அதிமுக விஷயத்தில் அவசரப்பட்டுவிட்டாரா அண்ணாமலை?

சென்னை:

தனது தலைமையில் தமிழக பாஜக இமாலய வளர்ச்சியடைந்துள்ளது, தனது யாத்திரை தமிழ்நாட்டில் அரசியல் புரட்சியை உருவாக்கும் என்று பெரிதும் நம்பிய அண்ணாமலை அதிமுகவை உதாசீனப்படுத்தினார். அதன் பலனை பாஜக இப்போது அறுவடை செய்துவருகிறது. அதனால் தான் திமுகவை எதிர்க்க வலுவான கூட்டணியை கட்டமைக்க முடியாமல் திணறுகிறது அந்தக் கட்சி.

என்ன காரணத்தைச் சொல்லி பாஜக கூட்டணியை உதறுவது என எதிர்பார்த்துக் கொண்டிருந்தது அதிமுக. அதற்கு வாய்ப்பளிக்கும் விதமாக தொடர்ச்சியாக அதிமுக தலைவர்களை போட்டுத் தாக்கினார் அண்ணாமலை. அதையே உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டு, பாஜகவுடன் இனி ஒட்டும் இல்லை உறவும் இல்லை என ஒதுங்கிக் கொண்டது அதிமுக.

ஆனால், அப்போதும் கவலைப்படவில்லை அண்ணாமலை. பாஜக தேசிய தலைமை, “அதிமுகவை விடவேண்டாம். நாங்கள் சமாதானம் பேசி சேர்த்து வைக்கிறோம்” என்று பலமுறை சொல்லியும் அதற்கு உடன்படவில்லை அண்ணாமலை.

யாத்திரை முடிந்ததும் தமிழ்நாடே தன் பின்னால் நிற்கும் என பெரிதாக நம்பிய அண்ணாமலை, அதையே டெல்லி தலைமைக்கும் சொல்லிவிட்டார். அண்ணாமலை எதோ மேஜிக் செய்யப் போகிறார் என நினைத்து அமித் ஷாவே வந்து அவரது யாத்திரையை தொடங்கி வைத்தார். அண்ணாமலையும் 234 தொகுதிகளிலும் யாத்திரை மேற்கொண்டார். செல்லும் இடமெல்லாம் சிறப்பான கூட்டம் கூடியது. ஆனால் அவுட்புட் என்ன என்பதுதான் இப்போது கேள்வி.

திமுக ஆட்சி மீதான அதிருப்திகளை தங்களுக்குச் சாதகமாக அறுவடை செய்ய பாமக, தேமுதிக என வலுவான கூட்டணியை அமைக்க கணக்குப் போட்டார் இபிஎஸ். அந்தத் திட்டம் இருந்ததால் தான் டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டத்திலும் கலந்துகொண்டார். ஆனாலும், விடாப்பிடியாக நின்ற அண்ணாமலை, தனித்து நின்றாலும் நாம் ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கையை பாஜக தலைமைக்குக் கொடுத்தார். அந்த அளவுக்கு தன்மீது நம்பிக்கை வைத்தது அவரின் தன்னம்பிக்கையாக இருக்கலாம், ஆனால் தமிழ்நாட்டின் அரசியல் சூழலை அவர் உணர்ந்தாரா என்பதுதான் கேள்வி.

தமிழ்நாட்டில் புதிய அரசியல் தலைமைகள் எழும்போதெல்லாம் அதற்கு கணிசமான வரவேற்பு கிடைக்கும். மூப்பனார், ராமதாஸ், வைகோ, விஜயகாந்த், சீமான், தினகரன் போன்றோருக்கு தொடக்கத்தில் அப்படித்தான் வரவேற்பு இருந்தது. அதுபோலவே அண்ணாமலையின் பேச்சு சிலரை கவர்ந்தது. அதில் அவருக்கு ஓரளவும் கவனமும் கிடைத்தது. அதெல்லாம் பெரிய அலையாக மாறும் என இப்போது வரை நம்புகிறார் அண்ணாமலை.

பிரதமர் மோடியுடன் அண்ணாமலை
பிரதமர் மோடியுடன் அண்ணாமலை
அதிமுகவை ஒதுங்கவைத்த அண்ணாமலை ஓரளவு வலுவான கூட்டணியையாவது அமைத்திருக்க வேண்டும். பாமக அல்லது தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டுவந்திருக்க வேண்டும். இத்தனைக்கும் இந்த இரண்டு கட்சிகளும் பாஜக தேசிய தலைமையுடன் நல்ல நட்புறவில் இருக்கின்றன. தமிழக பாஜகவோடு இணைந்து செயல்படுவது கடினம் என்றே அவர்கள் அதிமுக பக்கம் போகிறார்கள்.

