“கழுதை” விமானம்.. பிரான்ஸில் சிக்கிய 300+ இந்தியர்களின் கதி என்ன

டெல்லி: பிரான்ஸ் நாட்டில் இந்தியர்களுடன் சிக்கிய விமானம் இப்போது மும்பைக்குத் திரும்பியுள்ள நிலையில், இது தொடர்பாக சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது. துபாயில் இருந்து நிகரகுவா நோக்கிச் சென்ற விமானத்தில் ஆள் கடத்தல் நடந்ததாக பிரான்ஸ் அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் 300+ இந்தியர்கள் இருந்த அந்த விமானத்தை பிரான்ஸ் அதிகாரிகள் தரையிறக்கினர்.

அங்கே விமானத்தை நிறுத்தி வைத்து சில நாட்கள் வரை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விமானத்தில் மொத்தம் 300 பேர் இருந்த நிலையில், அவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என்று கூறப்பட்டது.

பிரான்ஸில் பரபரப்பு: பாரீஸுக்கு அருகே வாட்ரி விமான நிலையத்தில் இந்த விமானம் சனிக்கிழமை தரையிறக்கப்பட்டது. ஆள் கடத்தல் புகாரைத் தொடர்ந்து, அந்த விமானத்தை அங்கேயே தடுத்து நிறுத்தி நான்கு நாட்கள் அதிகாரிகள் விசாரித்தனர். விசாரணைக்குப் பிறகு இப்போது அந்த ஏர்பஸ் ஏ340 விமானம் 276 பயணிகளுடன் மும்பையில் தரையிறங்கியுள்ளது. இன்று காலை 4 மணியளவில் அந்த விமானம் மும்பையில் தரையிறங்கியது.

பிரான்ஸ் நேரப்படி பிற்பகல் 2.30 மணியளவில் அந்த விமானம் வத்ரி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட நிலையில், இன்று அதிகாலை அது மும்பையில் தரையிறங்கியது. மொத்தம் 276 பயணிகளுடன் அந்த விமானம் மும்பைக்குத் திரும்பியது. அதே நேரம் விமானத்தில் இருந்த ஐந்து சிறார்கள் உட்பட 27 நபர்கள் பிரெஞ்சு மண்ணில் அகதிகளாக இருக்கப் புகலிடம் கோரியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

விசாரணை: கடந்த வெள்ளிக்கிழமை வத்ரி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கிய போது அதில் ​​303 பயணிகள் இருந்துள்ளனர். குறிப்பாக 11 சிறார்கள் தனியாக இருந்துள்ளனர். அவர்களுக்கு விசாரணை நடத்த அதிகாரிகள் முடிவு செய்த நிலையில், அவர்கள் அங்கேயே தங்கவும் வசதிகள் செய்து தரப்பட்டது. படுக்கைகள், கழிப்பறைகள் மற்றும் குளியலறைகள், உணவு உள்ளிட்டவை விமான நிலையத்திலேயே வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்த விமானம் துபாயில் இருந்து கிளம்பி மத்திய அமெரிக்க நாடான நிகரகுவாவுக்கு சென்று கொண்டு இருந்தது. இது ஏன் முக்கியம் என்றால் நிகரகுவா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்குச் சட்டவிரோதமாகச் செல்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2023ஆம் ஆண்டில் மட்டும் 96,917 இந்தியர்கள் இதுபோல மற்ற நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்றதாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். இது முந்தைய ஆண்டை விட 51.61 சதவீதம் அதிகமாகும்.

கழுதை விமானங்கள்: அப்படி சட்ட விரோதமாக நுழைய முயல்வோர் சிலர் பல முறைகளைப் பயன்படுத்துவார்கள். அதில் ஒன்று தான் இப்படி நீண்ட விமான ரூட்டை எடுப்பது. இதை ‘கழுதை விமானங்கள்’ அதாவது ஆங்கிலத்தில் ‘donkey flights’ என்று அழைப்பார்கள். சட்ட விரோதமாகப் புலம்பெயர விரும்புவோர் பயன்படுத்தும் இந்த முறை கவலைக்குரியது. விரும்பியபடி தங்கள் இடங்களுக்குச் செல்ல இவர்கள் விதிமுறைகள் குறைவாக இருக்கும் நாடுகளுக்கு முதலில் செல்வார்கள். பிறகு அங்கிருந்த அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளுக்குச் செல்வார்கள்.

பின்னணி: துபாயில் இருந்து கிளம்பிய இந்த சார்ட்டர் விமானம் எரிபொருளை நிரப்ப பாரீஸில் இருந்து 160 கிமீ தொலைவில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்கியது. அப்போது தான் ஆள் கடத்தல் நடந்ததாக அதிகாரிகளுக்குச் சந்தேகம் வந்த நிலையில், விமானத்தைத் தடுத்து நிறுத்தி அதிகாரிகள் விசாரணையில் இறங்கினர்.

இந்த வழக்கை இப்போது பிரான்சின் குற்றவியல் தடுப்புப் பிரிவான ஜுனால்கோ விசாரணை செய்து வருகிறது. பிரான்ஸ் நாட்டில் ஆள் கடத்தல் சட்டத்திற்கு எதிராகக் கடுமையான விதிமுறைகள் இருக்கிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here