சுட்டெரிக்கும் வெயில்: அணைகளில் நீர்மட்டத்தை உயர்த்த கெடா, பெர்லிஸ், பேராக் பகுதிகளில் செயற்கை மழைக்கு ஏற்பாடு

கோலாலம்பூர் | ஏப்ரல் 7, 2026

மலேசியாவின் பல மாநிலங்களில் நிலவி வரும் கடுமையான வெப்ப அலை மற்றும் நீர் தட்டுப்பாட்டைப் போக்க, முக்கிய அணைகளின் நீர்மட்டத்தை உயர்த்தும் நோக்கில் நான்கு நாட்களுக்கு ‘மேகம் விதைத்தல்’ (OPA) நடவடிக்கையை மேற்கொள்ள அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இந்தச் செயற்கை மழைக்கான நடவடிக்கை நேற்று (திங்கட்கிழமை) தொடங்கி வரும் வியாழக்கிழமை வரை நடைபெற உள்ளது என்றும், பேராக், கெடா, பெர்லிஸ் மற்றும் ஜொகூர் ஆகிய மாநிலங்களில் உள்ள முக்கிய அணைகளை மையமாக வைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர்தர் ஜோசப் குருப் கூறினார்.

தற்போதைய வானிலை அறிக்கையின்படி, கெடாவின் கோத்தா ஸ்டார் பகுதியில் வெப்பநிலை 37°C முதல் 40°C வரை பதிவாகி வருவதால் அங்கு நிலைமை நிலை 2 (வெப்ப அலை) எச்சரிக்கை அமலில் உள்ளது.

அதேநேரம் பெர்லிஸ், கெடா, கிளாந்தான், பேராக், பகாங் மற்றும் ஜொகூர் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் 35°C முதல் 37°C வரை வெப்பநிலை பதிவாகியுள்ளதுடன் அப்பகுதியில் நிலை 1 (எச்சரிக்கை) விடுக்கப்பட்டுள்ளது.

இந்த ‘மேகம் விதைத்தல்’ திட்டமானது மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia), தேசிய பேரிடர் மேலாண்மை முகமை (Nadma) மற்றும் மலேசிய அரச விமானப்படை (RMAF) ஆகியவற்றின் ஒருங்கிணைப்புடன் செயல்படுத்தப்படுகிறது என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here