ஸாகிருக்கும் குடும்பத்திற்கும் பிஆர் மர்மமுடிச்சுகள் அவிழ்க்கப்படுமா ?

சர்சசைக்குரிய சமயப் போதகர் ஸாகிர் நாய்க் மலேசியாவின் நிரந்தரக் குடிவாசி(பிஆர்) அந்தஸ்து பெற்றது எப்படி?

அவரின் மனைவி, மக்களுக்கும் இதே அந்தஸ்து தரப்பட்டிருக்கிறது. அது எப்படி?
இவர்களுக்கு என்ன – எந்தத் தகுதி அடிப்படையில் பிஆர் அந்தஸ்து தரப்பட்டிருக்கிறது?

இதற்கு அவர்கள் தகுதி பெற்றவர்களா?பல உலக நாடுகளில் இவர் புரிந்திருக்கும் அழிசட்டியங்கள், அந்நாடுகளில் இவர் நுழைவதற்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை உத்தரவுகள் பற்றி மலேசியாவின் முன்னாள் தேசிய முன்னணி அரசங்கத்திற்கும் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் அப்துல் ரசாக்கிற்கும் முன்னாள் துணைப் பிரதமரும் முன்னாள் உள்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் அமாட் ஸாஹிட் ஹமிடிக்கும் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அமைச்சர்களுக்கும் தெரியாமல் போனதா? அல்லது தெரிந்தும் தெரியாததுபோல் கண்களை மூடிக் கொண்டார்களா?

பிஆர் கொடுக்கப்படும் அளவுக்கு இவர்களிடம் அப்படி என்னதான் சிறப்புத் தகுதிகள், திறன்கள் கொட்டிக் கிடந்திருக்கின்றன.

பிஆர் அந்தஸ்து வைத்திருப்போர் இந்நாட்டில் சமயப் பிரச்சாரம் செய்யலாமா? வேலை பார்க்கலாமா?
குருவி மூளையை வைத்துக் கொண்டு போகும் இடமெல்லாம் இந்துக்களையும் கிறிஸ்துவர்களையும் இதர இனத்தவர்களையும் இழிவுபடுத்திப் பேசுவதுதான் ஸாகிரின் பிழைப்பாக இருந்துள்ளது. இருந்தும் வருகிறது.

இவர் மட்டுமல்ல, இவரின் மனைவி, மகனும்கூட இங்கு பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றனர். என்னடா கொடுமை இது?

இதுவரையில் இவர் புரிந்திருக்கும் மிகப்பெரிய சாதனை சில நாடுகளில் வெடிகுண்டுகள் வெடித்து மனித உடல்கள் சிதறிப்போனதுதான்!

ஸாகிரின் இனவாதப் பேச்சுல் ரத்தம் சுடேறிப் போனவர்கள் இதயங்களைக் கழற்றி வைத்து விட்டு சிதறிய மனித உடல்களில் இருந்து வழிந்தோடிய குருதியைப் பார்த்து ரசித்தனர்.

டாக்காவிலும் இலங்கை தேவாலயங்களில் ஈஸ்டர் தினத்தன்றும் நிகழ்ந்த குண்டு வெடிப்புகளில்

சம்பந்தப்பட்டவர்கள் ஸாகிரின் மாணவர்கள் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

இவ்வளவு கொடூரமான விஷத்தை விதைக்கக்கூடிய மிகவும் ஆபத்தான ஓர் ஆசாமிக்குத்தான் தேசிய முன்னணி அரசங்கம் பிஆர் கொடுத்திருக்கிறது.

மலேசிய மண்ணில் பிறந்து, நாட்டிற்காகவே உழைத்தவர்களின் குடியுரிமை விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதற்கு உள்துறை அமைச்சு வழக்கமாக பல ஆண்டுகளை எடுத்துக் கொள்ளும். திடீரென ஒரு நாள் பதில் வரும், விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதாக!

மலேசியப் பிரஜைகள் அந்நிய நாட்டுப் பெண்களை அல்லது ஆண்களை மணம் புரிந்து பிஆர் பெறுவதற்கோ அல்லது குடியுரிமை பெறுவதற்கோ விண்ணப்பம் செய்து விட்டு பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

அக்காலகட்டத்தில் அவர்களுக்குக் குழந்தைகள் பிறந்தால் நாடற்றவர்களாக பதிவு செய்திடுவர். அவர்களுக்கும் சேர்த்து அவர்கள் போராடி களைத்துப்போவார்கள்.

ஆனால், ஒரே இரவில் ஸாகிருக்கும் அவரின் குடும்பத்தாருக்கும் பிஆர் கொடுக்கப்பட்ட தன் மர்மம்தான் என்ன? அவசியம்தான் என்ன?

