பிரதமரின் நேரடிப் பார்வையில் மித்ரா

(பி.ஆர். ராஜன்)

மலேசிய இந்தியர் உருமாற்றப் பிரிவு (மித்ரா) பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் நேரடிப் பார்வையில் செயல்படுகிறது.  பிரதமர் இலாகா கீழ் மித்ரா  வைக்கப்படவில்லை என்று நம்பத் தகுந்த வட்டாரம் ஒன்று தெரிவித்தது.

இந்திய சமுதாய நலத் திட்டங்களை உடனடியாக அமல்படுத்தும்படி டத்தோஸ்ரீ அன்வார் மித்ரா சிறப்புப் பணிக்குழு தலைவராக  நியமனம் செய்யப்பட்டிருக்கும்  பத்துத் தொகுதி பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர் ப. பிரபாகரனுக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் நம்பப்படுகிறது.

சிறப்புப் பணிக் குழுவின் செயலவை உறுப்பினர்களின் புதிய  நியமனங்களை பிறகு பார்த்துக் கொள்ளலாம். இப்போது உடனடியாக இந்திய சமுதாயத்திற்கான உதவித் திட்டங்களை அமல்படுத்தும்படி ஆலோசனை நல்கி இருப்பதாகவும்  சொல்லப்படுகிறது.

பிரபாகரன் நடப்பு செயல்முறைகளின் கீழ் பிரதமரிடம் அனைத்துத் திட்டங்களையும்  சமர்ப்பித்து அதற்குரிய ஆலோசனைகளைப் பெற்று அமல்படுத்தும் பணியில் முழு வீச்சில் களமிறங்கியிருக்கிறார்.

ஜோகூர், நெகிரி செம்பிலான், பினாங்கு ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மைக்ரோ, சிறு, நடுத்தர இந்தியத் தொழில்முனைவோர்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்தை மித்ரா அறிவித்திருக்கிறது.

அதேபோன்று தனியார், தமிழ்ப் பாலர் பள்ளிகளுக்கான  மித்ராவின் நிதி உதவியும்  விரைவில் வழங்கப்படும் என்று  பிரபாகரன் அண்மையில் அறிவித்திருக்கிறார்.

மேலும்,  சிறுநீரக சுத்திகரிப்பு சிகிச்சைப் பெற்றுவரும் பி40 பிரிவைச் சேர்ந்த இந்தியர்களுக்கான உதவித் தொகை, அரசாங்க – தனியார் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியை மேற்கொண்டிருக்கும்  பி40 பிரிவைச் சேர்ந்த  இந்திய மாணவர்களுக்கு ஒரே தடவை நிதி உதவித் தொகை தலா 2,000 ரிங்கிட்டும்  விரைவில் வழங்கப்படும் என்று  எதிர்பார்க்கப்படுவதாக  மித்ராவுக்கு நெருக்கமான அந்த நம்பத் தகுந்த வட்டாரம் தெரிவித்தது.

கடந்த 2024 பட்ஜெட்டில் மித்ராவுக்கு ஒதுக்கப்பட்ட 100 மில்லியன் (10 கோடி) ரிங்கிட் வரும் அக்டோபர் மாதத்திற்குள் முழுமையாக செலவிடப்பட வேண்டும்.  தவறினால்  மிச்சமிருக்கின்ற தொகையை நிதி அமைச்சிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும்.

இந்த சூழ்நிலை இவ்வாண்டு நடக்காது என்பதை பிரபாகரன் திட்டவட்டமாக  அறிவித்திருப்பது ஒரு புதிய நம்பிக்கையைத் தந்திருக்கிறது.

அரசாங்கம் ஒதுக்கியிருக்கின்ற இந்த நூறு மில்லியன் ரிங்கிட் சரியானவர்களை சென்றடைய வேண்டும். பி40 பிரிவைச் சேர்ந்த  ஏழை இந்தியர்களின் நல்வாழ்வுக்கு செலவிடப்பட வேண்டும் என்பது அரசாங்கத்தின் இலக்காகும்.

யாரையும் நம்பி இத்திட்டத்தை இன்னும் இழுத்தடிக்காமல்  உடனடியாக அந்த நிதி உரியவர்களைச் சென்றடைய வேண்டும் என்பது பிரதமர் மித்ரா சிறப்புப் பணிக்குழுத் தலைவர் பிரபாகரனுக்கு அறிவுறுத்தியிருப்பதாகவும்  தெரியவருகிறது.

அதே சமயத்தில் பி40 பிரிவைச் சேர்ந்த இந்திய இளைஞர்களுக்கு தொழில்பயிற்சிகள் அளித்து அவர்களின் வாழ்வாதாரத்தில் நம்பிக்கை ஒளியை ஏற்றி வைக்கும் திட்டங்களிலும் அக்கறை செலுத்த வேண்டும் என்று பிரபாகரன் கேட்டுக்கொள்ளப்பட்டிருப்பதாக  நம்பப்படுகிறது.

மொத்தத்தில் மித்ரா அதன் செயல் திட்டங்களில் அதீத கவனம் செலுத்தி வருவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பிரதமரின் நேரடிப் பார்வையில்  திட்டங்கள் அனைத்தும் அமல்படுத்தப்படுவதால்  தவறுகள் நடக்காது என்பதை நம்பலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here