கோகி கருணாநிதி
ஜோகூர் பாரு:
ஜோகூர் மாநில அரசின் ஜோகூர் முன்னோடி பள்ளித் திட்டம் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், கல்வித் தர உயர்வு, அறிவியல், தொழில்நுட்பக் கல்வி, ஆங்கில மொழிப் புலமை, மாணவர்களின் ஆளுமை வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மாநில கல்வி, தகவல் ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் முகம்மது நகீப் முகமட் கசாலி தெரிவித்துள்ளார்.
ஜோகூர் இடைக்கால சுல்தான் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிமின் தொலைநோக்குப் பார்வையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தத் திட்டம், ஜோகூர் மாநிலத்தின் கல்வி அமைப்பை உலகத் தரத்திற்கு உயர்த்துவதை இலக்காகக் கொண்டுள்ளது. தற்போது தாசேக் உத்தாரா தேசியப் பள்ளி, ஸ்ரீ கோத்தா புத்ரி 4 தேசியப் பள்ளி, தாசேக் உத்தாரா தேசிய இடைநிலைப் பள்ளி, ஸ்ரீ கோத்தா புத்ரி 2 தேசிய இடைநிலைப் பள்ளி ஆகிய நான்கு கல்வி நிலையங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆங்கில மொழிப் புலமை, அறிவியல், தொழில் நுட்பம், பொறியியல், கணிதம் (ஸ்டெம்) மாணவர்களின் நற்பண்பு வளர்ச்சி, வேலைவாய்ப்புத் தகுதி, திறனடிப்படையிலான மதிப்பீடு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. 2031-ஆம் ஆண்டுக்குள் இப்பள்ளிகளை மலேசியாவின் சிறந்த 20 அரசுப் பள்ளிகளின் வரிசையில் கொண்டு வருவதே மாநில அரசின் இலக்காகும்.
2025-ஆம் ஆண்டுக்கான மலேசியக் கல்விச் சான்றிதழ் (எஸ்.பி.எம்) பொதுத்தேர்வில், இந்தத் திட்டத்தின் கீழ் செயல்படும் இரு இடைநிலைப் பள்ளிகளும் நூறு விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளன. மேலும், 2024, 2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் உயர்கல்விக்குத் தொடர்ந்திருப்பது கல்வித் திட்டத்தின் வெற்றியை வெளிப்படுத்துவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
அதேவேளை, 5A, அதற்கு மேற்பட்ட தரங்களைப் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. தேசிய, சர்வதேச அளவில் நடைபெற்ற அறிவியல், புதுமை, வடிவமைப்பு போட்டிகளில் மாணவர்கள் பல்வேறு விருதுகளை வென்றுள்ளனர். குறிப்பாக, SAFEATHON 2026 போட்டியில் தங்கப் பதக்கமும், ஜப்பான் இளைஞர் உச்சி மாநாடு 2026-இல் சிறந்த புதுமை யோசனை விருதும் ஜோகூர் மாணவர்களுக்குக் கிடைத்துள்ளது.
மேலும், அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்படுத்தப்படும் அறிவியல் ஊக்கத் தலைமைத்துவம் பயிற்சித் திட்டம் மூலம் 100 மாணவர்களுக்குத் தலைமைத்துவம், விமர்சனச் சிந்தனை, புதுமை, பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன் ஆகியவற்றில் உலகத் தரத்திலான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் அடுத்த கட்டமாக, அறிவியல், தொழில் நுட்பம், பொறியியல், கணிதம் (ஸ்டெம்) கல்வியை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முப்பரிமாண அச்சுப்பொறி (3D Printer), ஆர்டுவினோ கருவிகள், தானியங்கி இயந்திரவியல் (Robotics), தன்னியக்க அமைப்புகள் உள்ளிட்ட நவீன கற்றல் உபகரணங்கள் பள்ளிகளுக்கு வழங்கப்படவுள்ளன. அதேவேளை, இருமொழிக் கல்வித் திட்டம் (Dual Language Programme – DLP) மூலம் ஆங்கிலம், அறிவியல், கணிதப் பாடங்களில் மாணவர்களின் திறன் மேலும் மேம்படுத்தப்படும் என்றும் மாநில அரசு தெரிவித்துள்ளது.
வரும் ஐந்து ஆண்டுகளில் ஜோகூர் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த முன்னோடி பள்ளித் திட்டம் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்றும், அறிவு, நற்பண்பு, திறன், உலகளாவிய போட்டித்திறன் கொண்ட புதிய தலைமுறையை உருவாக்குவதில் மாநில அரசு உறுதியாகச் செயல்படும் என்றும் டாக்டர் முகம்மது நகீப் தெரிவித்தார். மேலும், இந்த இலக்கை அடைய ஆசிரியர்கள், பெற்றோர், சமூக அமைப்புகள், கல்வித் துறை, அனைத்து தரப்பினரின் தொடர்ச்சியான ஒத்துழைப்பும் அவசியம் என அவர் வலியுறுத்தினார்.





















