அமெரிக்க மாகாணத்தை புரட்டிப்போட்ட பயங்கர பனிப்புயல் – 1.20 லட்சம் மக்கள் இருளில் தவிப்பு

புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உலகில் காலநிலை வேகமாக மாறி வருகிறது. இதன் விளைவாக உலகின் பல நாடுகளில் வெயில், குளிர், மழை என அனைத்து காலநிலைகளும் இதுவரை இல்லாத அளவுக்கு மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக அமெரிக்கா காலநிலை மாற்றத்தால் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான பனிப்புயல் அமெரிக்க மாகாணங்களை பந்தாடியது. இந்த புயலால் டஜன் கணக்கானோர் உயிரிழந்த நிலையில், லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.

மேலும் பனிப்புயலால் அங்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களையிழந்தன. இந்த நிலையில் அமெரிக்காவின் மேற்கு மாகாணமான கலிபோர்னியாவில் வீசி வரும் பயங்கர பனிப்புயல் அந்த மாகாணத்தையை புரட்டிப்போட்டுள்ளது.

குறிப்பாக அந்த மாகாணத்தின் மிகப்பெரிய நகரான லாஸ் ஏஞ்சல்ஸ் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மணிக்கு 112 கி.மீ. வேகத்தில் புயல் காற்று வீசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புயல் காரணமாக மாகாணம் முழுவதும் கடுமையான பனிப்பொழிவுடன், மழையும் கொட்டி வருகிறது. இதனால் சாலைகள், வீதிகளெங்கும் பனித்துகள்கள் பல அடி உயரத்துக்கு குவிந்து கிடக்கின்றன. மேலும் மழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. இதனால் சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு, போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது.

அதேபோல் ரெயில் வழித்தடங்களிலும் பனித்துகள்கள் மலைபோல் குவிந்து கிடப்பதால் ரெயில் சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. புயலின் போது ஏராளமான மின்கம்பங்கள் சரிந்து விழுந்ததால் லாஸ் ஏஞ்சல்ஸ் உள்பட பல நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மட்டும் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் இருளில் தவித்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பனிப்புயல் காரணமாக கலிபோர்னியா முழுவதும் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் பரிதவிப்புக்கு ஆளாகினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here