சமூக ஊடகங்கள் மூலமாக வந்த வேலை வாய்ப்பு; மோசடியில் சிக்கி RM30,700 இழந்த வாலிபர்!

கோல திரெங்கானு:

சமூக ஊடகங்களில் வெளியாகும் கவர்ச்சிகர விளம்பரங்களை நம்பி, வேலை வாய்ப்பு மோசடியில் சிக்கிய ஒருவர் RM30,700 இழந்தார்.

பாதிக்கப்பட்ட  24 வயது சுயதொழில் செய்யும் இளைஞர் ஒருவர், இன்ஸ்டாகிராம் கணக்கு ஒன்றில் வெளியான பகுதி நேர வேலைவாய்ப்பு விளம்பரத்தால் ஈர்க்கப்பட்டு, வேலை மோசடியில் சிக்கினார்.

கடந்த பிப்ரவரி 26 அன்று இன்ஸ்டாகிராம் கணக்கு ஒன்றினூடாக பொருட்களை வாங்கும் மற்றும் விற்கும் வேலை அவருக்கு வழங்கப்பட்டது. ஆரம்பத்தில் சந்தேகமடைந்த பாதிக்கப்பட்டவர், இறுதியில் ஒவ்வொரு பணிக்கும் கணிசமான கமிஷன் வழங்கப்படும் என்ற வாக்குறுதியின் காரணமாக இந்த வேலை மோசடியில் விழுந்தார் என்று, திரெங்கானு காவல்துறைத் தலைவர் டத்தோ மஸ்லி மஸ்லான் கூறினார்.

“பாதிக்கப்பட்டவர் ஆறு பணிகளை முடிக்க முடிந்தது. உறுதியளித்தபடி முதல் இரண்டு பணிகளுக்கு அவருக்கு கமிஷன் வழங்கப்பட்டது. இருப்பினும், அடுத்தடுத்த பணிகளுக்கு, குறித்த இன்ஸ்டாகிராம் கணக்கு நிர்வாகி வாக்குறுதியளிக்கப்பட்ட RM30,700 கமிஷனை வழங்க மறுத்துவிட்டார்.

அதன் பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த இளைஞர் போலீசில் புகாரளித்தார்.

இந்நிலையில்,  கடந்த மார்ச் 3 முதல் மார்ச் 9 வரை திரெங்கானு காவல்துறைக்கு 100 மோசடி புகார்கள் வந்ததாக மஸ்லி கூறினார்.

எனவே மோசடி, தந்திரங்களுக்கு எதிராக எப்போதும் விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here