கறுப்பின பெண் என்பதற்காக பல அவமானங்களை தாண்டி உலக அளவில் சாதனை பல படைத்த அமெரிக்க பெண்

அவமானங்களும், அவதுறுகளும் முயற்சிக்கு திருகு ஆணி போன்று செயல்படும். அந்த முயற்சியில்தான் வெற்றியும் ஒளிந்து கொண்டும் இருக்கும். அந்த வகையில் அமெரிக்காவில் ஒரு கறுப்பின குடும்பத்தில் பிறந்து பல அவமானங்களை தாண்டி பல சாதனை படைத்துள்ளார் அமெரிக்க பெண். அப்படி அவமானப்படுத்தி ஒதுக்கிய வெள்ளை இனத்தவர் அனைவரும் ஒன்றுகூடி ஊர்வலம் நடத்தி பாராட்டிய நபர் வில்மா ருடோல்ப். இவரை பற்றி ஒரு தொகுப்பு தான் பார்க்க போகிறோம்,
1940ல் அமெரிக்காவில் ஒரு கறுப்பின குடும்பத்தில் இருபதாவது குழந்தையாக பிறந்த வில்மா ருடோல்ப் மூன்று வயதிலே நிமோனியா இருமல் ஜுரத்தால் பாதிக்கப்பட்டாள். குணமாவதற்குள் போலியோவால் இடது கால் தளர்ந்தது. கருப்பின மக்களை ஒதுக்கி வைப்பதை சட்டபூர்வமாக அமெரிக்கா அங்கீகரித்து இருந்த காலம் அது. வெள்ளையின பிள்ளைகள் உடல் நலம் சரியில்லாத கருப்பின குழந்தையை பொதுவெளியில் அவமானப்படுத்தினார்கள்.
நடக்க முடியாமல் தரையிலேயே விழுந்து கிடந்த பிள்ளையை 50 மைல் தொலைவு பயணித்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள். ஒன்பது வயது ஆனபோது நடக்க முயன்றாள். நடக்க முயன்ற போதெல்லாம் விழுந்து விழுந்து அடிபட்டது. தொடர்ந்து விடா முயற்சியாக நடந்தாள். பதிமூன்றாவது வயதில் ஓட்டப் பந்தய போட்டிகளில் ஓட முயன்றாள். ஓடும்போது கிரவுண்ட்லேயே விழுந்தாள். சுற்றியிருந்த வெள்ளை இனத்தவர் பார்த்து சிரித்தார்கள். மகள் அவமானப்படுத்தபடுவதை பார்த்த தாய் கண்ணீர் வடித்தாள். விடா முயற்சியாக தன்னம்பிக்கையோடு விழுந்தபோதெல்லாம் எழுந்து நின்று தனது ஆற்றலை வளர்த்துக் கொண்டார்.
இருபதாவது வயதில் நூறு, இருநூறு, முன்னூறு என மூன்று பிரிவுகளிலும் 1960 ஒலிம்பிக்ஸில் தங்கப்பதக்கம் வென்றார். அது உலக சாதனையாகவும் பாராட்டப்பட்டது. ருடொல்ப் அமெரிக்கா திரும்பியதும் அவளை அவமானப்படுத்தி ஒதுக்கிய வெள்ளை இனத்தவர் ஊர்வலம் நடத்தி பாராட்டினார்கள். மனித ஆற்றல் என்பது அபரிதமானது. அனைத்து பள்ளிகளிலும் இருந்து விரட்டியடிக்கப்பட்டு அறிவில்லாதவன் என ஆசிரியர்களால் ஒதுக்கப்பட்ட மாணவன் பின்னாட்களில் உலகம் போற்றும் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஆகவில்லையா?
நாம் சிறுவயதில் நடக்கும்போது விழுந்தாலும் மீண்டும் எழுந்து நின்று நடக்க முயற்சிப்போம். அன்றிருந்த உத்வேகமும் உற்சாகமும் வளர வளர குறைந்து போவதற்கு காரணம் பிள்ளைகளாக இருக்கும்போது நாம் விழுந்தாலும் சுற்றி இருப்பவர்களைப் பார்த்து கவலைப்படாமல் எழுந்து நிற்க முயற்சிப்போம். எழுந்து நின்று நடக்க வேண்டும் என்ற முயற்சிக்கு வரும் எந்தத் தடையையும் பொருட்படுத்தவில்லை. ஆனால், வளர்ந்த பின்னர் யார் என்ன சொல்வார்களோ என்ற பயம் நம்மை வலுவிழக்க செய்கிறது. விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் சாதிக்கவேண்டும் என்ற வேகத்தையும் பயம் குறைத்து விடக்கூடாது. நமக்கென ஒரு இலக்கை நிர்ணயித்து அதில் வெற்றி பெற தன்னம்பிக்கையோடு வழி உருவாக்கி விழவிழ எழுந்து நின்று பயணிப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here