கொசுக்களை ஒழிக்கப் புதிய கருவி

பெங்களூரு: கர்நாடகாவில் அதிகரித்து வரும் டெங்கி, மலேரியா போன்ற நோய் பரவலுக்குக் காரணமான கொசுக்களை ஒழிக்க, ‘ஓவி டிராப்’ என்ற கருவியை, வீடுதோறும் வைக்கும் திட்டத்தை பெங்களூரு மாநகராட்சியுடன் இணைந்து அம்மாநிலச் சுகாதாரத்துறை திங்கட்கிழமை (ஆகஸ்ட் 27) தொடங்கியது.

பெங்களூரு உட்பட கர்நாடகாவில் டெங்கி, மலேரியா போன்ற நோயால் பாதிப்படைவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பெங்களூரில் டெங்கியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. எனவே, இவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கர்நாடக சுகாதாரத் துறையும் பெங்களூரு மாநகராட்சியும் இணைந்து ‘ஓவி டிராப்’ எனும் கருவியை நிறுவத் திட்டமிட்டது.

பெங்களூரு மாகடி சாலையில் உள்ள கோபால்பூரில், ‘ஓவி டிராப்’ கருவியை வைக்கும் திட்டத்தை, கர்நாடக சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தொடங்கி வைத்தார். கொசுக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் கோபால்பூரில் 120 ஓவி டிராப் சாதனங்கள் சோதனை முறையில் பொருத்தியுள்ளோம். இதுபோன்று மும்பை தாராவி பகுதியில் சோதனை முறையில் வைக்கப்பட்டது.
இதன்மூலம், நோய் பாதிப்புகள் குறையும் என நாங்கள் நம்புகிறோம் என இத்திட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசும்போது திரு தினேஷ் குண்டுராவ் கூறினார். இந்தச் சோதனை திட்டம் வெற்றி பெற்றால், கர்நாடக மாநிலம் முழுவதும் இது விரிவுபடுத்தப்படும் என்றார் அவர்.

‘ஓவி டிராப்’ கருவி என்றால் என்ன?

சிறிய வட்ட வடிவமான பாத்திரத்தில், தண்ணீர் ஊற்றியபின், அதில் ரசாயனம் கலக்க வேண்டும். இதனால் கவரப்படும் கொசுக்கள், தண்ணீரில் விழுந்து உயிரிழக்கும். இந்த சாதனத்தில் 30 நாள்களுக்கு ஒரு முறை தண்ணீர் ஊற்ற வேண்டும். இதனால் 60 விழுக்காடு கொசுக்களைக் கட்டுப்படுத்த முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here