்த இக்கட்டான சூழலைச் சமாளிக்கத் தகுந்த ஆலோசனைகளை வழங்க உயர் மட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சொன்னார்.





















