கனடாவில் சீக்கிய பிரிவினைவாதத் தலைவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பூசல் ஏற்பட்டது. இதையடுத்து இந்தியாவிலிருந்து 41 தூதர்களை கனடா மீட்டுக் கொண்டுள்ளது.
இந்தியா, இரண்டு வாரங்களுக்கு முன்பு தமது நாட்டில் உள்ள டஜன் கணக்கான கனடிய தூதர்களை மீட்டுக் கொள்ளும்படி கனடாவுக்கு உத்தரவிட்டது. அப்படி அவர்கள் மீறி தங்கி இருந்தால் அவர்களின் தூதருக்குரிய தகுதி நீக்கப்படும் என்று இந்தியா எச்சரித்திருந்தது.
ஆனால் கனடிய அதிகாரிகள், இதனை அனைத்துலகச் சட்டத்தை மீறும் செயலாக்கும் என்று சாடியிருந்தனர்.
கடந்த ஜூன் மாதம் 18ஆம் தேதி கனடாவில் வசித்துவந்த சீக்கிய பிரிவினைவாதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜாரை அடையாளம் தெரியாத நபர்கள் சுட்டுக் கொன்றனர். இந்தக் கொலையில் இந்திய புலனாய்வு அமைப்பிற்குத் தொடர்பிருக்கிறது என்று கனடா குற்றம்சாட்டியது. அதோடு இந்திய உயர் அதிகாரிகளை வெளியேறவும் அது உத்தரவிட்டது.
இதற்குப் பதிலடியாக இந்தியா, 41 கனடிய தூதர்களை தம்நாட்டை வெளியேறும்படி கூறியது.
இந்த நிலையில் வியாழக்கிழமை பேசிய கனடிய வெளியுறவு அமைச்சர் மெலானி ஜோலி, பல கனடிய தூதர்களும் அவர்களது குடும்பத்தினரும் இந்தியாவைவிட்டு வெளியேறியிருப்பதை உறுதி செய்தார்.
இந்தியாவில் உள்ள 21 தூதர்களைத் தவிர மற்றவர்களுக்கு அக்டோபர் 20ஆம் தேதி தூதருக்குரிய தகுதி விலக்கப்படும் என்று இந்தியா கூறியிருந்ததாக அவர் கூறினார்.
இந்தக் கெடு முடிவதற்குள் கனடிய தூதர்கள் மீட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
“எஞ்சிய 21 தூதர்கள் இந்தியாவின் உள்ளனர். பெரும்பாலான தூதர்கள் மீட்டுக்கொள்ளப்பட்டால் ஆட்பற்றாக்குறை காரணமாக கனடா அதன் சேவைகளை குறைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது,” என்று அமைச்சர் ஜோலி தெரிவித்தார்.



















