இந்தியர்களை நிர்வாண படங்கள் மூலம் மிரட்டும் சீன கடன் செயலிகள் – அம்பலமான கொடூர மோசடி

மக்களை உடனடி கடன் செயலி வலையில் வீழ்த்தி, அவர்களை மிரட்டியும் அவமானப்படுத்தியும் பணம் பறிக்கும் ஒரு பெரிய மோசடி நடந்து வருகிறது. இந்தச் செயலிகளுக்காக பணியாற்றும் கடன் வசூலிப்பு முகவர்களின் துன்புறுத்தலால், இதுவரை குறைந்தது 60 இந்தியர்கள் தங்களது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர்.

மிக மோசமான இந்த ஏமாற்று வேலை மூலம் இந்தியாவிலும் சீனாவிலும் லாபம் ஈட்டும் நபர்களை பிபிசியின் புலனாய்வு அம்பலப்படுத்தியுள்ளது.

தாயைக் காப்பாற்றுவதற்கு ஒரு மகளின் போராட்டம்
அன்று, தொலைபேசியில் தனது அத்தையின் பதற்றமான குரலைக் கேட்டுக் கண்விழித்தார் ஆஸ்தா சின்ஹா. “உன் அம்மாவை வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்ல விடாதே,” என்றார் அவரது அத்தை.

அரைத்தூக்கத்தில் சென்று பார்த்தபோது, பக்கத்து அறையில் தனது அம்மா பூமி சின்ஹா பயந்து, அழுது கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார் அந்த 17 வயதுச் சிறுமி.

ஆஸ்தாவின் தாய் வேடிக்கையான, தைரியமான நபர். மும்பையைச் சேர்ந்த மதிப்புமிக்க வழக்கறிஞர். கணவரை இழந்த அவர், தனது மகளை தனியாக வளர்த்து ஆளாக்கியவர். அவர் மிகக் குழப்பமான மனநிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார்.

“அவர் உடைந்து நொறுங்கும் தருவாயில் இருந்தார்,” என்றார் அஸ்தா. பூமி மிகவும் பதற்றமாக, தனது முக்கியமான ஆவணங்கள் மற்றும் தொடர்புகள் எங்கே உள்ளன என அஸ்தாவிடம் சொல்லத் தொடங்கினார். அவர் வீட்டைவிட்டு வெளியேறத் தயாராகிறார் என்பதை உணர்ந்தார் ஆஸ்தா.

அவரைத் தடுக்க வேண்டும் என ஆஸ்தாவுக்குத் தெரியும். “அவளை உன் பார்வையில் இருந்து வெளியே விடாதே,” என ஆஸ்தாவிடம் அவர் அத்தை கூறியிருந்தார். “அவள் தன் வாழ்க்கையை முடித்துக் கொள்வாள்,” என்றும் அவர் ஆஸ்தாவிடம் கூறியிருந்தார்.

பூமி சின்ஹா பெற்ற கடன் தொகை எவ்வளவு?
ஆஸ்தா, தனது தாய் பூமிக்கு சில வித்தியாசமான தொலைபேசி அழைப்புகள் வருவதையும், அவர் யாரோ ஒருவருக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்பதையும் அறிந்திருந்தார். ஆனால், பூமி பல மாதங்களாக துன்புறுத்தல் மற்றும் உளவியல் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டது ஆஸ்தாவுக்கு தெரியவில்லை.

குறைந்தது 14 நாடுகளில் செயல்படும் ஓர் உலகளாவிய மோசடி கும்பலிடம் அவர் சிக்கியிருந்தார். அவர்கள், மக்களை அவமானப்படுத்தியும், அச்சுறுத்தியும் லாபம் ஈட்டுகின்றனர், அதன் மூலம் அவர்களின் வாழ்க்கையையும் சிதைக்கின்றனர்.

இந்த பண வசூலிப்பு வர்த்தக மாதிரி எளிமையானது, ஆனால் குரூரமானது.

