செர்டாங்:
இங்குள்ள ஶ்ரீ கெம்பாங்கான், ஜாலான் கேபி 4/9 கோத்தா பெர்டானாவில் உள்ள கால்வாயில் மீன்பிடிக்கச் சென்றபோது, திடீரென ஏற்பட்ட பலத்த நீரோட்டத்தில் சிக்கிய ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிருடன் மீட்கப்பட்டும், 10 வயது மகன் மற்றும் தாய் ஆகியோர் சடலமாக கண்டெடுக்கப்பட்டிருந்த நிலையில், தேடப்பட்டுவந்த நான்கு வயது பெண் குழந்தை சடலமாக கண்டெடுக்கப்பட்டது.
இன்று காலை 9 மணியளவில் புத்ரா பெர்டானாவாசிகளிடமிருந்து வந்த தகவலில் அடிப்படையில், 4 வயது பெண் குழந்தையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது என்று, சிலாங்கூர் தீயணைப்பு துறையின் (செயற்பாடு) துணை இயக்குநர் அஹ்மட் முக்லிஸ் மொக்தார் கூறினார்.
மேலும் சடலம் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக அவர் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பிறபகல் நடந்த இந்த சம்பவத்தில், தந்தை முதலில் தப்பித்துக் கரையேறினார், பின்னர் அவர்களது 9 வயது மகனும் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, அக்குடும்பத்தின் 10 வயது மூத்த மகன் அதே நாளில் இரவு 7 மணியளவில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டதாகவும், நேற்று மதியம் 12 மணியளவில் தாயாரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தீயணைப்புத்துறை முன்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்தது.
பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இந்தோனேசிய நாட்டினர் என்றும் தீயணைப்புத்துறை முன்னர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.





















