ஜெம்போல்:
நெகிரி செம்பிலான் மாநிலம், ஜெம்போல், பெல்க்ரா ஆயர் ஹித்தம் (Felcra Air Hitam) பகுதியில் உள்ள பாமாயில் தோட்டம் ஒன்றில், சட்டவிரோதமாகக் கைவிடப்பட்ட 26 பீப்பாய் இரசாயனக் கழிவுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
நேற்று காலை 11:25 மணியளவில் இது குறித்த தகவல் தீயணைப்பு மற்றும் மீட்புப் படைக்குக் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற செரி ஜெம்போல் நிலைய அதிகாரிகள், ஆரம்பக்கட்ட ஆய்வின் முடிவில் இவை அபாயகரமான இரசாயனங்கள் என்பதை உறுதி செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, சிரம்பான் 2 நிலையத்திலிருந்து வரவழைக்கப்பட்ட ‘ஹஸ்மத்’ (Hazmat – Hazardous Materials) சிறப்புப் பிரிவு அதிகாரிகள், அந்தப் பீப்பாய்களைத் திறந்து மாதிரிகளைச் சேகரித்தனர். முதற்கட்டப் பரிசோதனையில், அந்த இரசாயனம் நடுநிலையானது (pH 6) என்பது தெரியவந்துள்ளது.
கண்டெடுக்கப்பட்ட மாதிரிகள் மெலக்காவில் உள்ள இரசாயன ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன; முடிவுகள் விரைவில் தெரியவரும் என்று, நெகிரி செம்பிலான் மாநில சுற்றுச்சூழல் துறை (DOE) இயக்குனர் அப்துல் அஜிஸ் பார்மின் கூறினார்.
டியிருப்புப் பகுதிகள் மற்றும் ஆறுகளிலிருந்து தூரத்தில் இந்த இடம் அமைந்துள்ளதால், தற்போது பீப்பாய்கள் அந்த இடத்திலேயே அதிகாரிகளின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன. பின்னர், அங்கீகரிக்கப்பட்ட கழிவு மேலாண்மை நிலையத்திற்கு மாற்றப்படும்.
இந்தச் சட்டவிரோதக் கழிவு அகற்றும் செயலில் ஈடுபட்ட நபர்களைக் கண்டறியத் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ளது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது சுற்றுச்சூழல் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது மலேசியாவின் முன்னுரிமைப் பணிகளில் ஒன்றாக உள்ள நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.





















