கோலாலம்பூர்:
கோலாலம்பூர் சாலைப் போக்குவரத்துத் துறையினர் நேற்று நடத்திய சிறப்பு நடவடிக்கையில் 32 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
நேற்றுக் காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த நடவடிக்கையில், பதிவு எண் விவரக்குறிப்புக்கு இணங்காதது, ஓட்டுநர் உரிமம் இல்லாதது மற்றும் பல்வேறு தொழில்நுட்பக் குற்றங்கள் உட்பட பல்வேறு குற்றங்களுக்காக 583 சம்மன்களும் விதிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கையில் மொத்தம் 3,778 மோட்டார் சைக்கிள்கள், வெளிநாட்டவர்கள் பயன்படுத்தும் முச்சக்கரவண்டிகள் தவிர, தகுதியான ஓட்டுநர் உரிமம் (சிடிஎல்) மற்றும் காலாவதியான மோட்டார் வாகன உரிமம் இல்லாத 32 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்றும், சாலை போக்குவரத்து சட்டம் 1987ன் கீழ் அவை பறிமுதல் செய்யப்பட்டன என்றும் தலைநகர ஜேபிஜே இயக்குனர் முகமட் ஜாக்கி இஸ்மாயில் கூறினார்.
சாலையில் பாதுகாப்பை உறுதிச் செய்வதன் முக்கியத்துவம் குறித்து மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் மற்றும் பின்னிருக்கை பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றார் அவர்.
“சாலை விபத்துகளின் விகிதத்தைக் குறைக்க சட்டத்திற்குக் கீழ்ப்படியுங்கள்” என்று முகமட் ஜாக்கி மேலும் கூறினார்.