இஸ்ரேலிய ஆடவர் விவகாரம்: மலேசியத் தம்பதி தூக்கிலிடப்படலாம் என்கிறார் தேசிய போலீஸ்படை தலைவர்

கோலாலம்பூர்:

சமீபத்தில் இஸ்ரேலிய ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், தம்பதியர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவர்கள் மரணத் தண்டனையை சந்திக்க நேரிடும் என்று, தேசிய போலீஸ்படைத் தலைவர் டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் கூறினார்.

38 வயதான ஷலோம் அவிட்டான் என்ற அந்த இஸ்ரேலிய ஆடவரிடமிருந்து துப்பாக்கிகளும் தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

அந்த ஆயுங்களை அவர் குறித்த தம்பதியரிடம் 10,000 ரிங்கிட் கொடுத்து வாங்கியதாக நம்பப்படுகிறது. மேலும் அந்தத் துப்பாக்கிகள் தாய்லாந்திலிருந்து மலேசியாவுக்குள் கடத்தப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

ஆயுதங்கள் தொடர்பான சட்டத்தின்கீழ் அவிட்டான், தம்பதியர் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்படுகிறது என்று கூறிய IGP ரஸாருடின் கூறினார்.

அவிட்டான் ஏப்ரல் 7ஆம் தேதி வரையிலும், அந்தத் தம்பதியர் ஏப்ரல் 5ஆம் தேதி வரையிலும் போலீஸ் தடுப்புக் காவலில் வைக்கப்படுவார்கள் என்று அவர் கூறினார்.

அவிட்டானின் ஓட்டுநராகச் செயல்பட்ட ஆடவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆயுதங்கள் வைத்திருந்த குற்றத்துக்காக அவிட்டானுக்கும் அந்தத் தம்பதியருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுத் தூக்கிலிடப்படலாம் என்று அவர் கூறினார்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள அவிட்டானுக்கும் இஸ்‌ரேலிய சட்டவிரோத கும்பல் ஒன்றுக்கும் தொடர்பு இருப்பதாகத் தகவல் கிடைத்திருப்பதாகவும் அதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் ரஸாருதீன் இன்று கூறினார்.

அண்மையில் கைது செய்யப்பட்ட அவிட்டான் இஸ்‌ரேலிய சட்டவிரோத கும்பலைச் சேர்ந்தவர் என்றும், அவர் தமது எதிரி ஒருவரைக் கொல்ல அவர் திட்டமிட்டுக்கொண்டிருந்ததாகவும் டைம்ஸ் ஆஃப் இஸ்‌ரேல் நாளிதழ் மார்ச் 30ல் செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here