கும்பகோணத்தில் உள்ள சிறப்பு வாய்ந்த சிவாலங்கள்

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஆலயங்களை வழிபட கண்கோடி வேண்டும் என்பார்கள். உயர்ந்த கோபுரங்களைக் கொண்ட தஞ்சாவூருக்கு அடுத்தபடியாக கோவில் நகரம் என்று அழைக்கப்படும் கும்பகோணத்தில் எண்ணற்ற ஆலயங்கள் உள்ளன. இங்கு நடைபெறும் மகாமக உற்சவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அன்றைய தினம் 12 சிவாலயங்களில் இருந்தும், 5 வைணவ திருக்கோவில்களில் இருந்தும், மகாமக குளத்திற்கு சுவாமிகள் தீர்த்தவாரி காண வருவார்கள். இதில் 12 சிவாலயங்களில் முதல் ஆறு சிவாலயங்களைப் பற்றி சிறிய குறிப்புகளாகப் பார்ப்போம்.

பிரளய காலத்தின் முடிவில் கும்பத்தில் இருந்து தோன்றியவர், ஆதி கும்பேஸ்வரர். இவர் மங்களாம்பிகையுடன் மங்களகரமாக அருளாட்சி செய்துவருகிறார். கும்பகோணம் நகரின் மையத்தில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. 9 நிலை கொண்ட ராஜகோபுரம் அமைந்த தலம். ஆதி கும்பேஸ்வரர், சிவலிங்க வடிவில் காட்சி தருகிறார். இந்த லிங்கத்தின் சிறப்பு, கும்ப வடிவில் இருப்பதாகும். அம்பாள் மங்களாம்பிகை, தாமரை பீடத்தின் மீது 4 கரங்களுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். இந்த ஆலயத்தில் காணப்படும் சிற்பங்கள் அனைத்தும் கண்களைக் கவரும் விதத்தில் அமைந்துள்ளன. இங்குள்ள கல் நாதஸ்வரம் இத்தல சிறப்பை உயர்த்திக் காட்டுவதாக அமைந்துள்ளது.

காசி விஸ்வநாதர்

கும்பகோணம் பஸ்நிலையத்தில் இருந்து 1 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது, காசி விஸ்வநாதர் கோவில். இத்தல இறைவன், சதுர வடிவ கருவறையில் வீற்றிருக்கிறார். தனிச் சன்னிதியில் விசாலாட்சி அம்மன் அருள்பாலிக்கிறார். இந்த ஆலயத்தில் நவநதிக் கன்னியர்கள் அருள்புரிகிறார்கள். கங்கை, யமுனை, நர்மதை, சரஸ்வதி, காவிரி, கோதாவரி, துங்கபத்ரா, கிருஷ்ணா, சரயூ ஆகிய 9 பேரும் தெற்கு நோக்கி நிற்கின்றனர். இவர்களில் காவிரித்தாய் நடுநாயகமாக வீற்றிருப்பது கண்கொள்ளாக் காட்சியாகும். ராமபிரான் வழிபட்ட தலம் இது. ராவணனை வதம் செய்யும் முன்பாக, அகத்தியரின் வாக்குப்படி இத்தல இறைவனை ராமபிரான் வழிபாடு செய்ததாக தல புராணம் சொல்கிறது.

சோமேஸ்வரர்

கும்பகோணம் சாரங்கபாணி கோவிலை ஒட்டி அமைந்துள்ள ஆலயம் இது. இரண்டு ஆலயத்திற்கு இடையில் ஒரு மதில் சுவர் மட்டும்தான் இருக்கிறது. நவக்கிரகங்களில் சுப கிரகமாக வர்ணிக்கப்படும் குருபகவான் வழிபாடு செய்த சிறப்புமிக்க ஆலயம் என்பதால், இத்தல இறைவன் ‘வியாழ சோமேஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார். அந்தப் பெயர் தற்போது மருவி ‘ஏழை சோமேஸ்வரர்’ என்றாகிவிட்டது. சோமன் எனப்படும் சந்திரன் வழிபட்டதால், இத்தல இறைவனுக்கு ‘சோமேஸ்வரர்’ என்று பெயர். குரு மற்றும் சந்திர தோஷம் இருப்பவர்கள், இந்த ஆலயத்தில் உள்ள சோமேஸ்வரரை வழிபட்டால் போதுமானது. இத்தலத்திற்கு ‘குடந்தை காரோணம்’ என்ற பெயரும் உண்டு.

