பதற்றத்தின் உச்சத்தில் பாகிஸ்தான்.. இன்று நாடாளுமன்ற தேர்தல்! இரட்டை குண்டு வெடிப்பில் பலர் பலி

இஸ்லாமாபாத்: பல்வேறு அரசியல் நெருக்கடிகள், மோதல்கள், குண்டு வெடிப்புக்கு மத்தியில் இன்று பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

கடந்த 2022 ஆம் ஆண்டு பாகிஸ்தான் இம்ரான் கானின் ஆட்சி கலைக்கப்பட்டு ஷாபாஸ் ஷெரிப் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த ஆகஸ்டு மாதம் பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு அன்வாருல் ஹக் காதரை இடைக்கால பிரதமராக, முன்னாள் பிரதமர் ஷாபார் ஷெரிப், எதிர்க்கட்சித் தலைவர் ராஜா ரியாஸ் இணைந்து தேர்வு செய்தனர்.

மும்முனைப் போட்டி: இந்த நிலையில் இன்று பல்வேறு அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தற்போது சிறையில் அடைக்கப்பட்டு உள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இன்று காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணியளவில் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தானில் 12 கோடியே 85 லட்சத்து 85 ஆயிரத்து 760 பேர் வாக்களிக்க உள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்து இருக்கிறது. பொதுமக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிப்பதற்காக இன்று நாடு முழுவதும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

வாக்குப்பதிவும் முடிவுகளும்: முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அடுத்தடுத்த வழக்குகளில் கைது, அதன் தொடர்ச்சியாக வெடித்த வன்முறைகள் என பாகிஸ்தான் முழுவதும் அமைதியற்ற சூழல் நிலவி வரும் நிலையில் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக நாடு முழுவதும் காவல் துறையினர், ராணுவ வீரர்கள், சிறப்பு ஆயுதப்படை வீரர்கள் என சுமார் 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

பாகிஸ்தானில் தேர்தல் விதிகளின்படி தேர்தல் முடிந்து 14 நாட்களில் முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும். தேர்தல் சட்டத்தின் 98 வது பிரிவின் அடிப்படையில், பிப்ரவரி 8 ஆம் தேதியான இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வரும் பிப்ரவரி 22 ஆம் தேதிக்குள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரட்டை குண்டு வெடிப்பு: இந்த நிலையில் நேற்று பாகிஸ்தானில் இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. தேர்தலில் வாக்களிக்க வரும் மக்களை அச்சுறுத்தும் வகையில் பலுசிஸ்தான் மாகாணத்தில் 2 தேர்தல் அலுவலகங்களை குறிவைத்து தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன. பலுசிஸ்தான் மாகாணத்தின் பிஷன் நகரில் நடந்த சுயேட்சை வேட்பாளர் அஸ்பந்த்யார் காகரின் தேர்தல் அலுவலகத்துக்கு வெளியே முதல் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் கை கால்களை இழந்து படுகாயமடைந்து உள்ளார்கள்.

அடுத்த சில மணி நேரத்தில் பலுசிஸ்தானின் பஞ்கூர் நகரில் ஜம்மியத் உலமா இஸ்லாம் பாகிஸ்தான் கட்சி வேட்பாளர் கில்லா அப்துல்லா என்பவரின் தேர்தல் அலுவலகத்துக்கு அருகே 2 வெடி குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்தது. இந்த இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதல்களில் 30 பேர் கொல்லப்பட்டதாகவும், 42 பேர் படுகாயம் அடைந்ததாகவும் பலுசிஸ்தான் போலீசார் தெரிவித்து உள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here