இந்திய சமுதாயத்தின் பிரச்சினைகள்: தீர்வு காணப்போவது எந்தக் கூட்டணி?

பி.ஆர். ராஜன்

கோலாலம்பூர், ஜூலை 24-

மலேசிய இந்தியர்களின் 66 ஆண்டுகள் போராட்டங்களுக்கும் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கும் சரியான தீர்வுகளைக் கண்டு அவர்களைக் கைதூக்கி விடப்போவது எந்தக் கூட்டணி?

இந்திய சமுதாயத்தின் மீது உண்மையான அக்கறை இருப்பதை நிரூபிக்கப்போவது பக்காத்தான் ஹராப்பானா? பாரிசான் நேஷனலா? பெரிக்காத்தான் நேஷனலா? மலேசிய இந்திய சமுதாயத்தின் குரல்கள்  யார் காதுகளில் விழப்போகிறது? என்பதைப் பொறுத்துத்தான் இனிவரும் தேர்தல்களில் இந்தியர்களின் வாக்குகள் என்பது திட்டவட்டமாக முடிவு செய்யப்படுமா?

வார்த்தை ஜாலங்களால் இந்திய சமுதாயத்தைத் தொடர்ந்து ஏமாற்றி விடலாமா? என்ற கேள்விக்கு இந்த மூன்று கூட்டணிகளும் சொல்லப்போகும் பதில்தான் என்ன?

நாட்டில் 6 மாநிலங்களின் 15ஆவது சட்டமன்றத் தேர்தல்கள் ஆகஸ்டு 12ஆம் தேதி நடைபெறவுள்ளது. பினாங்கு, கெடா, கிளாந்தான், திரெங்கானு, சிலாங்கூர், நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களில் 245 தொகுதிகளில் போட்டிகள் நிலவுகின்றன.

இவற்றுள் பினாங்கு, கெடா, சிலாங்கூர், நெகிரி செம்பிலான் ஆகிய நான்கு மாநிலங்களில் வெற்றி – தோல்வியை நிர்ணயிக்கக்கூடியவர்களாக இந்திய வாக்காளர்கள் இருக்கின்றனர்.

பக்காத்தான் ஹராப்பான், பாரிசான் நேஷனல் ஆகிய இரு கூட்டுக் கூட்டணிகளும் அவர்களின் வேட்பாளர்களை அறிவித்திருக்கின்றன. இந்திய வாக்காளர்களின் ஆதரவைப் பெறுவதற்கு பக்காத்தான் ஹராப்பான், பாரிசான் நேஷனல், பெரிக்காத்தான் நேஷனல் ஆகியவை இலக்கு வைத்து நகர்ந்து கொண்டிருக்கின்றன.

 

இந்நிலையில் கடந்த 66 ஆண்டுகளாக மலேசிய இந்தியர்களின் பல்வேறு கோரிக்கைகள் இவர்களின் காதுகளில் விழுந்தும் விழாமலும் இருக்கின்றன. காதுகளில் விழுந்திருந்தால் உரிய தீர்வுகள் பிறந்திருக்கும்.

இவ்வாறான ஒரு சுழ்நிலையில் இப்போது மிக முக்கியமாக வாழ்வா? சாவா என்ற போராட்ட நிலையில் இந்த மூன்று கூட்டணிகளும் இந்த சட்டமன்றத் தேர்தல்களை எதிர்கொள்கின்றன.

இந்தியர்களின் ஆதரவு இல்லையெனில் தங்களால் வெற்றி பெற முடியாது என்பதை இந்த மூன்று கூட்டணிகளும் நன்கு புரிந்து வைத்திருக்கின்றன. இனி வரும் காலங்களில் நிறைய இனிப்பான செய்திகள் நம் காதுகளில் வந்து விழும். இவை யாவும் இந்தியர்களின் வாக்குகளுக்கான தூண்டில் இரை என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

ஆரம்பக்கல்வி

நாட்டில் தமிழ்மொழி பள்ளிகள் இருக்கக்கூடாது என்று ஒரு தீவிரவாதக் கும்பல் தொடர்ந்து நீதிமன்றங்களில் வழக்குத் தொடுத்து வருகிறது. கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தில் உரிமைகள் வழங்கப்பட்டிருந்தும் இந்த விவகாரம் தொடர்ந்து கேள்விக்குறியாக்கப்பட்டு வருகிறது.  புதிய சர்ச்சைகளும் எழத் தொடங்கி இருக்கின்றன. இதற்கு எந்தக் கூட்டணி சரியான தீர்வு காணப்போகிறது?

