இயற்கை அதிசயங்களின் உறைவிடம் தியோமான் தீவு

இயற்கை அதிசயங்களின் உறைவிடமாக விளங்கும் தியோமான் தீவின் (பூலாவ் தியோமான்) வெப்ப மண்டலங்களுக்கிடையிலான காவியங்களைச் சுற்றுப்பயணிகள் கண்டு ரசிக்காமல் விட்டுவிடக்கூடாது.

பொன்னிற ஜுவாரா கடற்கரை மணலில் நீங்கள் தடம் பதிக்கும்போது இனம்புரியாத ஆனந்தம் உங்களை ஆரத் தழுவும்.

மேலும் தெக்கேக் வில்லேஜின் அழகும் இயற்கை வளங்களும் உங்களை எல்லையில்லா பரவசத்தில் மூழ்கடித்துவிடும் என்றால் மிகையாகாது.


இவைதவிர ஆசா நீர்வீழ்ச்சியின் அழகைப் பருக ஆயிரம் கண்கள் வேண்டும். சில்லென்று சிதறிப் பரவும் நீரின் தூறல் கிறங்க வைக்கும்.

அத்தோடு மெரின் பார்க் எனும் கடல்பூங்கா நீருக்கடியில் இன்னோர் இயற்கை அழகை ரசிக்கலாம். நீச்சலில் ஆர்வமுள்ளவர்களுக்கு இது ஒரு சொர்க்கபுரி.

ரெங்கிங் தீவுக்கான பயணம் நம்மை மதி மயங்க வைக்கும். அங்கு இயற்கை வளங்கள், பசுமை நிறைந்த காட்சிகள் மறக்க முடியாத அனுபவங்களை பெற்றுத் தரும் என்றால் அது மிகையாகாது.

மலேசிய கடற்கரைகளின் அழகும் இயற்கை வனப்பும் உங்களை வரவேற்று அரவணைத்துக்கொள்ளத் தயாராக இருக்கிறது.

உங்கள் பயணம் எப்போது?

தியோமான் தீவு, தீபகற்ப மலேசியாவின் கிழக்குக்கரையில் உள்ளது. தென் சீனக்கடல் அரவணைப்பிலும் உள்ள தீவு தியோமான். இயற்கையின் உறைவிடமாகவும் அழகிய கடற்கரையையும் தன்னகத்தே அரவணைத்துக் கொண்டுள்ளது. முக்குளிப்போருக்கும் நீச்சல் பிரியர்களுக்கும் சொர்க்கம்.


பவளப் பாறைகள், கடற்பாசி வகைகள் ஆகிய இயற்கை வளங்கள் மனத்தைக் கவரும். இதமான ஆனந்தத்தைத் தரும். கடல் விரும்பிகளுக்கு ஓர் உன்னதமான இயற்கைப் பொக்கிஷம். பல்வகை வண்ணத்துப்பூச்சிகள், பலவகையான குரங்கு இனங்கள், பல்லி வகைகளின் இல்லமாகவும் தியோமான் தீவு புகழ்பெற்றிருக்கிறது.

தியோமான் தீவின் சுற்றளவு 136 சதுர கிலோ மீட்டர். கிட்டத்தட்ட 245 கிலோ மீட்டர் நீளமுள்ள அழகிய கடற்கரையைக் கொண்டிருக்கிறது.

இங்கு ஜுவாரா கடல் ஆமை காப்பகமும் உள்ளது. கடல் ஆமைகள் முட்டையிட்டு குஞ்சுபொரிக்கும் வரை உரிய பாதுகாப்பு வழங்கப்படுகிறது. கடல் ஆமைகள் பற்றிய ஆய்வும் ஆராய்ச்சியும் இங்கு நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here