போதிய விலை இல்லாததால் ஏமாற்றம் குமரியில் மண்பாண்ட வியாபாரிகள் தவிப்பு-அரசே கொள்முதல் செய்ய கோரிக்கை

நாகர்கோவில் :  மண்பாண்டங்களுக்கு போதிய விலை நிர்ணயம் செய்ய முடியாமல் மண்பாண்ட வியாபாரிகள் தவித்து வருகிறார்கள். எனவே அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என மண்பாண்ட தொழிலாளர்கள் கூறினர். பொங்கல் பண்டிகை என்றாலே கரும்புக்கு அடுத்தபடியாக பொங்கல் பானைகள் தான் முக்கியத்துவம் பெறும்.

அன்றைய தினம் சூரிய உதயத்துக்கு முன் வாசலில் பொங்கல் வைத்து வழிபாடு செய்வது வழக்கம் ஆகும். தற்போது நாகரீகம் என்ற பெயரில், நகர பகுதிகளில் இந்த  வழக்கம் இல்லாமல் போனாலும் கூட, கிராமப்புற பகுதிகளில் இது பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதுவும் மண்பானையில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவது இன்றும் பல கிராமங்களில் காலங்காலமாக இருந்து வருகிறது. மண்பானையில் பொங்கல் வைப்பதே சிறந்தது என பெரியவர்கள் கூறி உள்ளனர்.

 இதனால் பொங்கல் பண்டிகைக்கு 4, 5 மாதங்களுக்கு முன்பே மண்பானைகள் தயாரிப்பில் மண்பாண்ட தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபடுவார்கள். குமரி மாவட்டத்தில் சுங்கான்கடை, தலக்குளம், ேதரேகால்புதூர், தாழக்குடி, காப்புக்காடு, பெருஞ்செல்வவிளை, புலியூர்குறிச்சி, அருமனை, மாலைக்கோடு, குலசேகரம், ஆளூர் உள்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் மண்பானைகள் தயாரிக்கப்படுகின்றன. நூற்றுக்கணக்கான குடும்பத்தினர், இந்த தொழிலை செய்து வருகிறார்கள்.

குளங்களில் இருந்து மண் எடுத்து தான், மண்பாண்டங்கள் செய்து வருகிறார்கள். அண்மைக்காலமாக மண்பாண்டங்கள் செய்வதற்கு, தேவையான களிமண் கிடைப்பதில் பெரும் சிரமம் உள்ளது. மண்பாண்ட தொழிலாளர்கள், குளங்களில் மண் எடுக்க விண்ணப்பித்தால் 3 மாதங்கள், 4 மாதங்கள் கழித்து தான் அதிகாரிகள் அனுமதி கொடுக்கிறார்கள். அனுமதி கிடைக்கும் சமயங்களில் மழை, குளங்களில் தண்ணீர் அதிகரிப்பு போன்ற காரணங்களால் மண்பாண்டம் தயாரிக்க தேவையான களிமண் எடுக்க முடியாமல் போய் விடுகிறது.

இதனால் மண் விலையும் அதிகரித்து விடுகிறது. மண்பாண்ட தொழிலாளர்களுக்கு ஏற்படும் சிரமங்களை குறைக்க, நல வாரிய அட்டை அடிப்படையில் மண் எடுப்பதற்கான அனுமதியை வேகமாக வழங்க வேண்டும் என மண்பாண்ட தொழிலாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில்  பொங்கலையொட்டி சுங்கான்கடை உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளில், பல்வேறு வடிவில் மண்பானைகள் தயாரித்துள்ளனர். ஆனால் தற்போது இதற்கு போதிய விலை இல்லாத நிலை இருப்பதாக, மண்பாண்ட தொழிலாளர்கள் கூறுகிறார்கள். விறகு, களிமண் உள்ளிட்டவை விலை அதிகரித்து உள்ளதால், மண்பாண்டங்கள் விலை உயர்ந்துள்ளது.

ஆனால் இவ்வளவு விலை கொடுத்து மண்பானைகள் வாங்கவா? என யோசித்து பொதுமக்கள் வாங்காமல் சென்று விடுகிறார்கள். இதனால் போதிய விலை நிர்ணயம்  செய்ய முடியாமல் தொழிலாளர்கள் தவித்து வருகிறார்கள். எனவே தமிழக அரசு, பொங்கல் பண்டிகைக்கு கரும்பு கொள்முதல் செய்வது போல் மண்பானைகளையும் கொள்முதல் செய்ய வேண்டும். அவ்வாறு கொள்முதல் செய்தால், உரிய விலை கிடைக்கும் என்று மண்பாண்ட தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கூறினர்.

இதன் மூலம் தங்களின் வாழ்க்கை தரம் உயரும் என்றும் தொழிலாளர்கள் கூறினர். நாகரீகத்தின் வளர்ச்சி என்ற பெயரில் பாரம்பரியத்தை கைவிட்டு விடாமல், மண்பானைகளில் பொங்கல் வைப்பது தான் சிறந்தது ஆகும். எனவே அதிகளவில் பொதுமக்கள் மண்பானைகளை வாங்கினால், இந்த தொழிலாளர்களின் வாழ்வு சிறக்கும் என்பது சமூக ஆர்வலர்களின் வேண்டுகோள் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here