வறுமை ஒழிப்பு நடவடிக்கை இனம், மாநிலங்களை கடந்து தேவையடிப்படையிலேயே அமைய வேண்டும்: பிரதமர் அன்வார் அதிரடி!

கோலாலம்பூர்:

நாட்டின் வறுமை ஒழிப்பு திட்டங்கள் இனம், மதம் அல்லது மாநில எல்லைகளைப் பார்க்காமல், எங்கு தேவை அதிகமாக இருக்கிறதோ அதன் அடிப்படையிலேயே அமைய வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

வறுமை ஒழிப்பின் பின்னணியில் உள்ள ‘நீதி’ மற்றும் ‘கருணை’ ஆகியவற்றின் உண்மையான அர்த்தத்தை அனைவரும் ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இன்று நடைபெற்ற ‘கோப்ரோஜெயா’ (Koprojaya) கூட்டுறவு சங்கத்தின் 10-வது வருடாந்திர பொதுக்கூட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டின் அரசியல் விவாதங்கள் பெரும்பாலும் நீதிக்கான கேள்விகளை இனம் அல்லது புவியியல் சார்ந்ததாக மட்டுமே சுருங்கிவிடுவதாக அவர் கவலை தெரிவித்தார்.

“ஏழைகளில் பெரும்பாலானோர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தால், நாம் அங்குதான் கவனம் செலுத்த வேண்டும். மலேசியாவில் வறுமையில் வாழ்பவர்களில் பெரும்பாலோர் இன்னும் மலாய் பூமிபுத்ராக்களாக இருந்தாலும், இந்திய சமூகம் மற்றும் ஓராங் அஸ்லி (Orang Asli) பழங்குடியினரிடையேயும் கணிசமான அளவில் வறுமை நிலவுகிறது,” என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.

கூட்டுறவுத் துறையின் நிர்வாகம் குறித்துப் பேசிய பிரதமர் அன்வார், கூட்டுறவுச் சங்கங்களின் செயல்பாடு அவை எவ்வளவு சிறப்பாக நிர்வகிக்கப்படுகின்றன என்பதோடு நேரடியாகத் தொடர்புடையது என்றார். மேலும், ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் ஆகியவை தமக்கு இன்னும் முக்கிய கவலையாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அரசாங்கத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கருத்து வேறுபாடுகள் இருப்பதை ஒப்புக்கொண்ட அவர், இந்தத் தவறுகளைத் திருத்தாமல் எவ்வளவு பெரிய தொகையை உருவாக்கினாலும், அது பொதுமக்களுக்குப் போய்ச் சேராது என்று எச்சரித்தார்.

“முறையான நிர்வாகம் இல்லையெனில், பணம் ஒரு சிறிய குழுவிற்கே சென்றடையும். அதனால்தான் நல்லாட்சி (Governance) மிகவும் முக்கியம் என்று நான் கூறுகிறேன்,” என்றார்.

இறுதியாக, நாட்டின் மிகச்சிறந்த முறையில் நிர்வகிக்கப்படும் கூட்டுறவுச் சங்கங்களில் ஒன்றாகத் திகழும் ‘கோப்ரோஜெயா’ கூட்டுறவுச் சங்கத்திற்குத் தனது பாராட்டுகளையும் பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here