புதிய கல்வித்திட்ட உருவாக்கம் குறித்து கருத்து – பரிந்துரை சேகரிப்பு

தி. மோகன்

கோலாலம்பூர்:

ப்போதைய தேவைகளைப் பூர்த்திசெய்யக் கூடிய புதிய கல்வித் திட்ட உருவாக்கத் தரம் உயர்த்துதல் பரிந்துரை, கருத்துகளைத் திரட்ட கல்வியமைச்சு தேசிய கல்வி எதிர்கால கலந்துரையாடலைத் தொடர்ந்து நடத்திவருவதாக அத்துறை துணையமைச்சர் ஓங் கா வோ கருத்துரைத்தார்.

நேற்று முன்தினம் தலைநகரில் நடைபெற்ற முதலாவது கலந்துரையாடலில் நூற்றுக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். கல்வி அமைச்சைப் பிரதிநிதித்து துணை அமைச்சரோடு மலேசிய கல்வி இலாகா தலைமை இயக்குநர் ஹாஜி அஸ்மான் ஹாஜி அட்னான், மலேசிய புத்ரா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் நோர் அஸ்மி அப்துல் அஸிஸ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இந்நிலையில் 2013 – 2025 மலேசிய கல்வி மேம்பாட்டுத் திட்டம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதன் அடிப்படையில் அறிவை வளப்படுத்தக்கூடிய கல்வி மீதான கவனத்தைச் செலுத்த மலேசிய கல்வி செயல்பாடு தற்போது எதிர்நோக்கிவரும் சவால்களை அடையாளம் காண இந்தக் கலந்துரையாடல் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

அதுமட்டுமல்லாது எதிர்காலத்தில் நாட்டின் மேம்பாட்டிற்கு ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்கக்கூடிய மனித அம்சங்களையும் இது வலியுறுத்தும் என்று துணையமைச்சர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் இந்தக் கலந்துரையாடல் வாயிலாக 724 பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அதிலும் கல்விக் கொள்கை தொடர்பாக 175 பரிந்துரைகள் பெறப்பட்டுள்ளன.

இது தவிர மாணவர் சார்ந்த விவகாரங்கள் குறித்து 167 பரிந்துரைகளும் ஆசிரியர் சார்ந்த விவகாரங்கள் தொடர்பில் 126 பரிந்துரைகளும் பெறப்பட்டுள்ளன. இதில் பல பரிந்துரைகள் ஏற்கெனவே அமைச்சு தரப்பின் அமலாக்கத்தில் இடம்பெற்றுள்ளன. எனவே அவற்றை நாங்கள் மேலும் வலுப்படுத்துவோம். அதேசமயம் புதிய பரிந்துரைகளைப் பொறுத்தவரையில் அமைச்சு கருத்தில்கொண்டு அதற்கு ஏற்ற பரிசீலனையைச் செய்வோம் என்றார் அவர்.

இதனிடையே இம்மாதம் தொடங்கி ஜூலை மாதம் வரையில் மேற்கொள்ளப்படவிருக்கும் 5 நிலையிலான கலந்துரையாடல்களில் இதுவும் ஒன்று. இதனை அடுத்து ஆகஸ்டு மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரையில் நிபுணத்துவ தரப்பினருடனான 5 கலந்துரையாடல்கள், சந்திப்புக்கூட்டங்களும் இடம்பெறும். இந்தப் புதிய கல்வி செயல்பாடு முன்னெடுப்பானது அறிவார்ந்த, திறன்மிக்க, எதிர்கால வேலை வாய்ப்புகளைப் பூர்த்திசெய்யக்கூடிய குணாதிசயங்களைக் கொண்ட மனித ஆற்றலை உருவாக்கும் என எதிர்பார்ப்பதாகவும் துணையமைச்சர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here