வாடகைக் காரில் இருவர் பயணிக்க அனுமதி; குடும்ப உறவுகள் செல்ல தடை ஏன்? அரசாங்கம் மறுபரிசீலனை செய்யுமா?

மக்கள் ஓசை செய்தியாளர், கிள்ளான், ஜூலை 14:

அமலில் இருக்கும் மூன்றாம் கட்ட  கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் அரசாங்கம் விதித்துள்ள பல கட்டுப்பாடுகளில் வாகனத்தில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருப்பது பற்றி  பொதுமக்கள் மத்தியில் பரவலான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

வாடகைக் கார், ஈ-ஹெய்லிங் போன்ற பயணிகளை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு இருவர் பயணிக்க அனுமதி அளித்திருக்கும் அரசாங்கம் சொந்த வாகனங்களிலும் இருவர் பயணிக்க அனுமதியளிக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

முன் பின் அறிமுகமில்லாத  ஒரு நபரை வாடிக்கையாளர் என்ற பேரில் எந்தவோர் அச்சமும் இன்றி  ஏற்றிச்செல்லும்

வாடகைக் கார் ஓட்டுநர், வாகனத்தில் பயணம் செய்யும் அந்நபரின் உடல்நிலை எப்படி உள்ளது. அவரின் சுகாதாரம் எப்படி உள்ளது  என்பதைக் கூட அறிந்திராமல் ஏற்றிச் செல்வ தற்கு அனுமதி கொடுக்கும் அரசாங்கம்,   குடும்ப உறுப்பினர் கள், மனைவி, ரத்தச்சொந்தங்கள் ஒன்றாக ஒரு வாகனத்தில் செல்வதற்கு அனுமதியளிக்க வேண்டும் என இந்திய சமூகத் தலைவர்களான அ.பத்மநாதன், முருகையா முனுசாமி,  கிள்ளான் ஸ்ரீ பெரந்தாவைச் சேர்ந்த  டாக்டர் எட்டியப்பன்,  கண்மணி லெட்சுமணன், மணியம் அருணாசலம், கண்மணி பெரியண்ணன்   ஆகியோர் கேட்டுக் கொண்டனர்.

ஒரு வாகனத்தில் ஒருவர் பயணிக்க வேண்டும் என்ற வரைமுறை பல குடும்பங்களில் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. பொது போக்குவரத்து வசதிகள் இல்லாத பகுதிகளில் வசிப்பவர்களும் வாகன வசதி இல்லாதவர்களும் பல்வேறான சவால்களை எதிர்நோக்குவதாகக் குறிப்பிட்ட அவர்கள், குடும்ப உறவுகளை கடைவீதிகளுக்கு அழைத்துச் செல்வதற்கும் சிரமமாக உள்ளதாக தங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தினர்.

 ஒரே வீட்டில் குடும்பத்தினரோடு சேர்ந்து வாழும் குடும்ப உறவுகளை ஒருவர் அல்லது இருவர் ஒரே வாகனத்தில் செல்வதற்கு அனுமதியளிக்க ஆவன செய்ய வேண்டும். ஒரே வீட்டில் ஒரு குடும்பமாக வாழும்  அவர்களிடையே கோவிட்-19 தொற்று இல்லாத சூழ்நிலையில் அவர்கள் ஒன்றாக பயணம் செய்ய வாய்ப்பு வழங்க வேண்டும். அறிமுகமில்லாதவர்கள் வாடகை வாகனத்தில் செல்லும் போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பயணம் செய்ய அனுமதிக்கலாமே  என கருத்துரைத்தனர்.

எனவே, அரசாங்கம் மக்களின் எதிர்பார்ப்பை உணர்ந்து குடும்ப  உறவுகள்  வட்டாரம் அல்லது மாநிலத்தைக்  கடந்து செல்லாமல்  வேலையிடங்களுக்கு சென்று வரவும் கடைவீதிகளுக்கு பொருட்கள் வாங்கி வருவதற்கும்  அனுமதி வழங்கவேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here