கோலாலம்பூர்:
நாட்டில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்களைக் குறைக்கவும், எரிபொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும், தனியார் துறை நிறுவனங்கள் வீட்டிலிருந்தே பணியாற்றும் முறை உள்ளிட்ட நெகிழ்வுத்தன்மை கொண்ட பணி முறைகளைச் செயல்படுத்த வேண்டுமெனப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
சைபர்ஜெயாவில் நடைபெற்ற 30-ஆவது வரி தினக் கொண்டாட்டத்தில் துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ பாடில்லா யூசோப் ஆற்றிய பிரதமரின் உரையில், பொதுத்துறையில் அமல்படுத்தப்பட்டுள்ள இத்தகைய மாற்றங்கள் தொழிலாளர்களின் உற்பத்தித் திறனைப் பாதிப்பதில்லை என்பதோடு அவர்களின் மன உறுதியை மேம்படுத்த உதவுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
தற்போதைய பொருளாதாரச் சூழலில் முதலாளிகள் நடைமுறைக்குச் சாத்தியமான அணுகுமுறைகளைக் கையாள்வது, பணியாளர்களின் பயணச் சுமையைக் குறைப்பதோடு ஒட்டுமொத்தப் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கப் பெரும் துணையாக அமையும் என்றும் பிரதமர் தனது உரையில் கேட்டுக்கொண்டார்.





















