மாணவர்களுக்கான கல்வித் தொலைக்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

சென்னை

கலை, பண்பாடு, பாடம் சார்ந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் விதமாக மாணவர்களுக்கான கல்வித் தொலைக்காட்சியை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

நாட்டிலேயே முதல் முறையாக பள்ளிக் கல்வித் துறைக்கென தனியான தொலைக்காட்சி சேனல் தொடங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் கடந்த ஆண்டு தெரிவித்திருந்தார். இதையடுத்து படப்பிடிப்பு கருவிகள் கொள்முதல் செய்தல், நிகழ்ச்சிகளை உருவாக்குதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வந்தன. கல்வித் தொலைக்காட்சிக்கான படப்பிடிப்புத்தளம் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் 8வது தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கல்வித் தொலைக்காட்சிக்கான பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து கடந்த சில வாரங்களாக சோதனை ஓட்டம் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கல்வித் தொலைக்காட்சியின் ஒளிபரப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை தொடங்கி வைத்தார். துணை முதலமைச்சர் ஓ. பன்னிர் செல்வம், அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றினர். ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ மாணவிகளின் திறமைகளை வெளிப்படுத்தச் செய்யும் நிகழ்ச்சிகளுக்கு இதில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

இதை தொடர்ந்து யோகா, உடற்பயிற்சி, பள்ளிகளின் செயல்பாடு, ஆங்கிலப் பயிற்சி, கணித பயிற்சி ஆகியவற்றுடன் நீட் போன்ற போட்டித் தேர்வுகளுக்கான ஆலோசனை, இணையதளம் குறித்த தகவல்கள் ஆகியவை இந்த சேனலில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் சிலவாகும். கல்வித் தொலைக்காட்சிகளில் மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மாணவர்கள், ஆசிரியர்களுக்கான இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் மறு ஒளிபரப்பு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வித் தொலைக்காட்சியின் தொடக்கவிழா நிகழ்ச்சி இன்று மாலை 3 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இதனை தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் 53 ஆயிரம் பள்ளிகளில் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சர் உரை

பின்னர் விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி, கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். இதன் காரணமாக மாணவர்களுடைய சேர்ப்பு விகிதம் அதிகரித்து இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்வதாகவும் முதல்வர் பெருமிதத்துடன் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், கடந்த 8 ஆண்டுகளில் 247 புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன என்றும், ஆசிரியர்களுக்கு 29,891 மடிக்கணினிகள் வழங்க ரூ.37.81 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் முதல்வர் குறிப்பிட்டார். கல்வி நிகழ்ச்சிகளைத் தயாரிக்க பிரத்தியோகமாக புதிய அமைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அரசு கேபிளில் 200வது அலைவரிசையில் கல்வித் தொலைக்காட்சி சேனல் ஒளிபரப்பப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து அரசின் கல்வித் தொலைக்காட்சியில் 24 மணிநேரமும் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here