கொரோனா தாக்கிய பயணிகள் தடுமாறிய கப்பல் கியூபா அரசு காட்டிய மனித நேயம்

எம் எஸ் பிரிமர் கப்பல்

உலக மக்களின் உயிரை கொரோனா பறித்துக்கொண்டிருக்கிறது. சொந்த நாட்டு மக்களைக் கூட கொரோனா தாக்கியிருந்தால், அழைத்து வர உலக நாடுகள் தயக்கம் காட்டுகின்றன.

                பிடல் காஸ்ட்ரோ

ஆனால்,கியூபா என்ற நாடு மட்டும் கொரோனா தாக்கிய மக்களைக் கருணையுடன் அணுகி, அரவணைத்துக் கொண்டுள்ளது. ஃபிடல் காஸ்ட்ரோ என்ற மாமனிதன் ஆட்சி செய்த தேசமான கியூபாவில் இதுவரை 4 பேரை மட்டுமே கொரோனா தொற்று தாக்கியுள்ளது.

இதற்கிடையே பிரிட்டனைச் சேர்ந்த எம்.எஸ்.பிரிமர் என்ற கப்பல் 682 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 381 சிப்பந்திகளுடன் கரீபியன் கடலில் சென்றுகொண்டிருந்தது. அப்போது, கப்பலில் இருந்த 5 பேருக்குக் கொரோனா தொற்று தாக்கியிருப்பது தெரிய வந்தது.

இதனால் கப்பலை நிறுத்த பல கரீபியன் நாடுகளிடம் கப்பல் நிர்வாகத்தின் சார்பில் அனுமதி கேட்கப்பட்டது. எந்த நாடும் அனுமதி அளிக்கவில்லை.
இந்த நிலையில், கியூபா நாடு பிரிமர் கப்பலை தங்கள் நாட்டில் நிறுத்த அனுமதி அளித்துள்ளது.

                                                                                   எம் எஸ் பிரிமர் பயணிகள்

தொடர்ந்து கியூபாவின் கட்டுப்பாட்டில் உள்ள பஹமாஸ் தீவு துறைமுகத்தில் கப்பல் நங்கூரமிட்டது. கப்பலில் இருந்த சுற்றுலாப்பயணிகள் சோதனைக்குப் பிறகு கியூபாவுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்தக் கப்பலில் இருந்தவர்களில் பெரும்பாலோனோர் பிரிட்டனைச் சேர்ந்தவர்கள்.
கியூபாவிடத்தில் பிரிட்டன் அரசு கேட்டுக்கொண்டதையடுத்து மனிதநேயத்தின் அடிப்படையில் கியூபா இந்த உதவியைச் செய்துள்ளது.

‘கப்பலில் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டும் உலகுக்கு விடுக்கப்பட்டுள்ள பொதுவான சவலை எதிர்கொள்ள உலக நாடுகள் ஒற்றுமையுடன் இருப்பது அவசியம் என்ற அடிப்படையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என கியூபாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

கப்பலில் பயணித்தவர்களில் கொரோனா பாதிப்பு இல்லாதவர்கள், மீண்டும் பிரிட்டனுக்கு விமானம் வழியாக அனுப்பப்படுவார்கள். நோய் தாக்கியவர்களுக்கு கியூபாவில் வைத்தே சிகிச்சையளிக்கப்படுகிறது.

கியூபாவில் மக்கள் கொத்து, கொத்தாக இறந்த நேரம்

உலக நாடுகளே! எங்கள் மக்களின் சாவைத் தடுத்து நிறுத்துங்கள்! மாத்திரை, மருந்துகள் தாருங்கள்; உங்கள் மருத்துவர்களை அனுப்பி உதவி செய்யுங்கள் எனப் பிடல் காஸ்ட்ரோ கெஞ்சினார்!

அமெரிக்காவுக்குப் பயந்து எந்த நாடுகளும் உதவி செய்யவில்லை. பெரும் இழப்பிற்குப் பிறகு பிடல் காஸ்ட்ரோ ஒரு முடிவுக்கு வந்தார். மருத்துவக் கல்லூரிகள் ஏராளம் தொடங்கப்பட்டன. அதுவும் இலவசம் என்கிற நிலைக்கு வந்தன.

அமெரிக்காவில் சுமார் 420 பேருக்கு ஒரு மருத்துவர். ஐரோப்பாவில் 330 பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற நிலையில் கியூபாவில் 150 பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற சாதனையைப் ஃபிடல் உருவாக்கினார்.

உலகத்திலே தரமான மருத்துவம் என்கிற பெயரும் பெற்றது. அமெரிக்க மருத்துவ மாணவர்கள் கியூபா நாட்டிற்கு அதிகமாக மருத்துவச் சுற்றுலா செல்லத் தொடங்கினர். இவ்வளவு மருத்துவப் புரட்சியைச் செய்த  ஃபிடல் காஸ்ட்ரோ உலக நாடுகளுக்கு ஓர் அறிவிப்பு செய்தார்.

உலக நாடுகளே! உங்கள் நாட்டில் பிரச்சினை என்றால் நாங்கள் மருந்து, மாத்திரைகள் அனுப்புகிறோம்; எங்கள் மருத்துவர்களும் இலவசமாக வந்து பணிபுரிவார்கள் என்று அறிவித்தார்.

                                                                                                          பயணிகள்

அவ்வகையில் 95 நாடுகளுக்கு இதுவரை 2 லட்சம் மருத்துவர்களைக் கியூபா அனுப்பியுள்ளது. இன்றைக்கு கொரோனா வந்த மனிதரை எப்படித் தனிமைப்படுத்தி வைக்கிறார்களோ அப்படி 60 ஆண்டுகளாக இந்தக் கியூபாவை அமெரிக்கா தனிமைப்படுத்தி வைத்திருக்கிறது.

அவ்வளவு மன உளைச்சலையும் வெற்றிக்கு உரமாக்கி உயர்ந்த நாடு இந்தக் கியூபா!

இதோ! பிரிட்டன் போன்ற நாடுகள் எவ்வளவோ கெடுதல் செய்தாலும் அந்த மக்களையும் காப்பாற்ற கியூபா தான் முன் வந்துள்ளது. கப்பலில் இருந்து வரும் மேல் நாட்டவர்களே!

கியூப மண்ணில் தைரியமாகக் காலூன்றி நடங்கள்.

நீங்கள் நலம் பெறுவீர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here