வாழ்வதற்கு வழியா இல்லை, நாட்டிலே!

பி.ஆர்.ராஜன்

நாங்கள் வாழ்வதற்கு அரசாங்கம் உதவி செய்யவில்லை. அவர்கள் உதவி செய்யவில்லை,  இவர்கள் உதவி செய்யவில்லை என்ற கூப்பாட்டைத் தான் நாம் அடிக்கடி கேட்டு வருகிறோம்.

 சொந்த முயற்சியில் ஏதாவது செய்து வாழ்க்கையை நடத்தலாம் என்ற எண்ணம் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களுக்கே ஏற்படுகிறது. குறை சொல்லியே வாழ்க்கையை நகர்த்துபவர்களுக்கு மத்தியில் கௌரவமாக ஏதாவது செய்து வாழ்வோம் என்ற எண்ணத்தில் வாழ்ந்து காட்டுபவர்களும் இருக்கவே செய்கின்றனர்.

ஓர் இளைஞர்… ஒவ்வோர் இரவும் கிட்டத்தட்ட 250 கிலோ மீட்டர் சென்று திரும்பிக் கொண்டிருக்கிறார். இவர் இப்படி செய்வதற்கு என்ன காரணம்?

தாய், தந்தையரை பார்த்துக்கொள்ள வேண்டும். உடன்பிறப்புகளை படிக்க வைக்க வேண்டும். இதற்கு வருமானம் தேவை. இந்த வருமானத்தை நியாயமான முறையில் சம்பாதிப்பதற்கு எத்தனை கிலோ மீட்டர் தூரம் சென்றாலும் அதுவும் ஒரு மகிழ்ச்சியே என்று வாழ்ந்து காட்டிக்கொண்டிருக்கிறார் 26 வயது இளைஞர் முகமட் நகியுடின் அப்துல் ஹலிம்.

இவருடைய இந்த போராட்ட குணம் மெய்சிலிர்க்க வைக்கிறது. இவர் எந்த இனத்தவர் என்பது முக்கியமல்ல. பெற்ற தாய், தந்தையரையும் உடன் பிறப்புகளையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்ற அவரின் உயரிய நோக்கம்,  பண்பு, விடாமுயற்சி போன்றவை நம் இதயத்தை தொடுவதாக உள்ளது.

பத்து பகாட்டிலிருந்து ஜோகூர் பாருவுக்கும் ஜோகூர் பாருவிலிருந்து பத்து பகாட்டிற்கும் இடையே ஒவ்வொரு நாள் இரவும் கிட்டத்தட்ட 250 கிலோ மீட்டர் சென்று திரும்பிக் கொண்டிருக்கும் இவர், வருமானத்திற்கு என்னதான் செய்கிறார்?

சாலைகளில் மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கு ஏற்படும் இன்னல்களை போக்கும் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார். ஒரு மெக்கானிக்கான இவர், மோட்டார் சைக்கிள் டயர் பஞ்சர் ஒட்டுவது, பழுதடையும் மோட்டார்  சைக்கிள்களை பழுது பார்ப்பது போன்ற வேலையை இவர் செய்து வருகிறார்.

இவருக்கு எப்படி இந்த சிந்தனை உதித்தது? சிங்கப்பூரில் வேலை தேடும் முயற்சியில் தோல்வி கண்ட இவர், ஜோகூர் பாருவிலிருந்து சிங்கப்பூருக்கும் சிங்கப்பூரிலிருந்து  ஜோகூர் பாருவிற்கும் அன்றாடம் வேலைக்கு சென்று திரும்பும் மோடடார் சைக்கிளோட்டிகள் இவரின் இந்த சிந்தனைக்கு பின்னணியில் இருக்கின்றனர்.

இவ்வாறு வீடு திரும்பும் மோட்டார் சைக்கிளோட்டிகள் டயர் பஞ்சராகி, பழுதாகி விட்ட மோட்டார் சைக்கிள்களை நீண்ட தூரம் தள்ளிக் கொண்டு வருவதை பார்த்த இவர், நம்மிடம் ஒரு கைத்தொழில் இருக்கிறது அதை ஏன் இவர்களுக்கு உதவி அதன் மூலம் பணம் சம்பாதிக்கக்கூடாது என்ற எண்ணம் இவரை கிளர்ந்தெழ வைத்தது.

நோன்பு தொடங்குவதற்கு ஒரு வாரம் இருக்கும்போது இந்த உன்னத பணியை அவர் செய்யத் தொடங்கினார். இவர் ஒவ்வொரு நாளும் பத்து பகாட்டிலிருந்து ஜோகூர் பாருவிற்கு சென்று திரும்புவதை முதலில் பலர் நம்பவில்லை. ஆனால் அவரின் விடாமுயற்சி இன்று அசுர வெற்றியை தந்திருக்கிறது.

பாராட்டுகள் குவிகின்றன. கை நிறைய வருமானமும் கிடைக்கிறது. மாலை 6 மணியளவில் பத்து பகாட்டிலிருந்து புறப்படும் இவர் இரவு 8 மணியளவில் ஜோகூர் பாருவை சென்றடைகிறார். அதிகாலையில் வீடு திரும்புகிறார்.

இந்த நீண்ட பயணம் தமக்கு உடல் வலியையும் அசதியையும் தந்தாலும் துன்பத்தில் இருக்கும் மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கு சேவை செய்து அவர்களின்  முகத்தில்  ஒரு சிரிப்பை பார்த்த பின் அனைத்தும் பனிபோல் மறைந்து போகிறது. பலருக்கு தன்னால் உதவ முடிகிறது என்ற மன திருப்தியில் திளைத்திருக்கிறார்.

முகமட் நகியுடின் தன்னுடைய இந்த சேவையை ஃபேஸ்புக், டிக்டாக் ஆகிய சமூக வலைத்தளங்களில் விளம்பரப்படுத்தியிருக்கிறார். இதற்கு அமோக ஆதரவு கிடைத்து வருகிறது.

இவருக்கு உதவியாக ஆப்பெங் என்றழைக்கப்படும் 29 வயது நண்பர் முகமட் அஸாரி முஸ்தபா இருக்கிறார். இவரின் தன்னலமற்ற சேவையும் அர்ப்பணிப்பும் சிங்கப்பூர் வரை பிரபலமாகி இருக்கிறது.

முகமட் நகியுடின் ஏற்கெனவே கோலாலம்பூரில் உள்ள தொழிற்சாலையில் 9 மாதங்கள் வேலை செய்திருக்கிறார். நிர்வாகம் சம்பளம் கொடுக்காததால் சொந்த கம்பத்திற்கே திரும்பி இருக்கிறார்.

தன்னுடைய அதிர்ஷ்டத்தை அவர் நம்பவில்லை. தன்னுடைய கைத்திறனை நம்பினார். இன்று மகிழ்ச்சியோடு தனது தாய், தந்தை, உடன்பிறப்புகளோடு வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here