ஈப்போ:
பேராக், பாகான் செராயில் உள்ள ‘தாமான் செராய் மாஜு’ பகுதியில் இன்று அதிகாலை வீடு ஒன்றில் ஏற்பட்ட கொடூரத் தீ விபத்தில், மியன்மார் நாட்டைச் சேர்ந்த அகதி மற்றும் அவரது இரு மகன்கள் தீயில் கருகி உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் முகமட் யூனுஸ் நூர் அலி (27), மற்றும் அவரது மகன்களான முஹமட் வஹீட் (6), முஹமட் அகீத் (3) எனப் பேராக் மாநிலத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM) இயக்குநர் டத்தோ சாயானி சைடான் உறுதிப்படுத்தியுள்ளார்.
இச்சம்பவத்தில் காயமடைந்த முகமட் யூனுஸின் மனைவி சனியா ஜஹான் ஜுமா அபுல் காசிம் (24) என்பவருக்குக் கை மற்றும் கால்களில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன.
இன்று அதிகாலை 5.17 மணிக்கு MERS 999 அவசர உதவி எண் மூலம் பெறப்பட்ட அழைப்பைத் தொடர்ந்து, தீயணைப்புக் படையினர் 13 நிமிடங்களில் (அதிகாலை 5.30 மணிக்கு) சம்பவ இடத்தைச் சென்றடைந்தனர்.
அங்கு 7 வெளிநாட்டவர்கள் வசித்து வந்த 20×40 சதுர அடி கொண்ட வீட்டின் 70 சதவீதப் பகுதி தீயில் எரிந்து சேதமடைந்தது.
வீட்டின் வெளியே தீக்காயங்களுடன் இருந்த மனைவி அளித்த தகவலின் பேரில், உள்ளே சிக்கியிருந்தவர்களை மீட்கும் நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்பட்டது.
வீட்டின் முதல் அறையில் மூவரின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டன. அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாகச் சுகாதார அமைச்சின் (MOH) மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
காயமடைந்த பெண் EMRS அவசரச் சிகிச்சை வாகனம் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். உயிரிழந்த மூவரின் உடல்களும் மேலதிக நடவடிக்கைகளுக்காக மலேசியக் காவல்துறையிடம் (PDRM) ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அதிகாலை 6.20 மணிக்குத் தீ முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், காலை 7.35 மணிக்கு மீட்புப் பணிகள் நிறைவடைந்தன. முதற்கட்ட விசாரணையில் தீ விபத்து முதலாவது அறையிலேயே தொடங்கியுள்ளது தெரியவந்துள்ளது. விபத்தின் துல்லியமான காரணம் மற்றும் சேத மதிப்பீடு குறித்துத் தீயணைப்புத் துறையின் தடயவியல் குழு தீவிர விசாரணை நடத்தி வருகிறது.