கவுதமேஸ்வரர்

கும்பகோணம் மகாமக குளத்தின் தென்மேற்கில் அமைந்துள்ளது, கவுதமேஸ்வரர் கோவில். முன்காலத்தில் இந்த ஆலயம் ‘யக்ஞோபவிதேஸ்வரர் கோவில்’ என்று அழைக்கப்பட்டுள்ளது. பிரளய காலத்தின்போது கும்பத்தில் இருந்த வெண் கயிறு நீரில் அடித்துச் செல்லப்பட்டது. அது விழுந்த இடத்தில் ஒரு சிவலிங்கம் தோன்றியது. அங்கு ஆலயமும் அமைக்கப்பட்டது. அதுவே ‘யக்ஞோபவிதேஸ்வரர் கோவில்’ ஆகும். பின்காலத்தில் இங்கு கவுதம முனிவர் வருகை தந்தார். அவரது பாவம் விலகுவதற்காக அவர் இத்தல இறைவனை வழிபாடு செய்தார். இதனால் இங்குள்ள இறைவனும், ‘கவுதமேஸ்வரர்’ என்று வழங்கப்படலானார். கவுதம முனிவர் நீராடிய தீர்த்தம், ‘கவுதம தீர்த்தம்’ என்ற பெயரில் உள்ளது.

ஆதிகம்பட்ட விஸ்வநாதர்

ஆதி கும்பேஸ்வரர் கோவிலுக்கு தென்மேற்கில் சிறிது தொலைவிலேயே இந்தக் கோவில் இருக்கிறது. முன் காலத்தில் தூமகேது என்ற முனிவர், கும்பகோணத்தின் சிறப்பு பற்றி அறிந்து தனது சீடர்களுடன் இங்கு வந்து தங்கினார். அந்த இடம் ‘மாலதிவனம்’ என்று அழைக்கப்பட்டது. கும்பேஸ்வரரை வழிபடும் முன்பாக, தான் தங்கியிருந்த இடத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார், தூமகேது முனிவர். அப்போது அவருக்கு இறைவன் காட்சி தந்தார். இறைவனிடம், ‘இந்த வனத்தில் தங்கியிருந்து அருள்பாலிக்க வேண்டும்’ என்று கேட்டார். அதன்படியே இறைவனும் இங்கு இருந்து அருள்பாலிக்கத் தொடங்கினார். இங்குள்ள அன்னை ஆனந்த நிதி என்ற பெயருடன் விளங்குகிறார். இந்த அன்னையை வழிபட்டால், 16 வகை செல்வங்கள் வந்து சேரும்.

பாணபுரீஸ்வரர்

கும்பகோணத்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ளது பாணபுரீஸ்வரர் திருக்கோவில். இறை வன் சிவபெருமான், வேடன் உருவில் வந்து அமுத குடத்தை உடைக்க அம்பு எய்த இடம் ‘பாணபுரி’ ஆனது. அதுவே தற்போது ‘பாணா துறை’ என்று அழைக்கப்படுகிறது. முன்னொரு காலத்தில் வியாச முனிவர், காசியில் நீராடியபோது பாவத்திற்கு ஆளானார். உடனே அவர் இறைவனை வேண்டி, தன்னுடைய பாவத்தைப் போக்க வழி கூறும்படி கேட்டார். இறைவனும் மனமிரங்கி, முனிவரை கும்பகோணத்திற்குச் சென்று வழிபடும்படி வழிகாட்டினார். வியாச முனிவர், அப்படி வந்து தங்கியிருந்து பூஜித்த இடம்தான் பாணபுரி. மூர்த்தி சிறியதாக இருந்தாலும் கீர்த்தி பெரியது என்பார்கள். அதுபோல சிறிய ஆலயமாக இருந்தாலும், இங்கு அருள்பாலிக்கும் பாணபுரீஸ்வரர் எல்லையற்ற சக்திகளை கொண்டவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here