மாலத்தீவு அதிபர் தேர்தலில் இழுபறி: 2-வது சுற்று தேர்தல் நடத்த முடிவு

மாலத்தீவு நாட்டில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறி ஏற்பட்டுள்ளது. இதனால் 2-வது சுற்று தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதிபர் தேர்தல் தெற்கு ஆசிய நாடான மாலத்தீவில் நேற்று முன்தினம் அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஆளும் மாலத்தீவு ஜனநாயகக் கட்சியின் சார்பில் தற்போதைய அதிபர் இப்ராகிம் முகமது சோலிக் மீண்டும் போட்டியிடுகிறார்.

அவரை எதிர்த்து, பிரதான எதிர்க்கட்சியான மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சியில் சார்பில் முகமது முயிஸ் போட்டியிடுகிறார். இவர்கள் தவிர மேலும் 6 பேர் அதிபர் பதவிக்கான போட்டியில் களத்தில் உள்ளனர்.  நேற்று முன்தினம் நடந்த தேர்தலில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். இதனால் வாக்குப்பதிவு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து தேர்தலில் பதிவான வாக்குகள் உடனடியாக எண்ணப்பட்டன.

மாலத்தீவை பொறுத்தவரையில் அதிபர் தேர்தலில் வெற்றிப்பெற ஒரு வேட்பாளர் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றிருக்க வேண்டும். பெரும்பான்மை கிடைக்கவில்லை ஆனால் நடந்து முடிந்த தேர்தலில் 8 வேட்பாளர்களில் யாரும் 50 சதவீதத்துக்கு அதிகமான வாக்குகளை பெறவில்லை. அதே சமயம் எதிர்க்கட்சி வேட்பாளரான முகமது முயிஸ் 46 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று ஆச்சரியமூட்டும் வகையில் முன்னிலை பெற்றார்.

தற்போதைய அதிபர் இப்ராகிம் முகமது சோலிக் 39 சதவீத வாக்குகளை பெற்றார். தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறி ஏற்பட்டுள்ளதால் 2-வது சுற்று தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் நடந்து முடிந்த தேர்தலில் முதல் 2 இடங்களை பிடித்த எதிர்க்கட்சி தலைவர் முகமது முயிஸ் மற்றும் அதிபர் இப்ராகிம் முகமது சோலிக் போட்டியிடுவார்கள். இந்த மாத இறுதியில் 2-வது சுற்று தேர்தல் நடத்தப்படும் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா-சீனா செல்வாக்கு இந்திய பெருங்கடலின் முக்கிய கப்பல் வழித்தடத்தில் மாலத்தீவு அமைந்துள்ளதால் அங்கு தனது செல்வாக்கை செலுத்த இந்தியாவும், சீனாவும் போட்டியிடுகின்றன.  இது மாலத்தீவின் அரசியலிலும் எதிரொலிக்கிறது. அந்த வகையில் தற்போதைய அதிபர் இப்ராகிம் முகமது சோலிக் இந்தியா சார்புடையவராக அறியப்படுகிறார். அவர் 2-வது முறையாக அதிபராக வெற்றி பெறும் முனைப்பில் உள்ளார்.

அதேவேளையில் அவரை எதிர்த்து களமிறங்கி இருக்கும் முகமது முயிஸ், சீனாவின் ஆதரவாளராக உள்ளார். அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால் மாலத்தீவில் உள்ள இந்திய படைகளை அகற்றுவேன் என்றும், இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும் நாட்டின் வர்த்தக உறவுகளை சம நிலைப்படுத்துவேன் என்றும் வாக்குறுதி அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here