அதுபோல தொடக்கம் முதல் பாஜககாரராகவே மாறியிருந்த கிருஷ்ணசாமிகூட இப்போது அதிமுக கூட்டணிக்கு போய்விட்டார். கடைசியாக, பாஜக பக்கம் நிற்பது ‘சிங்கிள் சீட்’ கட்சிகள் தான். ஆம், கடந்த மக்களவைத் தேர்தலில் ஒரே ஒரு தொகுதியில் போட்டியிட்ட தமாகா, ஐஜேகே, புதிய நீதி கட்சி ஆகியவை மட்டுமே பாஜக கூட்டணியில் இப்போது உள்ளன. இவர்களுமே நேரடியாக தேசிய தலைமை மூலமாகவே கூட்டணிக்கு வந்தனர் என்பதுதான் உண்மை.

அதுபோல அதிமுக கூட்டணியில் தொகுதியே ஒதுக்க முன்வராத சரத்குமார், ஜான்பாண்டியன் போன்றோரும் பாஜக பக்கம் வந்துள்ளனர். ரஜினியை முதல்வராக்கியே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்த தமிழருவி மணியனும் இப்போது பாஜக பக்கம் நிற்கிறார். இதுதான் இப்போதுவரை தமிழகத்தில் பாஜக கூட்டணியின் பலம்.

“மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்பதுதான் எங்களது லட்சியம்” என்று சொல்லிவந்த ஓபிஎஸ் கூட அண்மைக்காலமாக அடக்கி வாசிக்கிறார். தாமரை சின்னத்தில் போட்டியிடச் சொல்வதால் அவரும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வருகின்றன. முதலில் ஆர்வமாக இருந்த டிடிவி தினகரனும் என்ன காரணத்தாலோ இன்னமும் கூட்டணியை இறுதி செய்யாமல் மவுனம் சாதிக்கிறார்.

பாஜக கூட்டணியை உதறித்தள்ளிய அதிமுக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம், ஃபார்வர்டு பிளாக் என சொல்லிக் கொள்ளும்படியான கூட்டணியை அமைக்கவுள்ளது. ஆனால், அதிமுகவை துரத்திய அண்ணாமலை எத்தகைய கூட்டணியை அமைத்துள்ளார் என பாஜகவுக்குள்ளேயே சிலர் விமர்சனம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

தமிழகத்தில் பாஜக கடந்த காலங்களை விட பேசுபொருளாகி யுள்ளது, அண்ணாமலையின் பேச்சுக்கள் ஒரு சாரரை சென்றடைகிறது என்பதெல்லாம் உண்மைதான். ஆனால், அது தேர்தல் வெற்றியாக மாறுமா என்பதுதான் கேள்வி. “முக்கிய தலைவர்கள் பாஜகவுக்கு வரப்போகிறார்கள், பெரிய புள்ளிகளை தூக்கப் போகிறோம்” என்றெல்லாம் அண்ணாமலையே வாய்விட்டு பலமுறை சொல்லி இருக்கிறார். ஆனால், அவர்களால் தூக்க முடிந்தது என்னவோ எம்ஜிஆர் காலத்தில் எம்எல்ஏ-க்களாக இருந்த 15 பேரை மட்டுமே.

தேசிய அளவில் பாஜக எப்படியும் வென்றுவிடும், மோடி மூன்றாவது முறையாக பிரதமராகி விடுவார் என்றே பெரும்பான்மையான கருத்துக்கணிப்புகள் சொல்லுகின்றன. ஆனால், அதற்கு உதவும் வகையில் அண்ணாமலை தமிழ்நாட்டில் என்ன சாதிக்கப்போகிறார் என்ற கேள்வி தொக்கி நிற்கிறது. இருந்தபோதும் பாஜக தேசிய தலைமை அண்ணாமலையை இன்னமும் மலைபோல நம்புகிறது. அந்த நம்பிக்கையை அவர் எந்தளவுக்கு காப்பாற்றிக் கொடுக்கப் போகிறார் என்பதில் தான் அண்ணாமலையின் அரசியல் எதிர்காலமும் அடங்கி இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here