மொரிசியஸ் முன்னாள் பிரதமருக்கு பிணை

ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மொரிசியஸ் நாட்டின் முன்னாள் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் தற்போது பிணையில் வெளிவந்துள்ளார்.

அதை அந்நாட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றிய குற்றச்சாட்டில் ஜக்நாத் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 16) கைது செய்யப்பட்டார். ஜக்நாத்தின் கைதுக்கு முன்பு அவரது வீடு, அலுவலகம் உள்ளிட்ட பல இடங்களில் மொரிசியஸ் ஊழல் எதிர்ப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

சோதனையில் 2.5 மில்லியன் வெள்ளியை (மொரிசியஸ் ரூபாய் 114 மில்லியன்) அதிகாரிகள் கைப்பற்றினர். கைது நடவடிக்கையை தொடர்ந்து ஜக்நாத் பிணை கேட்டு நீதிமன்றத்தில் முறையிட்டார்.

“ஜக்நாத் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ விசாரணைக்கு தொடர்புடைய சாட்சிகளை தொடர்புகொள்ள மாட்டார்,” என்று மனுவை விசாரித்த நீதிமன்றம் தெரிவித்தது.

மேலும், ஜக்நாத் விசாரணை குறித்து யாரிடமும் தகவல் வெளியிடக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணை தொடர்பாக அவர் நீதிமன்றம் மற்றும் விசாரணை அதிகாரிகளிடம் மட்டுமே பேச வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

திங்கட்கிழமை (பிப்ரவரி 17) ஜக்நாத் பிணை தொடர்பான வேலைகளை முடிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்நிலையில், ஜக்நாத் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அவரது வழக்கறிஞர் ராஃப் குல்புல் மறுத்துள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் மொரிசியஸ் பிரதமராக பொறுப்பேற்ற நவீன் ராம் குலம், பொது நிதியில் சில தவறுகள் இருப்பதாக கூறி விசாரணைக்கு உத்தரவிட்டார். இது தொடர்பாக கடந்த மாதம் மொரிசியசின் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் அவர் பிணையில் வெளி வந்தார். மோசடிக்கு உதவியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here