எந்தச் சிரமமுமின்றி சில நிமிடங்களில் கடன் தர உறுதியளிக்கும் செயலிகள் ஏராளம் உள்ளன. அவை அனைத்தும் கொள்ளையடிப்பவை அல்ல. ஆனால், பல செயலிகளை நீங்கள் பதிவிறக்கம் செய்தவுடன் உங்கள் தொலைபேசியில் உள்ள தொடர்புகள், புகைப்படங்கள் மற்றும் அடையாள ஆவணங்களை எடுத்துக்கொண்டு, பின் அந்தத் தகவல்களைப் பயன்படுத்தி உங்களை மிரட்டி பணம் பறிக்கின்றன.

வாடிக்கையாளர்கள் சரியான நேரத்தில் கடனைத் திருப்பிச் செலுத்தாவிட்டால் – சில சமயங்களில் சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தினாலும் – இந்தச் செயலிகள் சேகரித்த தகவல்களை கால் சென்டருடன் பகிர்ந்து கொள்கிறார்கள். அங்கு மடிக்கணிணிகள் மற்றும் தொலைபேசிகளுடன் இருக்கும் இளம் முகவர்கள் மக்களைத் துன்புறுத்தவும், கடனை திருப்பி வாங்க அவர்களை அவமானப்படுத்தவும் பயிற்சியளிக்கப்படுகிறார்கள்.

2021-ஆம் ஆண்டின் இறுதியில், பூமி தனது அலுவலகத்திலிருந்து தனக்கு வரவேண்டிய பணத்திற்காகக் காத்திருந்த போது, பல கடன் செயலிகளிலிருந்து 47,000 ரூபாய் கடன் வாங்கினார். அந்தக் கடன் தொகை கிட்டத்தட்ட உடனடியாக வந்து சேர்ந்தது. ஆனால், அவர் பெற்ற கடனின் ஒரு பெரிய தொகை கட்டணமாக பிடித்தம் செய்யப்பட்டிருந்தது.

ஏழு நாட்களுக்குப் பிறகு அவர் கடனை திருப்பிச் செலுத்த வேண்டியிருந்தது. ஆனால், அவருக்கு வர வேண்டிய பணம் அவருக்கு வரவில்லை. அதனால், அவர் வேறொரு செயலியில் இருந்து கடன் வாங்கினார். பின், மற்றொரு செயலியிலும் வாங்கினார். அவரது கடனும் வட்டியும் 20 லட்சம் ரூபாய் வரை அதிகரித்தது.

விரைவில் கடன் வசூலிக்கும் முகவர்கள் அவரை தொலைபேசியில் அழைக்கத் தொடங்கினர். அவர்கள் விரைவிலேயே பூமியை மிகவும் தரக்குறைவாகப் பேசி, அவமானப்படுத்தவும், துன்புறுத்தவும் செய்தார்கள்.

அவர் பணத்தை திரும்பச் செலுத்தியிருந்தபோதும், அவர் பொய் சொல்கிறார் எனக் கூறினர். ஒரு நாளைக்கு 200 முறை அழைத்தனர். அவர் எங்கு வசிக்கிறார் என்று அவர்களுக்குத் தெரியும் என்று அந்த முகவர்கள் கூறினர். மேலும், அவரை எச்சரிக்கும் வகையில், இறந்த உடல்களின் படங்களை அவருக்கு அனுப்பினர்.

துன்புறுத்தல் அதிகரிக்க அதிகரிக்க, ஒரு கட்டத்தில், அவர்கள் பூமியினுடைய 486 தொடர்புகளுக்கும் அவர் ஒரு திருடி, ஒரு வேசி என குறுஞ்செய்தி அனுப்பப் போவதாக மிரட்டியுள்ளனர். அவரது மகளின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தப் போவதாக அவர்கள் மிரட்டியதால், பூமியால் தூங்க முடியவில்லை.

நண்பர்களுக்கு நிர்வாண புகைப்படங்களை அனுப்பிய நிறுவனம்
அவர் தனது நண்பர்கள், குடும்பத்தினர் தவிர மேலும் பல செயலிகளிடம் இருந்து கடன் வாங்கினார் – ஆக மொத்தம் 69 பேரிடம் இருந்து கடன் வாங்கினார்.

