தென்கொரியர்களிடையே திடீரென வைரலான பல்குத்தும் குச்சிகளை வறுத்தும், பொரித்தும் சாப்பிடும் உணவுப் பழக்கத்துக்கு எதிராக அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்கொரியர்களின் உணவுப் பழக்கங்கள் அலாதியானவை. விசித்திரமும் விபரீதமும் சேர்ந்தவை.
சீனா, தாய்லாந்து உள்ளிட்ட ஆசிய நாடுகளில் அதிகம் காணப்படும் உவ்வே உணவுகள் அனைத்தும் தென்கொரியாவிலும் கிடைக்கும். அண்மையில்கூட நாய்களை உணவாக்கும் போக்குக்கு எதிராக அரசு சட்டம் இயற்றும் அளவுக்கு நிலைமை மோசமானது.
இந்த வகையிலான அண்மை உணவுப் பழக்கம் ஒன்று, சமூக ஊடகங்களால் மக்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
அப்படி தென்கொரியர்கள் மத்தியில் தற்போது பிரபலமாகி வரும் உணவு டூத்பிக் எனப்படும் பல் குத்தும் குச்சி! சாப்பிட்டு முடித்ததும், பல்லிடுக்கில் சிக்கியதை வெளியில் எடுப்பதற்காக பயன்படுத்துவோமே, அந்த பல்குத்தும் குச்சிகளே தென்கொரியர்களின் தற்போதைய விருப்ப உணவாக மாறி இருக்கிறது.
தென்கொரியாவில் கிடைக்கும் பல்குத்தும் குச்சிகள் ஸ்டார்ச் தடவியும், பல வண்ணங்களை ஏற்றியும் விற்பனைக்கு வைத்திருப்பார்கள். அந்த வண்ணக்குச்சிகளை எவரோ ஒருவர் வறுத்து தின்பதாக சமூக ஊடகத்தில் புகைப்படம் மற்றும் வீடியோவுடன் பதிவிட, தீயென புதிய ட்ரெண்டிங் பற்றிக்கொண்டது.
ஆளாளுக்கு பல்குத்தும் குச்சிகளை வறுத்தும், பொரித்துமாக மசால் சேர்த்து நறுக்.. முறுக்.. என கடித்து சுவைக்கும் படங்களை பதிவேற்ற ஆரம்பித்துள்ளனர்.
தென்கொரியர்களின் இந்த போக்கை அரசாங்கம் கவலையோடு கவனித்து வருகிறது. புதிய ட்ரெண்டிங் எல்லை மீறியதில் உணவு மற்றும் மருந்து பாதுகாப்பு அமைச்சகம் அதிரடியாக தலையிட்டுள்ளது.
டூத்பிக் என்பது ஓர் உணவாக பரிந்துரை செய்ய உகந்தது அல்ல; அதில் வண்ணமேற்றவும், குச்சி உடையாதிருக்கவும் சேர்க்கப்பட்ட ரசாயனங்கள் உடலில் சேர்வது ஆரோக்கியத்தை பாதிக்கும். என்வே தயவுசெய்து டூத்பிக் ரகங்களை வறுத்து சாப்பிடுவதை நிறுத்தவும் என்று பகிரங்கமாக அரசு கேட்டுக்கொண்டது.
ஆனபோதும் மக்கள் கேட்பதாக தெரியவில்லை. தின்பண்ட தயாரிப்பு நிறுவனங்கள் டூத்பிக் தோற்றத்தில் இனிப்பு கார ரகங்களை தயாரித்து வெளியிட்டுப் பார்த்தன. ஆனபோதும் தென்கொரியர்கள் பல்குத்தும் குச்சிகளை வாங்கி அவற்றை வறுத்து தின்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். இதனால் பல்குத்தும் குச்சிகள் தயாரிப்பை முறைப்படுத்தவும், ஆரோக்கியத்துக்கு பாதகமின்றி அவற்றைத் தயாரிக்கவும் அரசு உத்தேசித்து வருகிறது.