“மரண ஓலம்..” எங்கு பார்த்தாலும் சடலங்கள்.. மொரோக்கோவை புரட்டி போட்ட பூகம்பம்! 800 தாண்டிய உயிரிழப்பு

ரபாத்: மொரோக்கோ நாட்டில் மோசமான நிலநடுக்கத்தில் 800க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், இது குறித்துப் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. மொரோக்கோவில் பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் குறைந்தது 820 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இரவு 11 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள பல இடங்களில் மோசமான சேதத்தை ஏற்படுத்தியது. நள்ளிரவில் திடீரென கட்டிடங்கள் ஆட்டம் கண்ட நிலையில், அங்கிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு சாலைக்கு ஓடி வெளியே வந்தனர்.

நிலநடுக்கம்: இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி வெள்ளி இரவு 11:11 மணிக்கு ஏற்பட்டுள்ளது. அந்நாட்டில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் இடமான மராகேஷுக்கு தென்மேற்கே 72 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மலைப் பகுதியில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.8ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல கடலோர நகரங்களான ரபாட், காசாபிளாங்கா மற்றும் எஸ்ஸௌயிராவிலும் வலுவான நடுக்கம் உணரப்பட்டது.

இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது. கடந்த 120 ஆண்டுகளில் அப்பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் இது என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதில் இதுவரை 820 பேர் உயிரிழந்துள்ளனர். உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், காயமடைந்த 600க்கு மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 205 பேர் மிக ஆபத்தான சூழலில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

கலங்கிய பொதுமக்கள்: இது குறித்து அப்பகுதியை சேர்ந்த 33 வயதான அப்தெல்ஹாக் எல் அம்ரானி என்பவர் கூறுகையில், “இரவில் திடீரென பயங்கரமாகக் கட்டிடங்கள் நடுங்கின. சில நொடிகளுக்குப் பின்னரே அது ஒரு பூகம்பம் என்பதை உணர்ந்தோம்.. கட்டிடங்கள் எல்லாம் அப்படியே நகர்ந்தன. இதை என் கண்ணால் நான் பார்த்தேன்.. அனைவரும் அதிர்ச்சியில் இருந்தனர். குழந்தைகள் அழுகையை நிறுத்தவில்லை.. அதேபோல பெற்றோர்கள் கலக்கமடைந்தனர்” என்றார்.

மொரோக்கோவில் எதனால் பாதிப்புகள் இந்தளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதை விளக்கி பிரிட்டன் பல்கலைக்கழக பேராசிரியர் பில் மெக்குயர், “இங்கே வலுவான நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு அரிதாகவே இருந்தது. இதனால் இங்கே உள்ள கட்டிடங்கள் போதுமான அளவு வலுவாகக் கட்டப்படவில்லை. இதன் காரணமாகவே இந்த வலுவான நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்து, அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here