இஸ்ரேல் தாக்குதலால் காஸா தேவாலயத்தில் தஞ்சமடைந்தோர் உயிரிழப்பு

காஸா:

காஸாவில் இஸ்‌ரேல் மேற்கொண்ட தாக்குதலில் அங்குள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தேவாலயத்தில் தஞ்சம் அடைந்திருந்த சிலர் மாண்டனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

Greek Orthodox Saint Porphyrius Church என்ற தேவாலயம் அந்தத் தாக்குதலில் சேதமடைந்தது. காஸாவில் உள்ள ஆகப் பழைமையான தேவாலயம் அது.

சம்பவத்தில் 18 பேர் மாண்டதாகவும் 20க்கு மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் காஸா அதிகாரிகளை மேற்கோள்காட்டி அல் ஜசீரா நிறுவனம் தகவல் வெளியிட்டது.

ஏவுகணை பாய்ச்சும் தளத்தைக் குறிவைத்து தங்கள் போர் விமானங்கள் தாக்குதல் மேற்கொண்டதாக இஸ்‌ரேலியத் தற்காப்புப் படை, ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தது.

அதில் தேவாலயத்தின் சுவர் ஒன்று சேதமடைந்ததாக அது குறிப்பிட்டது.

உயிரிழப்புகள் குறித்து அறிந்திருப்பதாகவும் அதுகுறித்து ஆய்வு செய்வதாகவும் இஸ்ரேலியத் தற்காப்புப் படை கூறியது.

தாக்குதலால் தேவாலயத்தின் முகப்பு சேதமடைந்ததாகவும் அருகில் உள்ள கட்டடம் இடிந்து விழுந்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் கூறினர்.

இஸ்ரேலின் தாக்குதலுக்கு தேவாலயத் தரப்பு வலுவான கண்டனம் தெரிவித்துள்ளது.

அப்பாவிப் பொதுமக்களுக்குப் புகலிடம் அளித்துள்ள தேவாலயங்கள்மீது தாக்குதல் நடத்துவது போர்க் குற்றத்திற்கு ஈடாகும். இத்தகைய நடவடிக்கைகளை அலட்சியப்படுத்தக்கூடாது என்று அது கூறியது.

கடந்த 13 நாள்களாக குடியிருப்புகள்மேல் இஸ்ரேல் நடத்தும் ஆகாயத் தாக்குதல்களில் வீடுகளை இழந்தோர் அந்த தேவாலயத்தில் தஞ்சம் அடைந்திருந்தனர். அவர்களில் பெண்களும் குழந்தைகளும் அடங்குவர் என்று அது குறிப்பிட்டது.

செயிண்ட் போர்ஃபிரியோஸ் தேவாலயம், கடந்த செவ்வாய்க்கிழமை தாக்கப்பட்ட அல்-அஹ்லி அராப் மருத்துவமனைக்கு அருகில் அமைந்துள்ளது.

மருத்துவமனை தாக்கப்பட்டதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். அதன் தொடர்பில் இஸ்ரேல், ஹமாஸ் என மோதலில் ஈடுபட்டுள்ள இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் குறைகூறுகின்றனர்.

அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட தாக்குதலில் பொதுமக்கள் உட்பட 1,400 பேர் உயிரிழந்ததாக இஸ்ரேல் கூறுகிறது.

இஸ்ரேலின் பதிலடியில் காஸாவைச் சேர்ந்த 3,785 பாலஸ்தீனர்கள் மாண்டதாகவும் அவர்களில் பெரும்பாலோர் பொதுமக்கள் என்றும் ஹமாஸ் சுகாதார அமைச்சு கூறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here