இத்தனைக்கும் ஸாகிரின் பூர்வீக நாடான இந்தியாவால் தேடப்படும் ஒரு பயங்கரவாதி என்பது தெரிந்திருந்தும் ஸாகிருக்கும் அவரின் குடும்பத்தாருக்கும் அன்றைய தேசிய முன்னணி அரசங்கம் கொஞ்சமும் யோசிக்காமல் பிஆர் கொடுத்திருக்கிறது என்றால் அதன் பின்னணியில் ஒரு மர்மம் இருப்பதாகவே நினைக்கத்தோன்றுகிறது.

அக்காலகட்டத்தில் ஸாகிரின் அலம்பல்களை நஜிப்கண்டு கொள்ளவும் இல்லை – கண்டிக்கவும் இல்லை. இதில் குளிர்காய்ந்த ஸாகிர் தனது விருப்பம்போல் மற்ற சமயத்தவர்களின் நம்பிக்கைகளையும் அவர்கள் சார்ந்த
சமயங்களையும் (இந்து சமயம் – கிறிஸ்துவம்) பந்தாடினார்.
எத்தனையோ எதிர்ப்புகள், கண்டனங்கள் எழுப்பப்பட்டும் எல்லாமே அடங்கிப் போயின. போலீஸ் புகார்கள் வெற்றுக் காகிதங்களாகவே மாறிப் போயின.

மலேசியர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டிய போலீஸ் காரர்கள் ஸாகிருக்கு சேவகம் செய்தனர். இதனால் குளிர்விட்டுப் போன ஸாகிருக்கு ஒரே கொண்டாட்டம். பிஆர் என்பதை மறந்தே போனார். போலீஸ் சைரன்களுக்கு மத்தியில் ஒரு குறுநில மன்னர்போல் ஸாகிர் ஊர்வலம் வந்தார்.

இந்திய சமுதாயத்திற்கு வாரிக்கொடுத்த வள்ளல் நஜிப் என்பது உண்மைதான். மறுப்பதற்கில்லை. ஆனால், ஸாகிர் விஷயத்தில் அவரின் இருகாதுகளும் செவிடாகிப் போனதன் விளைவாக இந்நாட்டு இந்துக்கள் ஸாகிரிடம் தொடர்ந்து அவமானப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

1959 / 63 குடிநுழைவுத்துறை சட்டத்தின் கீழ் ஸாகிரின் பிஆர் அந்தஸ்து ரத்து செய்யப்படலாம் என்று வழக்கறிஞர் ஷாரெட்ஸான் ஜோகான் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

மலாய்க்காரர் அல்லாதாருக்கு எதிரான ஸாகிரின் தீ மூட்டும் பேச்சு பொது ஒழுங்கிற்குக் கேடானது. இது ஒன்றே அவரின் பிஆர் அந்தஸ்தைப் பறிப்பதற்குப் போதுமானது என்பதும் அவரின் வாதமாக உள்ளது.

உடனடியாக ஸாகிர் மற்றும் அவரின் மனைவி மக்களின் பிஆர் அந்தஸ்தை ரத்து செய்து இந்தியாவுக்கு அனுப்புவது தான் மலேசியாவுக்கும் அதன் மக்களுக்கும் நல்லது. விவேகமான முடிவாகவும் இருக்கும்.
தேசிய முன்னணி ஆட்சியில் 2015இல் ஸாகிருக்கு பிஆர் கொடுக்கப்பட்டிருக்கிறது. 2017இல் சவூதி அரேபியா ஸாகிரை அந்நாட்டின் பிரஜையாக்கியிருக்கிறது.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு ஸாகிரும் அவரின் குடும்பத்தாரும் சவூதி அரேபியாவில் குடியேறி விடலாமே! ஏன் இன்னும் தயக்கம்?

2016இல் இருந்து ஸாகிர் இந்திய அரசங்கத்தின் கண்களில் மண்ணைத் தூவி வருகிறார்.

இந்த ஆசாமிக்காக மலேசியர்கள் நாம் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்ள வேண்டுமா என்று முன்னாள் அமைச்சர், இரும்புப் பெண்மணி டான்ஸ்ரீ ரஃபீடா அஸிஸ் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

ஒரு நாச சக்தியைப் பற்றி சிந்தித்து நாம் ஏன் நமது நேரத்தையும் பலத்தையும் விரயமாக்க வேண்டும்?
சமயத்தை வைத்து பிழைப்பு நடத்தும் இந்த ஆசாமி பற்றி நாம் நினைக்கவே வேண்டாம். இப்படிச் சிந்தித்து, பேசி அவரைப் பெரிய மனிதனாக, பலம் பொருந்தியவராக காட்ட வேண்டாம். நாம் மலேசியர்களாகவே வாழ்வோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here