இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ரத யாத்திரை புகழ்பெற்றது. இதில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள். ஒவ்வொரு ஆண்டும் இந்த மூன்று மூலவர்களுக்குப் புதிய தேர் செய்யப்பட்டு, அதில் அவர்கள் அமர்ந்து நகரை வலம் வருவார்கள். தங்கள் இருப்பிடத்தில் இருந்து புறப்படும் ஜெகநாதர், பாலபத்திரர், தேவி சுபத்ரா ஆகியோர் 2 கி.மீ. தொலைவில் உள்ள தங்களின் அத்தை கோயிலான குண்டிச்சா கோவிலுக்கு செல்வார்கள்.
இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் ரத யாத்திரையை கட்டுப்பாடுகளுடன் மக்கள் பங்கேற்பு இல்லாமல் நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. தேரோட்டம் நடைபெறும் சமயத்தில் பூரி நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும், ஒவ்வொரு தேரையும் இழுக்கும் பக்தர்களின் எண்ணிக்கை 500ஐ தாண்டக்கூடாது, அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு கொரோனா இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு விதிமுறைகளைப் பின்பற்றி இன்று தேரோட்டம் தொடங்கியது. தேர்களில் ஜெகநாதர், பாலபத்திரர், தேவி சுபத்ரா மூலவர்களை எழுந்தருளச் செய்து, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர், பாரம்பரிய வழக்கப்படி, தேரின் முன்பகுதியில் தங்க கைப்பிடி கொண்ட துடைப்பத்தால் புரி நகர மன்னர் பெருக்கிச் சுத்தம் செய்து, பகவானை வழிபட்டார். அதன்பின்னர் தேரோட்டம் தொடங்கியது. முதலில் பாலபத்திரர் தேரும், அதன் பின்னர் சுபத்ரா தேவி எழுந்தருளிய தேரும் புறப்பட்ட பின்பு, இறுதியாக ஜெகநாதர் எழுந்தருளிய தேர் புறப்பட்டது.
அரசு நிர்வாகம் அறிவுறுத்தியபடி, பொதுமக்கள் வீடுகளில் இருந்தே தரிசனம் செய்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் பங்கேற்காமல் பூரி ரத யாத்திரை நடைபெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.