புவனேஸ்வர்:
இந்தியாவின் கிழக்கு மாநிலங்களான பீகார், ஒடிசா ஆகியவற்றில் நேற்று வியாழக்கிழமை (மே 30) வெப்பத் தாக்கத்தால் 15 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒடிசா மாநிலத்தின் ரூர்கேலா வட்டார அரசு மருத்துவமனைகளில் 10 பேர் மாண்டதாக அதிகாரிகள் ராய்ட்டர்ஸ் நிறுவனத்திடம் கூறினர்.

பீகாரின் ஔரங்காபாத் நகரில் ஐவர் வெப்பத் தாக்கத்தால் மாண்டனர். மேலும் ஏழு பேர் மருத்துவமனை செல்லும் வழியில் மாண்டதாகவும் இருப்பினும் அவர்கள் உயிரிழந்ததற்கான காரணத்தை உடற்கூராய்விற்குப் பிறகே உறுதிசெய்ய முடியுமென்றும் அதிகாரிகள் கூறினர்.
வரும் சனிக்கிழமை வரை வெப்பத் தாக்கம் தொடரக்கூடுமென்று எதிர்பார்க்கப்படுவதாக அவர்கள் கூறினர்.
தலைநகர் புதுடெல்லியில் வெப்பநிலை இந்த வாரம் 52.9 டிகிரி செல்சியசாகப் பதிவானதாகக் கூறப்பட்டது.
வடமேற்கு, மத்தியப் பகுதிகளில் அடுத்த சில நாள்களில் வெப்பநிலை குறையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் கிழக்குப் பகுதியில் மேலும் இரு நாள்கள் தொடர்ந்து அதிகமாகவே இருக்குமென்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
வழக்கத்தைவிட 4.5 டிகிரி செல்சியஸ் முதல் 6.4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரித்தால் வெப்ப அலை வீசுவதாக இந்திய வானிலை நிலையம் அறிவிக்கும்.
ஒடிசா அரசாங்கம் அதன் ஊழியர்களுக்குக் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதித்துள்ளது.




