இரவில் அவர் வேண்டிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான். மறுநாள் விடியவே கூடாது என்பதுதான் அது. ஆனால், காலை 7 மணிக்குத் தவறாமல், அவரது தொலைபேசி இடைவிடாமல் ஒலிக்கத் தொடங்கும்.

இறுதியாக, பூமி தான் வாங்கியிருந்த முழு கடனையும் திருப்பிச் செலுத்தினார். ஆனால், குறிப்பாக ஒரு செயலிஆசான் லோன் (Asan Loan) – அழைப்பதை நிறுத்தவில்லை. முழுமையாக சோர்வுற்றிருந்ததால், அவரால் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. அவ்வப்போது அதீதமாகப் பதற்றமடையத் தொடங்கினார்.

ஒரு நாள் அவரது சக ஊழியர் ஒருவர், அவரை தனது இருக்கைக்கு அருகே அழைத்து, தனது தொலைபேசியில் ஏதோ ஒன்றைக் காண்பித்தார் – அது அவரது நிர்வாண, ஆபாசப் படம்.

அவரது புகைப்படம் மிக மோசமாக ஃபோட்டோஷாப் செய்யப்பட்டிருந்தது. பூமியின் முகம் வேறொருவரின் உடலில் பொருத்தப்பட்டிருந்தது. அது அவருக்கு அருவெறுப்பையும், அவமானத்தையும் ஏற்படுத்தியது. அவர் அந்த சக ஊழியரின் மேசைக்கு அருகிலேயே மயங்கிச் சரிந்தார்.

இது ஆசான் லோன் செயலியால் அவரது தொலைபேசியில் உள்ள அனைத்து தொடர்புகளுக்கும் அனுப்பப்பட்டிருந்தது. அப்போதுதான் பூமி தன் உயிரை மாய்த்துக்கொள்ள நினைத்தார்.

உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்களால் நடத்தப்படும் இதுபோன்ற மோசடிக்கான ஆதாரங்களை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், இந்தியாவில் மட்டும், கடன் செயலிகளால் துன்புறுத்தப்பட்டு குறைந்தது 60 பேர் தங்களது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர் என்பதை பிபிசி கண்டறிந்துள்ளது. இதில், 50%-க்கும் மேற்பட்ட தற்கொலைகள் தெலங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் நடந்துள்ளன.

இதில், பெரும்பாலானவர்கள் 20 மற்றும் 30 வயதுடையவர்கள். ஒரு தீயணைப்பு வீரர், விருது பெற்ற இசைக் கலைஞர், மூன்று வயது மற்றும் ஐந்து வயது மகள்களைக் கைவிட்ட ஒரு தம்பதி, ஒரு தாத்தா மற்றும் பேரன் ஆகியோர் அடக்கம். உயிரை மாய்த்துக் கொண்டவர்களில் 4 பேர் பதின்ம வயதினர்.

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் மோசடியைப் பற்றி பேசுவதற்குக் கூசிப்போகிறார்கள். குற்றவாளிகள் பெரும்பாலும் அறிமுகம் இல்லாதவர்களாகவும், பார்த்திராத நபர்களாகவும் இருக்கிறார்கள். பல மாதங்களாகத் தேடியதில், பல கடன் செயலிகளில் கடன் வசூலிப்பு முகவராக பணியாற்றிய ஒரு இளைஞனை பிபிசி கண்டுபிடித்தது.

கடன் வசூல் முகவர்கள் என்ன செய்கிறார்கள்?
ரோஹன் – அவரது உண்மையான பெயர் அல்ல – தாம் நேரில் பார்த்த அந்தத் துன்புறுத்தல்கள் தம்மை மிகவும் பாதித்ததாகக் கூறுகிறார்.

“பல வாடிக்கையாளர்கள் கதறி அழுதனர், சிலர் தற்கொலை மிரட்டல் விடுத்தனர்,” என்கிறார் அவர். “இது இரவு முழுவதும் என் நினைவில் ஓடிக்கொண்டே இருக்கும்,” என்றும் கூறினார். மோசடியை அம்பலப்படுத்த பிபிசிக்கு உதவ அவர் ஒப்புக்கொண்டார்.

