முருகப்பெருமானின் அறுபடை வீடுகளின் தனிச்சிறப்பு

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பது மரபு. கந்தக்கடவுள் குடியிருந்து அருள்புரியக்கூடிய அற்புதமான இடங்களை அறுபடை வீடுகளாக குறிப்பிடுகின்றோம். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்கு தனிச்சிறப்பும், வரலாறும் உண்டு. திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, சோலைமலை ஆகியவை அறுபடை வீடுகளாகும்.

திருப்பரங்குன்றம்

அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார். சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டு முதல் நூலாக திருமுருகாற்றுப்படையை நக்கீரர் இத்தலத்தில் தான் பாடியுள்ளார். இத்தலமானது சமய ஒற்றுமையை நிலைநாட்டும் தலமாக விளங்குகிறது. அசுரனை வென்ற அவர் இந்த தலத்தில் இந்திரனின் மகளான தெய்வானையை திருமணம் செய்து கொண்டார். முருகன் அமர்ந்த கோலத்தில் இருப்பது சிறப்பு. இத்தலத்தில் மலை வடிவில் சிவபெருமான் அருள்புரிகிறார். சிவனின் பெயரால் இத்தலம் “திருப்பரங்குன்றம்” எனப்படுகிறது. திருமண தடையை அகற்றும் தலமாகவும் விளங்குகிறது.

திருச்செந்தூர்

முருகனின் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர். பிறவாமை என்னும் வரம் தருகின்ற தலமாகவும் உள்ளது. மார்கழி மாதத்தில் தேவர்கள் தரிசிக்க வருகை புரிவதாக நம்பப்படுகிறது. இத்தலம் பற்றி சிலப்பதிகாரமும் எடுத்துரைக்கிறது. ஏழ்மை நிலையில் இருப்பவர்களின் வாழ்க்கையை இன்பமாக்கும் வெற்றியை தருவதால் “ஜெயந்தி நாதர்” எனவும் அழைக்கப்படுகிறார். இது கடலோரத்தில் அலைகள் வீச அமைந்துள்ளதால் திருச்சீரலைவாய் என்ற பெயரும் உண்டு. இந்ததலம் கைலாயத்திற்கு சமமானது.

பழனி

மூன்றாவது படை வீடாக விளங்கும் இந்த தலம் செல்வத்திற்கு அதிபதியாகவும், செவ்வாயின் சிறப்புகளையும் கொண்டது. சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி பழனி. மருந்தே மலையாக அமைந்த தலம். பழனியில் கால் வைத்தாலே பாதி நோய் தீரும். மலை ஏறிவிட்டால் முழு நோயும் நீங்கும். அபிஷேகம் செய்யப்பட்ட பஞ்சாமிர்தம், பால், தீர்த்தம் சாப்பிட்டால் நோய் தீரும். பழனி கோவிலுக்கு அபூர்வ சக்தி அளிப்பது சிலை. போகர் சித்தரால் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது. திருஆவினன்குடி என்ற பெயரும் இந்த தலத்திற்கு உண்டு.

சுவாமி மலை

நான்காவது படைவீடாக விளங்கும் இத்தலம் தன்மகனின் உபதேசம் கேட்ட தந்தையாக, தந்தைக்கு உபதேசம் செய்த மகனாக எழுந்தருளி அருள்புரியக்கூடிய சிறப்பு தலமாகும். தன் பிள்ளையின் வாயால் மந்திரத்தின் பொருளை கேட்டு மகிழ்ந்தார் சிவன். அதுவும் தன் பிள்ளை குருவாக வீற்றிருக்க, தானே சீடனைப் போல் அமர்ந்து கேட்டார். அதனால் “சிவகுருநாதன்” என்ற பெயரை முருகப்பெருமான் பெற்றார். இத்திருத்தலம் “திருவேரகம்” எனவும் அழைக்கப்படுகிறது.

திருத்தணி

ஐந்தாவது படைவீடாக விளங்கும் இத்தலம் அஞ்சுதலை நீக்கி ஆறுதலை கொடுக்கும் தலமாகும். தானம், தர்மங்களை பற்றி விளக்கும் தலமாக சிறந்து விளங்குகிறது. வள்ளியை திருமணம் செய்து கொண்ட தலமாகவும் புராணங்கள் கூறுகிறது. திருப்புகழ் பாடிய அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலமாகும். தணிகை முருகன் கோவில் என்றும் அழைப்பர். திருச்செந்தூரில் சூரனை வதம் செய்த முருகன் இங்கு வந்து கோபம் தணிந்து சாந்தமாக அமர்ந்தார். கோபம் தணித்த இடம் என்பதால் “தணிகை” என இவ்வூர் பெயர் பெற்றது. அபிஷேக சந்தனம் இத்தலத்தில் பிரசாதமாக தரப்படுகிறது. குன்றுதோறாடல் எனவும் இந்த தலம் அழைக்கப்படுகிறது.

சோலைமலை

அறுபடை வீடுகளில் ஆறாவது படைவீடாக விளங்குவது சோலைமலை. அவ்வையாரிடம்,“சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?,” என்று சாதுர்யத்துடன் உரையாடிய முருகன், இங்கு கோவில் கொண்டிருக்கிறார். இறையருள் என்னும் மெய்யறிவு வேண்டும் என்பதை உணர்த்த சுட்டிப்பையனாக வந்து திருவிளையாடல் புரிந்தவர் இவர். தன்னை வழிபட்டவர்க்கு கல்வியறிவும், ஞானமும் தருபவராக அருள்கிறார். இந்த தலத்தில் முருகனை வழிபட்டால் பொன், பொருள், வருமானம் பெருகும் என்பது நம்பிக்கை. இங்குள்ள நூபுரகங்கையில் நீராடுவது கங்கையில் நீராடுவதற்கு நிகராகும்.

சிவக்குமார், முதுகலை தமிழ் முதலாமாண்டு, செந்தமிழ்க்கல்லூரி,மதுரை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here