உயர்கல்வி

எஸ்பிஎம், எஸ்டிபிஎம் தேர்வுகளில் உயர் மதிப்பெண்களைப் பெற்ற இந்திய மாணவர்களுக்கு அரசாங்கப் பல்கலைக்கழகங்களில், மெட்ரிகுலேஷன் கல்லூரிகளில் வாய்ப்பு கிடைப்பது ஒவ்வோர் ஆண்டும் ஒரு போராட்டமாகவே இருக்கிறது.

இந்த மாணவர்களுள் பெரும்பான்மையோர் பி40 தரப்பைச் சேர்ந்தவர்கள் என்ற நிலையில் அரசாங்கப் பல்கலைக்கழகங்களில் மெட்ரிகுலேஷன் கல்லூரிகளில் சேர்வதற்கு விண்ணப்பம் செய்வது என்பது இயல்பான ஒன்று.

ஆனால் அந்த வாய்ப்புகள் நிறைவாக இவர்களுக்குக் கிடைப்பதில்லை. இது ஏன் என்பதை  ஆய்வு செய்து நியாயமான வாய்ப்புகளைப் பெற்றுத் தரப்போவது எந்தக் கூட்டணி?

வேலை வாய்ப்பு – உயர் பதவிகள்

அரசாங்கச் சேவைகளில் இந்தியர்களின் வேலை வாய்ப்பு, உயர் பதவிகள் இன்னும் எட்டாக்கனியாகவே இருக்கிறது. கிட்டத்தட்ட 7 விழுக்காட்டு இந்தியர்கள் உயர் பதவிகளில் – அரசாங்கப் பணிகளில் அமர்த்தப்பட்டிருக்கின்றனர் என்று அரசியல் தலைவர்கள் கூறுகின்றனர்.

ஆனால் இது உண்மையா? என்பதை தரவுகளின் அடிப்படையில் ஆய்வு செய்து சரியான நிவாரணத்தைத் தரப்போவது எந்தக் கூட்டணி? சாதாரண வேலைகள் செய்வோரையும் இந்த அரசாங்க வேலைகளில்  சேர்த்துக் கொள்ளக்கூடாது. உயர் பதவிகளில் இந்தியர்களின் எண்ணிக்கை என்ன என்பதைத்தான் நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். இதற்க சரியான பதிலைச் சொல்லப்போவது யார்?

தொழிற்பயிற்சி – தொழில் வாய்ப்புகள்

நாடு 4.0 தொழில் புரட்சியில் தடம் பதித்திருக்கிறது. இதற்குத் தேவையான ஆள்பலத்தைத் தயார்ப்படுத்துவதில் இந்தியர்களுக்குக் குறிப்பாக இளம் பட்டதாரிகளுக்கு தொழிற்பயிற்சி வாய்ப்புகளில்  முறையான இடங்கள் தரப்படுகின்றனவா?

அதே சமயம் தங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக தொழில்துறைகளில் இவர்களுக்கு உரிய வாய்ப்புகள் வழங்கப்படுகின்றனவா? என்பதை விரிவான தரவுகளின் அடிப்படையில் ஆய்வு செய்து தீர்வு காணப்போவது எந்தக் கூட்டணி?

வீடு – நிலம்

நாட்டின் வளர்ச்சிக்காக உழைத்து முதுகெலும்பு உடைந்துபோன  இந்தியர்களுக்கு இந்த 66 ஆண்டுகளில் தரப்பட்டிருக்கும் நிலம், வீடுகள் பற்றிய புள்ளி விவரங்களைத் தரப்போவது எந்தக் கூட்டணி?

அதேபோன்று நிலத்திற்காகவும் வீடுகளுக்காகவும் போராடிக் கொண்டிருக்கும் இந்திய சமுதாயத்திற்கு இதனைத் தரப்போவது எந்தக் கூட்டணி? சொந்த வீடுகளுக்கு உரிமையாகும் இந்தியர்களின் கனவுகளை நிறைவேற்றி வைக்கப்போவது எந்தக் கூட்டணி?