மெஜஸ்டி லீகல் சர்வீசஸ் மற்றும் கால்ஃப்லெக்ஸ் கார்ப்பரேஷன் ஆகிய இரண்டு வெவ்வேறு கால் சென்டர்களில் அவர் வேலைக்கு விண்ணப்பித்து, பல வாரங்கள் அங்கு ரகசியமாகப் படமெடுத்தார்.

ரோஹன் 100-க்கும் மேற்பட்ட துன்புறுத்தல் மற்றும் மிரட்டல் நிகழ்வுகளை பதிவு செய்துள்ளார். மிரட்டிப் பணம் பறிப்பதை முதல் முறையாக கேமராவில் படம் பிடித்துள்ளார் ரோஹன்.

ரோஹன் சௌராசியாவின் நம்பிக்கையைப் பெற்றார். முதலீட்டாளராகக் காட்டிக்கொண்ட ஒரு பத்திரிகையாளருடன் சேர்ந்து, ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். அந்தச் சந்திப்பின்போது, மோசடி எவ்வாறு செயல்படுகிறது என்பதை விளக்குமாறு அவரிடம் கேட்டார்கள்.

ஒரு வாடிக்கையாளர் கடன் வாங்கும்போது, அவர்கள் தங்கள் தொலைபேசியில் உள்ள தொடர்புகளை அணுக அச்செயலிகளுக்கு உரிமையை வழங்குகிறார்கள் என்று அவர் விளக்கினார்.

பணத்தை மீட்பதற்காக கால்ஃப்லெக்ஸ் கார்ப்பரேஷன் பணியமர்த்தப்படுகிறது. வாடிக்கையாளர் பணம் செலுத்தத் தவறினால், இந்நிறுவனம் முதலில் அவர்களை தொந்தரவு செய்யத் தொடங்குகிறது, பின்னர் அவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களை தொந்தரவு செய்கிறது. பணத்தை திருப்பிச் செலுத்தும் வரை அவரது ஊழியர்கள் எதையும் சொல்ல முடியும் என அவர்களிடம் கூறினார் சௌராசியா.

“வாடிக்கையாளர்கள் அவமானத்தின் காரணமாக பணம் செலுத்துகிறார்கள்,” என அவர் கூறினார். “அவர்களது தொடர்பு பட்டியலில் (Contacts list) அவரது வாழ்க்கையை சிதைக்கக்கூடிய ஒரு நபரையாவது நீங்கள் கண்டுபிடிக்கலாம்,” என்றும் செளராசியா கூறினார்.

சௌராசியாவை பிபிசி நேரடியாக அணுகியது. ஆனால், அவர் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. கால்ஃப்லெக்ஸ் கார்ப்பரேஷனும் எங்களுக்குப் பதிலளிக்கவில்லை.

கடன் பெற்றவர்களை திருடர்கள் என்று திட்டும் முகவர்கள்
‘ஹரி’ – அவரது உண்மையான பெயர் அல்ல – மௌனிகா கடன் வாங்கிய செயலிகளில் ஒன்றில் கடனை வசூலிப்பவராக கால் சென்டரில் பணிபுரிந்துள்ளார். அந்நிறுவனம் அவருக்கு நல்ல சம்பளம் கொடுத்தது, ஆனால் மௌனிகா இறந்த நேரத்தில், அவர் ஏற்கனவே இந்த மோசடியின் ஒரு பகுதியாக இருந்தார் என்பதால் மிகவும் கவலையாக இருந்துள்ளார்.

அவர் தான் தவறான அழைப்புகளைச் செய்யவில்லை என்று கூறினாலும் – முதலில் கண்ணியமான அழைப்புகளை செய்த குழுவில் தான் இருந்ததாக அவர் கூறுகிறார் – ஆனால், அங்குள்ள மேலாளர்கள் துன்புறுத்தவும், அச்சுறுத்தவும் அறிவுறுத்தியதாக அவர் கூறினார்.

பாதிக்கப்பட்டவரின் தொடர்புகளுக்கு முகவர்கள் குறுஞ்செய்தி அனுப்புவார்கள், பாதிக்கப்பட்டவரை ஒரு ஏமாற்றுக்காரன், திருடன் போலச் சித்தரிப்பார்கள்.

“ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்தின் முன் தங்களின் நற்பெயரை தற்காத்துக்கொள்ள வேண்டும். வெறும் 5,000 ரூபாய்க்கு அந்த நற்பெயரை யாரும் கெடுத்துக் கொள்ள மாட்டார்கள்,” என்றார்.

பணம் செலுத்தப்பட்டதும், ‘வெற்றி!’ என்று கணினி காண்பிக்கும். பின், அவர்கள் அடுத்த வாடிக்கையாளரைத் துன்புறுத்தச் செல்வார்கள்.

வாடிக்கையாளர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வதாக மிரட்டத் தொடங்கியபோது யாரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை – பின்னர் தற்கொலைகள் நடக்க ஆரம்பித்தன. ஊழியர்கள் தங்கள் முதலாளியான பர்சுராம் தக்வேவை அழைத்து அவர்கள் மிரட்டல் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டுமா என்று கேட்டார்கள்.

லியாங் டியான் டியான், தக்வே

அடுத்த நாள் தக்வே அலுவலகத்திற்கு வந்தார். அவர் மிகவும் கோபமாக இருந்தார். “அவர் சொன்னார், ‘சொன்னதைச் செய்யுங்கள், பணத்தை வசூல் செய்யுங்கள்,” என ஹரி கூறினார். அதனால், அவர்கள் அதையே செய்தார்கள்.

கடன் நிறுவனங்களுக்கு சீனாவுடன் என்ன தொடர்பு?
தக்வே இரக்கமற்றவர். அவர் இந்த தொழிலை தனியாக நடத்தவில்லை. சில நேரங்களில், மென்பொருள் ஆபரேஷன்கள் எந்த ஒரு எச்சரிக்கையும் இல்லாமல் சீன மொழிக்கு மாறும், என்றார் ஹரி.

தக்வே, லியாங் டியான் டியான் என்ற சீனப் பெண்ணை மணந்தார். இருவரும் சேர்ந்து புனேவில் ஹரி பணிபுரிந்த, ‘ஜியாலியாங்’ என்ற கடன் வசூல் நிறுவனத்தை நிறுவினர்.

2020-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், தக்வே மற்றும் லியாங் துன்புறுத்தல் தொடர்பான வழக்கை விசாரிக்கும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சில மாதங்களுக்குப் பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

2022-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், அவர்கள் மீது மிரட்டி பணம் பறித்தல், மிரட்டல் மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அந்த ஆண்டின் இறுதியில் அவர்கள் தலைமறைவாக இருந்தனர்.

எங்களால் தக்வேவை தொடர்புகொள்ள முடியவில்லை. ஆனால், ஜியாலியாங் பணியாற்றிய செயலிகளை நாங்கள் ஆராய்ந்தபோது, அது எங்களை லி ஷியாங் என்ற சீன வணிகரிடம் அழைத்துச் சென்றது.

அவர் ஆன்லைனில் இல்லை. ஆனால் அவருடைய ஊழியர் ஒருவரின் தொடர்புடைய தொலைபேசி எண்ணைக் கண்டறிந்தோம், முதலீட்டாளர்களாகக் காட்டிக்கொண்டு லியுடன் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்தோம்.

அவரது முகம் கேமராவுக்கு அருகில் இருந்த நிலையில், அவர் இந்தியாவில் தனது வணிகங்களைப் பற்றி பெருமையாகக் கூறினார்.

“நாங்கள் இப்போதும் செயல்படுகிறோம், நாங்கள் ஒரு சீன நிறுவனம் என்பதை இந்தியர்களுக்குத் தெரியப்படுத்தவில்லை,” என அவர் கூறினார்.

2021-ஆம் ஆண்டு, லியின் இரண்டு நிறுவனங்கள் கடன் செயலிகளால் துன்புறுத்தப்படுவதை விசாரிக்கும் இந்திய காவல்துறையினரால் சோதனை செய்யப்பட்டன. அவர்களது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன.

