எதிர்மறை ஆற்றலை கட்டுப்படுத்தும் பரிகாரம்

உலகில் மனிதராய் பிறந்த அனைவரும், விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சில கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இவற்றை சந்திக்கும் போது சில நிலைகளில் ஆனந்தமும், பல நிலைகளில் சங்கடங்களும் ஏற்படுகிறது.

இந்த முயற்சியில் ஒரு சிலருக்கு மனச் சோர்வு ஏற்பட்டு, எதிர்மறை சிந்தனை மிகுதியாகிவிடும். மேலும் பார்க்கும் வேலையில் ஈடுபாடு இல்லாமல் இருப்பது. எதிலும் எளிதில் முடிவு எடுக்க முடியாமல் திணறுவது, ஒரு செயலை செய்வதா? வேண்டாமா? என இருவிதமான மனநிலை போன்றவற்றை ஏற்படுத்தும்.

கோட்சார ராகு, கேது, சனி ஆகிய கிரகங்கள் சந்திரனுடன் சம்பந்தம் பெறும் போதும், கோட்சார சந்திரன் ராசிக்கு எட்டில் மறையும் போதும், ராகு கேது, சனியை கோட்சார சந்திரன் தொடும் போதும், ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, அர்த்தாஷ்டமச் சனி, கண்டகச் சனி, ஜென்ம ராகு, கேது ஆகிய காலகட்டங்களில் எதிர்மறை சிந்தனை அதிகம் உருவாகும்.

ஒரு வீட்டில் எதிர்மறை அதிர்வுகள் இருந்தால், அந்த வீட்டில் மன சஞ்சலங்கள் அதிகரிக்கும். வீட்டில் உள்ளவர்களுக்கு ஒருவர் மாற்றி ஒருவருக்கு உடல்நல கோளாறுகள், சண்டை சச்சரவு ஏற்படுவது போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

தொடர் பிரார்த்தனைகள் வீட்டில் நேர்மறை ஆற்றலை நூறு சதவிகிதம் அதிகப்படுத்தும். வீட்டில் அனைத்து ஜன்னல்களையும் நன்கு திறந்து வைக்க வேண்டும். நல்ல காற்றோட்டமும் சூரிய ஒளியும் உள்ளே வரும் போது, எதிர்மறை ஆற்றல்கள் உள்ளே புகுவது தடுக்கப்படும்.

வீட்டில் தேவையற்ற பழைய பொருட்களை சேர்க்கக் கூடாது. மிகக் குறிப்பாக ஓடாத கடிகாரம், பழுதான தொலைக்காட்சி, தொலைபேசி, எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் இருந்தால் எதிர்மறை ஆற்றலை வீட்டிற்குள் ஈர்த்துக்கொள்ளும்.

வீட்டிற்குள் வெறும் கால்களோடு நடந்தால், உடல் ஆற்றல் சமன்படுத்தப்படுவதுடன், உடம்பில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களை பூமி ஈர்த்துக் கொள்ளும். சமையல் அறையில் அடுப்புக்கு கீழே தண்ணீர் பிடித்து வைக்கக்கூடாது.

அன்றாட உணவில் கல் உப்பை அதிகம் சேர்த்து சாப்பிடக் கூடாது. மாறாக வீட்டை துடைக்கும் போதோ, கழுவும் போதோ, ஒரு கை கல் உப்பை வாளியில் போட்டு அந்த நீரை உபயோகிப்பதும் அதிக பலனைத் தரும். கல் உப்பு கரைத்த நீரில் குளித்தால் உடலில் உள்ள எதிர்மறை ஆற்றல்களை சுத்தப்படுத்தும்.

தினமும் அதிகாலையில் நடைபயிற்சி செய்வது, நேர்மறை ஆற்றல்களையும், புத்துணர்வையும் அளிக்கவல்லது. நமது எண்ணம், செயல், சிந்தனை, நடத்தை, பேச்சு, நட்பு வட்டாரம் அனைத்தையும், நேர்மறையாக, நேர்மையாக, தூய்மையாக வைத்திருக்க வேண்டும். வீட்டைச் சுற்றி தூய எண்ணத்தையும், அதிர்வலைகளையும் தரும் மரம், செடி, கொடிகளை வளர்ப்பது நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here