2023ஆம் ஆண்டு Miss SHOPhia Shopping Hunt 5.0 பினாங்கில் நடைபெற்ற ஆய்வுடன் கூடிய தேடல் பயணம்.

கவின்மலர்

ஜார்ஜ்டவுன்:

மிஸ் ஷோப்பியா ஷாப்பிங் ஹண்ட் 5.0 (Miss SHOPhia Shopping Hunt 5.0) – 2023 என்னும் மாறுபட்ட ஆய்வுடன் கூடிய தேடல் பயணம் பினாங்கில் நடைபெற்றது.

மலேசிய சுற்றுலாத்துறையின் ஏற்பாட்டில் கோலாலம்பூர், சிலாங்கூருக்கு வெளியே அதன் நோக்கத்தை விரிவுபடுத்துவதற்கான ஒரு மாறுபட்ட முயற்சியாக இத்திட்டம் அமைந்தது. வரலாற்றுப் புகழ்பெற்ற இடங்களையும் வணிகத் தளங்களையும் அடையாளம் காணும் இப்பயணம் பினாங்கு மாநிலத்தின் இதயத்துடிப்பாகக் கருதப்படும் கலாச்சாரம், உணவு செழுமைகளைக் கொண்ட நகரமான ஜார்ஜ்டவுனை மையமாகக் கொண்டு நடைபெற்றது.

மொத்தம் 52 குழுக்களைச் சேர்ந்த 200 பங்கேற்பாளர்கள் இத்தேடல் பயணத்தில் கலந்துகொண்டனர். வணிக நடுவங்களில் மட்டும் கவனம் செலுத்திய முந்தையத் திட்டங்களைப் போல் அல்லாமல் இந்த ஆண்டு மிஸ் ஷோப்பியா ஷாப்பிங் ஹண்ட் 5.0 பினாங்கு முழுவதையும் தழுவியதாக அமைந்தது. பரபரப்பான வணிக இடங்கள் முதல் யுனெஸ்கோ அறிவித்துள்ள பாரம்பரிய தளங்கள் மேலும் சுவைமிக்க சமையல் இடங்கள், உணவு வகைகள் வரை அதன் எண்ணற்ற அழகை ஆராய பங்கேற்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இவ்வாண்டின் தேடல் வேட்டையானது, பொதுப்போக்குவரத்து, மின்-ஹெய்லிங் சேவைகளைப் பயன்படுத்துதல், சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஆராய்வதில் சிறப்புக் கவனம் செலுத்துவதில் முன்னுரிமை தரப்பட்டிருந்தது.அடையாளம் காணப்பட்ட 19 இடங்களைக் கண்டுபிடிக்க காலை 9.30 மணி தொடங்கி பிற்பகல் 3.00 மணிக்குள் நிறைவுபெறும் வகையில் அமைக்கப்பட்டிருந்த இந்த அற்புதமான சாகசத்தை மொத்தம் 52 அணிகள் ஆர்வத்துடன் பின்தொடர்ந்தன.

இது பல்வேறு உள்நாட்டு, வெளிநாட்டு பங்கேற்பாளர்கள் பங்கேற்கும் வகையில் அமைந்தது. ஊடகப் பிரதிநிதிகளுடன் புருணையிலுள்ள தனது சக ஊழியர்களுடன் அணுக்கமான ஒத்துழைப்புடன் மலேசிய சுற்றுலாத்துறை ஒரு பிரத்தியேக மிஸ் ஷோப்பியா ஷாப்பிங் ஹண்ட் 5.0 சுற்றுலாத் திட்டத்தை உருவாக்கியது. தங்குமிடம், விமான டிக்கெட்டுகள், வேறு பல ஏற்பாடுகளை உள்ளடக்கியத் திட்டத்திற்கு ஒரு நபருக்கு 1,300ரிங்கிட் செலவில் கோலாலம்பூரில் தொடங்கிய 3 பகல், 2 இரவுகள் அதிவேக அனுபவத்தைப் பெறும் வகையில் இத்திட்டம் வகுக்கப்பட்டிருந்தது.இதன் வழி சுற்றுப்பயணிகள் சாகசத்துடன் கூடிய விடுமுறையை கேளிக்கை மிகுந்த சாரத்தை அனுபவிக்க முடிந்தது.

பினாங்கின் முகாமை அடையாளமாகவுள்ள கொம்தாரிலுள்ள தி டோப்பில் (The TOP) தொடங்கி கேர்னி பராகோன் மாலில் ( Gurney Paragon Mall ) நிறைவு பெற்ற தேடல் பயணத்தை மலேசிய சுற்றுலாத்துறையின் விளம்பரப் பிரிவு துணைத் தலைமை இயக்குநர் டத்தோ மூசா ஹாஜி யூசோப் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். கேர்னி பராகோன் மாலில் நடைபெற்ற நிறைவு விழாவில் பினாங்கு மாநில சுற்றுலா, படைப்பாற்றல் பொருளாதாரத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் வோங் ஹொன் வாய் தலைமை வகித்து பரிசளிப்பு விழாவிற்கு மேலும் சிறப்பு சேர்த்தார்.

