இன்று சனிப் பிரதோஷத்துடன் இணைந்து வரும் மகா சிவராத்திரி….! விரதம் இருந்தால் இருமடங்கு நன்மை..!

சிவனுக்குரிய விரதங்களில் முதன்மையானது சிவராத்திரி விரதம். அந்த வகையில் இந்த ஆண்டு (2023) மகா சிவராத்திரி பிப்ரவரி 18ஆம் தேதி அதாவது இன்று இந்துக்களால் அனுஷ்டிக்கப்படுகிறது. இம்முறை சனிப் பிரதோஷம் மற்றும் திருவோண நட்சத்திரம் இணைந்து மகா சிவராத்திரி விரதம் வருவது மிகவும் சிறப்பானது.

இன்று நாட்டிலுள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் விஷேச பூஜைகள் நடைபெற இருக்கின்றன.

விரதமிருக்கும் முறை

1. பிப்ரவரி 18 ஆம் தேதி காலையில் விரதம் தொடங்கிய பிறகு பகல் முழுவதும் தூங்கக் கூடாது. அன்று இரவு முழுவதும் தூங்காமல் கோவில்களில் நடக்கும் நான்கு கால பூஜைகளில் கலந்து கொள்ள வேண்டும்.

நான்கு காலங்களிலும் கண் விழிக்க முடியாதவர்கள் மூன்றாவது காலத்தின் போது கண்டிப்பாக கண் விழித்து, சிவனை வழிபட வேண்டும்.

2. மாலை 6 மணி முதல், பிப்ரவரி 19 ம் தேதி காலை 6 மணி வரை சிவன் கோவில்களில் நடக்கும் நான்கு கால பூஜைகளில் கலந்து கொள்ளலாம், அல்லது வீட்டிலேயே இந்த சமயத்தில் சிவ பூஜை செய்து வழிபடலாம்.

3. பிப்ரவரி 19 ஆம் தேதி காலை 6 மணிக்கு நான்காம் கால பூஜை நிறைவு செய்த பிறகு, பாரணை செய்து உணவு சாப்பிட்டு உபவாசத்தை நிறைவு செய்ய வேண்டும்.

4. அப்படி பிப்ரவரி 19 ஆம் தேதி மாலை 6 மணிக்கு மேல் விரதத்தை நிறைவு செய்யும் முன்பு வீட்டில் விளக்கேற்றி, சிவ நாமங்கள் சொல்லி வழிபட்ட பிறகு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

5. 19 ஆம் தேதி பகலில் சைவ உணவாக, வழக்கம் போல் உணவு எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அன்று பகல் முழுவதும் தூங்கக் கூடாது. மாலை 6 மணிக்கு பிறகு விளக்கேற்றி வழிபட்ட பிறகே, தூங்க வேண்டும்.

மகா சிவராத்திரியன்று விரதம் இருந்தால் மூன்று பிறவியில் செய்த பாவங்கள் முழுவதுமாக நீங்கும் என்பது ஐதீகம். சனிப் பிரதோஷம் மற்றும் மகா சிவராத்திரி இரண்டும் அரிதாக ஒன்றிணையும் இந்த நாளில் விரதம் இருந்து சிவபெருமானை வழிபட்டு வந்தால் நாட்பட்ட நோய்களும் தீரும், தோஷங்கள் நிவர்த்தியாகும், கடன் தொல்லை நீங்கும், வாழ்க்கையில் உன்னதமான நிலையை அடைய முடியும் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here