பிரமாண்டத்தை நோக்கி ‘SPUMI’: RM3 கோடி வருடாந்திர நிதி RM6 கோடியாக இரட்டிப்பு!- துணையமைச்சர் டத்தோ ரமணன் வரலாற்றுப் புதுமை

கோலாலம்பூர்:

தெக்குன் நிதியகத்தின் இந்திய வியாபாரிகளுக்கான ‘ஸ்புமி’ (SPUMI) பிரிவுக்கு ஒதுக்கப்பட்டு வந்துள்ள வெ.3 கோடி வருடாந்திர நிதியை, இனி வெ.6 கோடிக்கு இரட்டிப்பாக்குவதாக தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துறை துணையமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் அதிரடியாய் அறிவித்து வரலாற்றுப் புதுமை நிகழ்த்தியுள்ளார்.

வர்த்தகத் துறையில் அதிகமான இந்தியர்கள் கால்பதிப்பதை ஊக்குவிப்பதோடு, அவர்களை பொருளாதார ரீதியில் வலிமையானவர்களாகவும், சமுதாயத்தில் வெற்றிப் பெற்றவர்களாகவும் உருமாற்றும் வேட்கை கொண்டு, “பிரமாண்டத்தை நோக்கி ஸ்புமி” எனும் தாரக மந்திரம் தாங்கி இக்கடனுதவி திட்டம் தொடங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இதன் வழி, கிட்டத்தட்ட இரண்டாயிரம் இந்திய தொழில்முனைவோர் நேரடியாகப் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

மடானி பொருளாதார கட்டமைப்பின் வழி, இந்திய சமுதாயத்தின் பொருளாதார வளர்ச்சியை உறுதிச் செய்ய வேண்டும் என்கிற பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் இலக்கை எட்டும் வகையில், அவர் தலைமையிலான மடானி அரசாங்கத்தின் நன்முயற்சிதான் இத்திட்டம் என சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

இங்கு தலைநகரிலிலுள்ள தெக்குன் நேஷனல் தலைமையகத்தில், ‘பிரமாண்டத்தை நோக்கி ஸ்புமி’ எனும் கருப்பொருள் தாங்கிய இரட்டிப்பு நிதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

தங்களின் தற்கால வியாபாரத்தை அபிவிருத்திச் செய்ய திட்டம் கொண்டுள்ள அனைத்து இந்திய தொழில்முனைவோரும், இந்த தெக்குன் கடனுதவிக்கு விண்ணப்பம் செய்ய வரவேற்கப்படுகின்றனர்.

சிறிய அளவிலான குத்தகை, விவசாயம், அடிப்படை விவசாயம், மளிகைக் கடை, சேவைத் துறை, கைத்தொழில், இணையம் வழி வியாபாரம் போன்ற சிறு நடுத்தர வியாபாரங்களில் ஈடுபட்டுள்ள இந்தியர்கள் தங்களை உயர்த்திக் கொள்வதற்கு இதுவே மிகச் சிறந்த தருணம்.

‘பிரம்மாண்டத்தை நோக்கி ஸ்புமி’ எனும் இந்த திட்ட இலக்கின் ஊடே, இந்திய தொழில்முனைவோர் இன்னும் ஒரு படி உயர வேண்டும் என்பதை உறுதி செய்ய, உள்நாட்டு வருமான வரித் துறையில் (LHDN) பதிவு பெற்றுள்ளவர்களுக்கு இந்த வாய்ப்பு திறக்கப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

இத்திட்டத்தின் வழி, அனைத்துலகச் சந்தையிலும் வெற்றிகரமாக நுழையக் கூடிய திறமைசாலிகளை உருவாக்க முடியும் என தாம் பெரிதும் நம்புவதாக டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

இதற்கு முன்னதாக ‘ஸ்புமி’ வியாபாரக் கடனுதவியை பெற்று, வெற்றிகரகமாக வணிகம் செய்து வருகின்றவர்களுக்கு, இத்திட்டத்தின் வழி இன்னும் கூடுதல் வியாபாரக் கடனுதவி கிடைக்கப்பெறுவதற்கு முன்னுரிமை வழங்கப்படும். அதோடு, “பெரிதாய் வளர்வோம்” (Groom Big) எனும் திட்டத்தின் வழி, தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துறை அமைச்சின் கீழ் செயல்படுகின்ற இதர ஏஜென்சிகளின் அனுகூலங்களையும் பெறுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

முறையாகப் பதிவு பெற்ற தொழில்முனைவோர் அனைத்துலக சந்தையில் நுழைவதற்கும் இத்திட்டம் கைகொடுக்கும். தற்போதைய ‘ஸ்புமி’ தொழில்முனைவோர், உள்நாட்டு வருமான வரி துறையில் பதிவு பெற்றிருந்தால், ‘பிரம்மாண்டத்தை நோக்கி ஸ்புமி’ எனும் திட்டத்தின் வழி வெ.50 ஆயிரம் முதல் வெ.1 லட்சம் வரை கடனுதவி பெற முடியும் என்று விளக்கம் அளித்த டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன், எதிர்வரும் 15 ஏப்ரல் 2024 முதல் இப்புதிய வியாபாரக் கடனுதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்றார்.

இதனிடையே, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கூறி வருவது போல, யாரும் இங்கு விடுபட மாட்டார்கள் என்று சுட்டிக்காட்டிய அவர், இதுபோன்ற தரம் உயர்த்தப்பட்டுள்ள இப்புதிய திட்டத்தின் வழி, மக்களின் வாழ்வாதாரம் உயரும் என தாம் பெரிதும் நம்புவதாகச் சொன்னார்.

இந்திய சிறு நடுத்தர தொழில்முனைவோருக்கு தொடர்ந்து வியாபாரக் கடனுதவி வழங்கி, அவர்களை உயர்த்தும் கடப்பாட்டில் தெக்குன் நேஷனல் தொடர்ந்து கவனம் செலுத்தும் என்று டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

மற்றொரு நிலவரத்தில், மார்ச் 2024 வரை 28,808 இந்திய தொழில்முனைவோர் ‘ஸ்புமி’ வியாபாரக் கடனுதவியை பெற்றிருக்கின்றனர். அதன் மொத்த மதிப்பு வெ.450.5 மில்லியன் ஆகும். 2008ஆம் ஆண்டு ‘ஸ்புமி’ தொடங்கப்பட்டதிலிருந்து வெ.421.5 மில்லியன் மானியத்தை தெக்குன் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here