ஜோகூர் பாரு:
தேர்தல் வாக்குச்சாவடிகளுக்கு வாக்காளர்கள் அரைக்காற்சட்டை (Shorts) அணிந்து வருவதற்கு எவ்வித அதிகாரப்பூர்வத் தடையும் இல்லை என்று தேர்தல் ஆணையம் (EC) மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது. ஜோகூர், ஸ்குடாய் பகுதியில் வாக்காளர் ஒருவர் தடுத்து நிறுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்துத் தேர்தல் ஆணையத்தின் துணைத் தலைவர் அஸ்மி ஷாரோம் கூறுகையில், அரசியல் கட்சிகளின் சின்னங்கள் அல்லது வேட்பாளர்களின் புகைப்படங்கள் அச்சிடப்பட்ட ஆடைகளைத் தவிர, வாக்காளர்கள் வேறு எந்த ஆடைகளையும் அணிந்து வரத் தடையில்லை என்று ‘மலேசியாகினி’ ஊடகத்திடம் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஜோகூர் மாநிலத் தேர்தலின் போது, ஸ்கூடாய் (Skudai) சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தாமான் துன் அமீனா இடைநிலைப்பள்ளியில் (SMK Taman Tun Aminah) மஞ்சள் நிற டி-சர்ட் மற்றும் முழங்காலுக்கு மேல் இருக்கும் காக்கி நிற அரைக்காற்சட்டை அணிந்து வந்த வாக்காளர் ஒருவர், அப்பள்ளியின் வாசலில் தடுத்து நிறுத்தப்பட்டதாக முகநூலில் (Facebook) புகைப்படங்கள் வெளியாகிப் பரவின.
அங்குள்ள பள்ளியின் நுழைவாயிலில், பள்ளிக்கு வரும் பார்வையாளர்களுக்காக வைக்கப்பட்டிருந்த ‘ஆடை ஒழுங்குமுறை’ பலகையை அடிப்படையாகக் கொண்டு, அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரி அந்த வாக்காளரைத் தடுத்து நிறுத்தியதாகத் தெரிகிறது.
பள்ளிகளைத் தவிர்த்துப் பொதுமண்டபங்களிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் வேளையில், வாக்களிக்க வரும் பொதுமக்களுக்கு இத்தகைய ஆடை கட்டுப்பாடுகள் எதுவும் கிடையாது என்பதால், வாக்காளர்கள் எவ்விதத் தயக்கமுமின்றி வந்து வாக்களிக்கலாம் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.



















