* தெக்குன் – ஸ்பூமி கோஸ்பிக்: 30 மில்லியன் ரிங்கிட் * பெண்: 50 மில்லியன் ரிங்கிட் * பிரிஃவ்-ஐ: 50 மில்லியன் ரிங்கிட்
இந்திய சிறுதொழில்முனைவோருக்கு எஸ்எம்இ கார்ப். மலேசியா மூலமாக தொழில் முனைவோர் கூட்டுறவுக்கழக மேம்பாட்டு அமைச்சு 6 மில்லியன் ரிங்கிட் கூடுதல் நிதியை ஒதுக்கி இருக்கிறது என்று அதன் துணை அமைச்சர் டத்தோ ஆர். ரமணன் நேற்றுக் கூறினார்.
ஐ-பிஏபி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் சிறுதொழில் திட்டங்களுக்காக இந்தக் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது என்றார் அவர். இந்தியத் தொழில் முனைவோர்களின் ஆற்றலை மேம்படுத்தும் வகையில் ஒரு லட்சம் ரிங்கிட் வரை மானியம் வடிவில் இந்த கூடுதல் நிதி உதவி வழங்கப்படுகிறது என்று அவர் மேலும் சொன்னார்.
உற்பத்தித் திறனை மேம்படுத்தவும் தரத்தை உயர்த்தவும் உபகரணங்களை வாங்குவதற்கும் இந்த நிதியைப் பயன்படுத்த முடியும் என்று அவர் சொன்னார். நேற்று இந்த உதவி நிதியைப் பெற்றவர் நடத்தி வரும் நிறுவனத்திற்கு வருகை மேற்கொண்ட பிறகு அவர் இதனைத் தெரிவித்தார். ஐ-பிஏபி மூலம் இந்திய சிறு தொழில்முனைவோருக்கு இந்தச் சிறப்பு ஒதுக்கீடு வழங்கப்டுவதானது காலத்தேவைக்கு ஏற்புடைய நடவடிக்கையாக அமைகிறது. மடானி பொருளாதார கட்டமைப்பின் இலக்கை அடைவதற்கும் இந்த நடவடிக்கை அமைகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மலேசிய மடானி இலக்கிற்கு ஏற்ப இந்திய சமூகத்தின் முன்னேற்றத்திற்குப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உரிய முக்கியத்துவத்திற்கு ஏற்ப இந்தக் கூடுதல் ஒதுக்கீடு அமைகிறது என்றார் அவர்.
இதற்கிடையே 2024இல் இதுவரை பிஏபி திட்டத்தின் கீழ் 197 நிறுவனங்களுக்கு 24.12 மில்லியன் ரிங்கிட் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது என்று எஸ்எம்இ கார்ப் மலேசியா தலைமை நிர்வாக அதிகாரி ரிஸால் பின் டத்தோ நைனி கூறினார்.
இதில் 12 இந்திய நிறுவனங்களுக்கு 1.07 மில்லியன் ரிங்கிட் மானியம் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது என்று அவர் மேலும் சொன்னார்.
டத்தோ ரமணன் தொழில்முனைவோர் கூட்டுறவுக்கழகத் துணை அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு இந்திய சமூகத்திற்காக நிறைய திட்டங்களைக் கொண்டு வந்ததோடு அதற்காக மடானி அரசாங்கமும் நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது.
குறிப்பாக தெக்குன் – ஸ்பூமி கோஸ்பிக் திட்டத்திற்கு 30 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடும் பெண் திட்டத்திற்கு 50 மில்லியன் ரிங்கிட்டும் பிரிஃவ்-ஐ திட்டத்திற்கு 50 மில்லியன் ரிங்கிட்டும் ஒதுக்கீடு கிடைத்திருக்கிறது.
இந்திய தொழில்முனைவோர் பயன்பெறும் வகையில் இத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.