எதிர்க்கட்சிகளுக்கு தீனி போடலாமா? ரவீந்திரன் நாயர் சாடல்

டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் தலைமையில் செயல்பட்ட மித்ரா சிறப்புப் பணிக்குழு  ‘கிளப்பில்’ தன் கூட்டத்தை நடத்தியது என்பதற்கு ஆதாரம் இருக்கிறதா? அந்தத் துணை அமைச்சரால் இதனை நிரூபிக்க முடியுமா?

நாடாளுமன்ற உறுப்பினர்கள் –சட்டமன்ற உறுப்பினர்கள், பிரதமர் இலாகா உயர் அதிகாரிகள், எம்ஏசிசி அதிகாரிகள் கலந்துகொண்ட இந்தக் கூட்டங்கள் அவர் குற்றம்சாட்டியது போல்  கிளப்பில் நடத்தப்பட்டது என்று நடப்புத் துணை அமைச்சர் ஒருவர் கூறுவதில் ஏதேனும் உண்மை இருக்கிறதா? நம்பத்தான் முடிகிறதா? என்று மித்ரா முன்னாள் தலைமை இயக்குநர் ரவீந்திரன் கேசவன் நாயர் கேள்வி எழுப்பினார்.

கிளப்பிலும் காப்பிக்கடையிலும் கூட்டம் நடத்தப்படுவதற்கு பிரதமர் இலாகா அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகள் அனுமதிப்பார்களா? இந்த உண்மை கூடவா இந்த துணை அமைச்சருக்குத் தெரியாது. பொய் உண்மையாகி விடாது என்பதாவது இவருக்குத் தெரியுமா?

2023இல் 7 அல்லது 8 கூட்டங்கள் நடைபெற்றன. இதற்கு முறையான மினிட்ஸ் (கூட்டக்குறிப்பு) கூட்டத்திற்கான அழைப்பு, வருகையாளர் பதிவு பட்டியல் அனைத்தும் முறையாக இருக்கிறது. அனைத்து கூட்டங்களும் மித்ரா தலைமையகத்தில்தான் நடத்தப்பட்டன.

முதல்கட்ட கூட்டங்களில் டத்தோ ரமணன், சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.யுனேஸ்வரன், கிள்ளான் நாடாளுன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ், செனட்டர் சி.சிவராஜ், பிரதமர் இலாகா அதிகாரிகள், எம்ஏசிசி அதிகாரிகள் ஆகியோருடன் தாமும் கலந்துகொண்டதாக அவர் சொன்னார்.

இரண்டாவது கட்டத்தில் டத்தோ டாக்டர் நெல்சன் ரெங்கநாதன், ஜெலுத்தோங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என்.ராயர் ஆகிய இருவரும் சிவராஜ், கணபதி ராவ் ஆகியோருக்கு பதிலாகா நியமனம் செய்யப்பட்டு கூட்டங்களில் கலந்து கொண்டனர்.

டத்தோ ரமணன் தலைமைத்துவத்தின் போது மித்ராவில் நிறைய ஊழலும் முறைகேடுகளும் நடந்திருப்பதாக இந்தத் துணை அமைச்சர் குற்றம்சாட்டியிருக்கிறார்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்குத் தெரியாத உண்மை இவருக்கு தெரிந்து விட்டதா? ஊழலும் முறைகேடுகளும் நடந்திருப்பது உண்மையெனில் தகுந்த ஆதாரங்களுடன் புகார் செய்ய வேண்டியதுதானே?

ஒரு துணை அமைச்சரே இந்தப் புகாரை செய்தால் கண்டிப்பாக விரைந்து விசாரணை நடத்தப்படும். இந்தத் துணை அமைச்சர் போலீசிலும் மலேசிய ஊழல்தடுப்பு ஆணையத்திலும் புகார் செய்ய வேண்டியதுதானே. இதை செய்யாமல் தொடர்ந்து இப்படியே அபாண்டங்களை சுமத்திக்கொண்டிருந்தால் மக்களுக்கு இந்த மடானி அரசாங்கம் மீது வெறுப்பு ஏற்படும். இது கிட்டத்தட்ட பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை கவிழ்க்கும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது என்று ரவீந்திரன் கூறினார்.

இந்த துணை அமைச்சர் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு பேசினால் அதில் ஓர் அர்த்தம் இருக்கும். ஆனால் அரசாங்கத்தில் இருந்து கொண்டே அரசாங்கத்தை அடிப்பது யாருக்கு குழிதோண்டும் முயற்சி என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இல்லாததை சொல்லி எதிர்க்கட்சியினருக்கு இவர் தீனி போட்டுக் கொண்டிருக்கிறார். இவரின் இந்த செயல் அவர் அங்கம் வகிக்கும் மடானி அரசாங்கத்திற்குத்தான் அசிங்கம்.

உலுசிலாங்கூரில், கோலகுபுபாரு சட்டமன்றத் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது.  இத்தொகுதியில் 18 விழுக்காட்டு இந்திய வாக்காளர்கள் உள்ளனர். இந்த, வாக்குகளை மடானி அரசாங்கம் இழக்க வேண்டுமா?

பக்காத்தான் ஹராப்பான் வெற்றெ பெற்ற இத்தொகுதியில் அக்கூட்டணியை தோற்கடிப்பதற்கு இந்த துணை அமைச்சர் தீனி போட்டுக கொண்டிருக்கிறார் என்றும் யோசிக்கவைக்கிறது.

இல்லாததை இருக்கிறது என்று விதண்டாவாதம் செய்வது எதிர்க்கட்சி ளுக்கு வாய்ப்புகளை தங்கத்தட்டில் வைத்துக்கொடுப்பதற்கும் சமமாகும்.

தற்போது தொழில்முனைவோர் மேம்பாடு, கூட்டுறவுத்துறை துணை அமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணனிடம் உள்ள தலைமைத்துவப் பண்பு இந்த துணை அமைச்சரிடம் அறவே இல்லை. தான் சொல்வது மட்டும்தான் சரி, மற்றவர்கள் சொல்வது முற்றிலும் பொய் என்ற அளவில் இவரது பேச்சுகளும் செயல்களும் தொடருமாயின் மடானி அரசாங்கத்திற்கு கேடாக முடியும் என்பதை ரவீந்திரன் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here