நிர்வாண புகைப்படங்களை அனுப்புவது ஏன்?
“எங்கள் முதலீட்டை விரைவாக மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டிருப்பதால், நாங்கள் நிச்சயமாக உள்ளூர் வரிகளை செலுத்த மாட்டோம். நாங்கள் வழங்கும் வட்டி விகிதங்கள் உள்ளூர் சட்டங்களை மீறுகின்றன என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்,” என அவர் கூறினார்.

இந்தியா, மெக்ஸிகோ மற்றும் கொலம்பியாவில் தனது நிறுவனத்திற்கு சொந்த கடன் செயலிகள் இருப்பதாக லி எங்களிடம் கூறினார். அவர் தென்கிழக்கு ஆசியாவில் ஆபத்தை கட்டுப்படுத்தும் மற்றும் கடன் வசூல் சேவைகளில் ஒரு தொழில்துறை தலைவராக இருப்பதாகக் கூறினார்.

மேலும், இப்போது லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா முழுவதும் விரிவடைந்து வருவதாகவும் – பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இந்தியாவில் 3,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் “கடன் வசூல் சேவைகளை” வழங்க தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.

பின், அவர் தனது நிறுவனம் கடனை வசூலிக்க என்ன செய்கிறது என்பதையும் விளக்கினார்.

“நீங்கள் கடனை திருப்பிச் செலுத்தவில்லை என்றால், நாங்கள் உங்களை வாட்ஸப்பில் சேர்க்கலாம். மூன்றாவது நாளில், நாங்கள் உங்களுக்கு ஒரே நேரத்தில் வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தியும் அனுப்புவோம், உங்கள் தொலைபேசிக்கும் அழைப்போம். பின், உங்கள் செல்போனில் எடுத்த மற்ற தொடர்பு எண்களுக்கும் அழைப்போம். பின், நான்காவது நாளில், உங்கள் தொடர்புகளில் உள்ள யாரும் பணத்தை செலுத்தவில்லை என்றால், அதற்கு பின் எங்களிடம் குறிப்பிட்ட விரிவான நடைமுறைகள் உள்ளன.

“நாங்கள் அவரது அழைப்பு பதிவுகளை சேகரிப்போம், பின் அதில் உள்ள நிறைய தகவல்களை சேகரிப்போம். இது, அவர் நம் முன் நிர்வாணமாக இருப்பதைப் போன்றது.”

பூமி சின்ஹாவால் துன்புறுத்தல், அச்சுறுத்தல்கள், வசவுகள் மற்றும் சோர்வு ஆகியவற்றைக் கையாள முடிந்தது. ஆனால், தன்னை ஆபாசப் படத்துடன் சேர்த்த அவமானத்தை கையாள முடியவில்லை.

“அந்தச் செய்தி உண்மையில் உலகத்தின் முன்னிலையில் என்னை நிர்வாணமாக்கியது,” என அவர் கூறினார்.

“நான் சுயமரியாதை, ஒழுக்கம், கண்ணியம் எல்லாவற்றையும் ஒரு நொடியில் இழந்துவிட்டேன்,” என்றார் அவர்.

வக்கீல்கள், கட்டடக் கலைஞர்கள், அரசு அதிகாரிகள், வயதான உறவினர்கள் மற்றும் அவரது பெற்றோரின் நண்பர்களுடன் இது பகிரப்பட்டதால் அவர்கள் அவரை மீண்டும் பழைய மாதிரி பார்க்கமாட்டார்கள்.

“ஒரு உடைந்த கண்ணாடியை நீங்கள் மீண்டும் இணைத்தால், அதன் மீது விரிசல்கள் இருப்பதைப் போன்று, அது என்னை முழுவதுமாக சிதைத்துவிட்டது,” என்றார் அவர்.

அவர் 40 ஆண்டுகளாக வாழ்ந்த இடத்தில் அண்டை வீட்டாரால் ஒதுக்கப்பட்டார்.

“இன்றைய நிலையில் எனக்கு நண்பர்கள் இல்லை. நான் மட்டும்தான் இருக்கிறேன்,” எனறார் அவர்.