அவர் தமதுரையில் பினாங்கு சுற்றுப்பயணிகளைக் கவரும் பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளைக் கொண்ட இடங்களைக் கொண்டிருப்பதாகக் கூறினார்.மேலும் நாட்டின் மூன்றில் ஒரு பகுதி ஏற்றுமதி உற்பத்தியைப் பினாங்கு உருவாக்குவதாகத் தெரிவித்தார். அண்டை நாடுகளின் சிறந்த மருத்துவ மையமாகவும் பினாங்கு திகழ்கிறது என்று அவர் குறிப்பிட்டார். மலேசிய சுற்றுலாத்துறையின் விளம்பரப் பிரிவு துணைத் தலைமை இயக்குநர் டத்தோ மூசா ஹாஜி யூசோப் மிஸ் ஷோப்பியா ஷாப்பிங் ஹண்ட் 5.0 என்பது மலேசியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் பல்வேறு ஆய்வுகள், நிலையான பயணத்தின் கொண்டாட்டமாகும் என்று கூறினார்.

நாட்டின் உள்நாட்டு சுற்றுலாவில் வணிகத்தின் (ஷாப்பிங் ) வழி மிகப்பெரிய பங்களிப்பாக 64.1 பில்லியன் ரிங்கிட் வரவை வழங்கியது என்றும் இந்த ஆண்டு மலேசியா தனது இலக்கான 1 கோடியே 61 லட்சம் எண்ணிக்கையில் சுற்றுப் பயணிகளின் வருகையைத் தாண்டியுள்ளது என்றும் ஆண்டு இறுதிக்குள் அதனை 1 கோடியே 80 லட்சமாக உயர்த்த முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்த எண்ணிக்கை சுற்றுலாத் துறைக்கு புத்துயிர் அளிக்கும் அரசாங்கத்தின் அசைக்க முடியாத முயற்சிகளைக் காட்டுகின்றன என்று அவர் சொன்னார். இத்தகைய திட்டங்கள் அடுத்தடுத்து இங்கு நடைபெறுவதை நாங்கள் பெரிதும் எதிர்பார்க்கிறோம் என்று அவர் தமதுரையில் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டுப் பங்காளியாக பினாங்கு குளோபல் டூரிசம் பல்வேறு சுவாரஸ்யமான இடங்களை வழங்கும் ஒரு மேம்பாட்டு நிறுவனமாகும். தி டாப் பினாங்கு, கேர்னி பராகோன் மால், மலேசியா ஏர்லைன்ஸ் பெர்ஹாட், ஃபயர்ஃபிளை, விசா போன்றவை. டிசைன் வில்லேஜ், 1ஆவது அவென்யூ மால், கேர்னி பிளாஸா, சுங்கை வாங் பிளாஸா போன்ற பெரிய மால்களுக்கு ஈடாக, OZO ஜார்ஜ்டவுன், தி கிரானைட் சொகுசு ஹோட்டல், சன்வே லகூன், லோஸ்ட் வேர்ல்ட் ஆஃப் தம்புன், ஸ்ப்ரிட்சர் போன்றவையும் இத்திட்டத்தின் ஆதரவு நிறுவனங்களாக செயல்பட்டன.

மலேசியாவின் குறிப்பிட்ட பிரிவை முன்னிலைப்படுத்தும் முயற்சியாக, மலேசிய சுற்றுலாத்துறை இந்தியா, இந்தோனேசியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ் புருணை ஆகிய நாடுகளின் முன்னணி ஊடகப் பிரதிநிதிகளுக்காக பிரத்தியேகமாக நிகழ்வுக்குப் பிந்தைய சமூகமயமாக்கல் பயணத்தை ஏற்பாடு செய்தது. மலேசியன் ஏர்லைன்ஸ், ஃபயர் ஃபிளை ஏர்லைன் ஆகியவை அதற்கான ஆதரவாளர்களாக செயல்பட்டன.

இந்தப் பயணம் கோலாலம்பூர், பினாங்கு, பேராக், போர்ட்டிக்சன் ஆகிய இடங்களில் ஆழமான அனுபவத்தை வழங்கும் வகையில் அமைந்திருந்தது. பங்கேற்ற 52 குழுக்களில் மக்கள் ஓசை குழுவும் ஒன்று. அதில் ஃபிரி மலேசியா டுடே இணையதள ஊடகத்தைச் சேர்ந்த அலேனா நடியா, முகமட் ரபாணி ஜமின் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். ஒவ்வொரு குழுவிலும் குறைந்தது மூவர் இடம் பெற வேண்டும் என்பது விதியாகும்.இப்போட்டியில் வெற்றிபெற்ற குழுக்களுக்கு முறையே பொதுப் பிரிவில் 25 பரிசுகளும் ஊடகப் பிரிவில் 10 பரிசுகளும் வெளிநாட்டுப் பிரிவில் 5 பரிசுகளும் வழங்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here