நிலத்திட்டங்கள் – விவசாயம்

மலேசிய இந்தியர்கள் வெறும் ஓட்டுப்போடும் இயந்திரங்களாகத்தான் இதுவரை பார்க்கப்படுகின்றனர். ஆசை வார்த்தைகளால் இவர்களின் ஓட்டைப் பெற்று விடலாம் என்று அரசியல்வாதிகள் நம்புகின்றனர்.

இதுவும் சமயங்களில் உண்மையாகி விடுகிறது. அரசியல்வாதிகளின் வார்த்தை ஜாலங்களில் ஏமாந்து போவது மலேசிய இந்தியர்களுக்குப் புதிதல்ல. நம்பி… நம்பியே இன்னமும் மோசம் போய்க் கொண்டிருக்கின்றனர். ஏமாந்து கொண்டிருக்கின்றனர்.

மலேசியா நிலம் வளமிக்க ஒரு நாடு. விவசாயத்திற்கும் உகந்த நிலத்தைப் பெரிய அளவில் கொண்டிருக்கிறது. பெல்டா, ஃபெல்கிரா  போன்ற நிலத் திட்டங்கள் மற்ற சகோதர இனத்தவரின் வாழ்வாதாரத்தை உயர்த்தி இருப்பதோடு செல்வச் செழிப்பில் அவர்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

ஆனால் விவசாயத்திற்குப் பெயர்போன இந்தியர்களுக்கென்று தனி நிலத்திட்டமோ விவசாய நிலமோ வழங்கப்படுவது மிக மிகக் குறைவு. இந்த இரண்டு துறைகளிலும் அவர்களுக்கு உரிய வாய்ப்பு வழங்கப்பட்டால் இந்திய சமுதாயத்தின் வாழ்க்கை நிலை ஓர் உயர்ந்த நிலையை எட்டும்.  இந்த வாய்ப்பைத் தரப்போவது எந்தக் கூட்டணி?

அடையாள ஆவணங்கள் – குடியுரிமை

மலேசிய இந்தியர்களின் உயிர்மூச்சாகவும் இந்த மண்ணின் மைந்தர்களாக அவர்களை அடையாளம் காட்டுவதாகவும் பிறப்புச் சான்றிதழ், அடையாளக்கார்டு, குடியுரிமை ஆகியவை திகழ்கின்றன.

ஆனால் இன்னும் 16 ஆயிரம் பேர் இந்த நாட்டில் நாடற்றவர்களாக இருக்கின்றனர் என்று தரவுகள் கூறுகின்றன. இறந்த பின்னர் மலேசியப் பிரஜையாக இந்த மலேசிய மண்ணில் புதைக்கப்பட வேண்டும் என்ற ஏக்கத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட பலர் இவர்களுள் அடங்குவர்.

20 – 30 வருடங்களாக இவர்கள் இந்த அடையாள ஆவணத்திற்காக போராடிக் கொண்டிருக்கின்றனர். பிறந்த மண்ணிலேயே  நாடற்றவர்களாக வாழ்வதைவிட கொடுமையானது வேறு எதுவும் இல்லை என்று இவர்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.

இவர்களின் கண்ணீரைத் துடைத்து இந்த ஏக்கத்தை போக்கப்போதவது எந்தக் கூட்டணி?

ஊராட்சித்துறைப் பதவிகள்

நாடு முழுவதும் உள்ள ஊராட்சித்துறைகளில் இந்தியர்கள் எத்தனை பேர் பதவிகளில் இருக்கின்றனர். இதற்கு ஆதாரமாக தரவுகள் ஏதும் இருக்கின்றனவா?

தகுதி இருந்தும் வாய்ப்புகள் கிடைக்காதபட்சத்தில் இதுபோன்ற வாய்ப்புகளை இழந்திருக்கும் மலேசிய இந்தியர்களுக்கு உரியதோர் அந்தஸ்தைப் பெற்றுத் தரப்போவது எந்தக் கூட்டணி?

YAB Perdana Menteri, Dato’ Seri Anwar Ibrahim menghadiri Program Ramah Mesra YAB Perdana Menteri Bersama
Masyarakat India Negeri Kedah di Dewan Lip Seang Kor, Sungai Petani, 15 Julai 2023. – SADIQ ASYRAF/Pejabat Perdana Menteri
NO SALES; NO ARCHIVE; RESTRICTED TO EDITORIAL USE ONLY. NOTE TO EDITORS: This photos may only be used for editorial reporting purposes for the contemporaneous illustration of events, things or the people in the image or facts mentioned in the caption. Reuse of the pictures may req

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here