அவரது குடும்பத்தில் சிலர் இன்னும் அவரிடம் பேசுவதில்லை. அவருடன் பணிபுரியும் ஆண்கள் தன்னை நிர்வாணமாக சித்தரிக்கிறார்களோ என்று அவர் தொடர்ந்து அச்சப்பட்டுக் கொண்டே இருக்கிறார்.

அவரது மகள் ஆஸ்தா அவரைக் கண்ட அன்று காலை அவர் மிகவும் நெருக்கடியான மன நிலையில் இருந்தார். ஆனால் அவர் மீண்டும் போராட முடிவு செய்த தருணம் அது. “நான் இப்படி இறக்க விரும்பவில்லை,” என அவர் முடிவு செய்தார்

அவர் போலீசில் புகார் அளித்தார். ஆனால், அதன்பின் எதுவும் நடக்கவில்லை. அவரால் செய்ய முடிந்ததெல்லாம், அவரது எண்ணை மாற்றி, அவரது சிம் கார்டை அகற்றுவதுதான் – அஸ்தாவிற்கு அழைப்புகள் வர ஆரம்பித்ததும், அவரும் தனது சிம் கார்டை அகற்றிவிட்டார். அவர் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் சக ஊழியர்களிடம் அழைப்புகள் மற்றும் குறுஞ் செய்திகளைப் புறக்கணிக்கச் சொன்னார். இறுதியில், அவை அனைத்தும் நிறுத்தப்பட்டன.

பூமி தனது சகோதரிகள், அவரது முதலாளி மற்றும் கடன் செயலிகளால் துன்புறுத்தப்பட்ட ஒரு ஆன்லைன் சமூகத்தின் ஆதரவைப் பெற்றார். ஆனால் பெரும்பாலும், அவர் தன் மகளிடம் தான் வலிமையைக் கண்டார்.

பூமி சின்ஹா அவரது மக்களுடன்

“இப்படி ஒரு மகளைப் பெற நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும்,” என்றார் அவர்.

அவள் என்னுடன் நிற்கவில்லை என்றால், கடன் செயலிகளால் உயிரை மாய்த்துக் கொண்டவர்களில் நானும் ஒருவராக இருந்திருப்பேன்,” என்றார் பூமி

இந்த அறிக்கையில் உள்ள குற்றச்சாட்டுகளை ஆசான் லோன் நிறுவனத்திடமும், தலைமறைவாக உள்ள லியாங் டியான் டியான் மற்றும் பர்சுராம் தக்வே ஆகியோரிடமும் முன்வைத்தோம். அந்நிறுவனமோ அல்லது அந்தத் தம்பதியோ பதிலளிக்கவில்லை.

இதுகுறித்து லி ஷியாங்கிடம் கருத்து கேட்டபோது, அவரும் அவரது நிறுவனங்களும் அனைத்து உள்ளூர் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்குவதாகவும், கொள்ளையடிக்கும் கடன் செயலிகளை ஒருபோதும் இயக்கவில்லை என்றும், ஜியாலியாங்குடன் ஒத்துழைப்பை நிறுத்தியதாகவும், வாடிக்கையாளர்களின் தொடர்புத் தகவலைச் சேகரிக்கவோ பயன்படுத்தவோ இல்லை என்றும் அவர் பிபிசியிடம் கூறினார்.

தனது கடன் மீட்பு கால் சென்டர்கள் கடுமையான தர நிலைகளை கடைபிடிப்பதாகவும், சாதாரண இந்தியர்களின் துன்பங்களில் இருந்து லாபம் பெறுவதை மறுப்பதாகவும் அவர் கூறினார்.

மெஜஸ்டி லீகல் சர்வீசஸ், வாடிக்கையாளர்களின் தொடர்புகளை பயன்படுத்தி கடன்களை திரும்பப் பெறுவதை மறுக்கிறது. முறைகேடான அல்லது அச்சுறுத்தும் அழைப்புகளைத் தவிர்க்குமாறு தங்கள் முகவர்களுக்கு அறிவுறுத்தப்படுவதாகவும், நிறுவனத்தின் கொள்கைகளை மீறுவோர் பணிநீக்கம் செய்யப்படுவதாகவும் அவர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here