சட்டவிரோத குப்பைத் தளம் அதிரடி மூடல்- டத்தோ ஜஃப்னி

(கோகி கருணாநிதி)

ஜோகூர் பாரு:

குடியிருப்புப் பகுதிகளை சூழ்ந்த புகை, துர்நாற்றம் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து தொடர்ந்து புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, கம்போங் மாஜு ஜெயாவில் 3.64 ஹெக்டர் தனியார் நிலத்தில் செயல்பட்டு வந்த சட்டவிரோத குப்பைக் கொட்டும் தளத்தை உடனடியாக மூட ஜோகூர் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜாலான் கெம்பாஸ் லாமா–சீலோங் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த திடீர் சோதனையில், ஈரக்கழிவுகள், கட்டுமானக் கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு திடக்கழிவுகள் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. குறிப்பாக இரவு நேரங்களில் கழிவுகளை திறந்தவெளியில் எரிப்பதால் வெளியான புகை அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளுக்குப் பரவியதாக பொதுமக்கள் புகார் தெரிவித்திருந்தனர்.

ஜாலான் சீலோங் சுற்றுவட்டாரத்தில் குடியிருப்புகள் அதிகரித்து வருவதால், மக்களின் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் நலன் கருதி உடனடி நடவடிக்கை அவசியமானதாக இருந்தது என ஜோகூர் வீடமைப்பு, ஊராட்சித் துறை ஆட்சிக்குழுத் டத்தோ முகமட் ஜஃப்னி முகமட் ஷுக்கோர் தெரிவித்தார்.

சோதனையில் அந்தத் தளத்தை நடத்தி வந்த தரப்பிடம் ஜோகூர் பாரு மாநகர் மன்றத்தின் வணிக உரிமமோ, எஸ்.டபிள்யூ.கார்ப் செயல்பாட்டு அனுமதியோ இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து 2007ஆம் ஆண்டு திடக்கழிவு, பொது தூய்மை மேலாண்மைச் சட்டத்தின் பிரிவு 75-இன் கீழ் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10,000 ரிங்கிட் முதல் 100,000 ரிங்கிட் வரை அபராதம், சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

விவசாயப் பயன்பாட்டுக்காக வகைப்படுத்தப்பட்ட அந்த நிலம் சுமார் ஐந்து ஆண்டுகளாக வாடகைக்கு விடப்பட்டிருந்ததும், சிங்கப்பூர் பிரஜை என நம்பப்படும் அதன் உரிமையாளர் மூன்று ஆண்டுகளாக நில வரியைச் செலுத்தவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. நில உரிமையாளருக்கும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் தொடர்பு உள்ளதா என்பதும் விசாரிக்கப்படும்.

மேலும், அந்த இடத்தில் 300-க்கும் மேற்பட்ட கோழிகள் வளர்க்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு அவற்றைப் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஆகஸ்ட் 9ஆம் தேதி அங்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் நான்கு ஆடவர்கள் கைது செய்யப்பட்டதாக ஜோகூர் பாரு வடக்கு மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் ராடின் ரம்லான் ராடின் தாஹா தெரிவித்தார். முறையான அனுமதிப் பத்திரங்கள் இல்லாத மூன்று வங்காளதேச ஆடவர்கள் 14 நாட்களும், உள்ளூர் ஆடவர் ஒருவர் நான்கு நாட்களும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஜோகூரில் உரிமமின்றி செயல்படுவது, நிலத்தை தவறாகப் பயன்படுத்துவது போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு மாநில அரசு எவ்வித சமரசமும் காட்டாது என முகமட் ஜஃப்னி எச்சரித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here